மூன்று வியப்புகள்!!!
சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்.,
சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!
உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;
உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!
சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;
நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;
வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;
மசியா மனிதரை மசிய வைப்பார்!
திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்
குட்டினால் அனுபவம்! இவைகளின்
சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்
சொந்தக்காலில் நின்ற செயலாளர்!
மடிக் கணினி வரு முன்னரே
மடியில் வைத்துத் தட்டச்சில்,
பணி ஆணைகள் பல அச்சிட்டு,
படித்தோர்க்குப் பலன் தந்தார்.
ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்
ஆளுமையில் அடங்கும் துறைகள்;
கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய்
மாட்டிக் கொண்டு குட்டுப் படும்!
வாசகமொன்று இவர் எழுதிடின்,
வக்கணை பேச யாருளர்? பிறர்
வாசகத்தை இவர் திருத்திடின்,
வாய்திறந்து மறுப்போர் யாருளர்?
அலுவலகங்களுக்கு ஓர் உடை,
விழாக்களுக்கு என்று ஓர்உடை,
பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை
என்ற வழக்கம் உடையாரல்லர்!
யாவும் உடையார்க்கு உயருடையா?
பயமே அறியார்க்குப் படை பலமா?
தளரா நடையே போதும் அவருக்கு,
அடையா இலக்கை அடைவதற்கு!
நீட்டோலை வாசியா நின்றவரை,
ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்!
படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,
பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.
பட்டறிவில்லா எம் போன்றோரை,
பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!
அறிவுரைகளால் அதட்டி என்னை
முது கலையை அடைய வைத்தார்!
ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;
ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்
பதவி நெருங்கும் வரை அவர்
அன்பில் எம் முயர்வு இருந்தது!
பரவட்டும் தாளாளர் புகழொளி
பாரெல்லாம்! வல்ல இறைவன்,
புவனப் பதவி பல தந்தவருக்கு
சுவனப் பதவியை வழங்கட்டும்!
A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)
முன்னாள் மாணவர், முது கலைப்
பட்டதாரி ஆசிரியர்,
காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி
மறக்க முடியா மனிதர்
‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது!
‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன்.
“The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த மாமனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக் கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ் வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார்!
60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது!
அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் மசூதிகளில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடு நிலைப் பள்ளி தொடங்கப் பட்டது. காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடு நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது! S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.
கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன் முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார்!
ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்
----