ஏன் இந்தத் தொழிலாளர் பஞ்சம்?

இன்று உழைப்புக்கும் உழைப்பாளிகளுக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அன்றாட வேலைகளை முடிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. அது எந்த வேலையாக இருந்தாலும் சரி. அதற்கான காரணங்களை ஆராய்வோம்.
இன்று இந்தியாவில் கல்வி கட்டாயக் கடமை ஆகிவிட்டது. கல்வியின் அவசியம் பல ஆண்டுகளுக்கு முன்பே உணரப்பட்டுவிட்டது. அரசு, குறிப்பாகத் தமிழ்நாடு அரசு கல்வியில்தான் அக்கறை செலுத்தியது. கர்ம வீரர் காமராஜ் காலத்தில் இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. இலவசப் பகல் உணவும் வழங்கப்பட்டது.
எல்லா இனத்தவரும் கல்வி கற்கத் துவங்கினார்கள். கட்டிடத் தொழிலாளர் முதலாக எல்லாத் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளும் கல்வி கற்க முன் வந்தனர். இந்த வேகத்தால் சாணக்கியர் ராஜாஜியின் குலக் கல்வித் திட்டமும் தோல்வியைத் தழுவியது.
கல்வி கற்பதற்கே நேரம் போதாததால், தொழிலாளி வீட்டுப் பிள்ளைகளில் சிலர் தங்கள் தொழிலைக் கற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் தங்கள் மேற் படிப்பை முடித்துக் கொண்டு, வேறு வேலைகளைத் தேர்ந் தெடுத்தனர். எல்லா சமூகத்தினருக்கும் அயல்நாட்டு மோகம் எழுந்தது. தொழில் வர்க்கம் சும்மா இருக்குமா? அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் இருந்தது. அங்கு தன் பெற்றோரைவிட பல மடங்கு ஈட்டுவதற்குரிய வாய்ப்பை உணர்ந்தனர். எனவே வெளிநாடு சென்றனர்.
பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் வெளிநாட்டில் இருந்ததால் தொழிலாளர்களுக்கு வருவாய் தேடவேண்டும் என்ற முனைப்பு குறைந்தது. அவர்களின் வாழ்வாதாரங்களை அரசே தர முன் வந்தது. உணவுத் தேவையின் அடிப்படையாகவுள்ள அரிசி இலவசமாகக் கிடைத்து விடுகிறது. குழந்தைகளுக்குக் கல்வியோடு உணவு, புத்தகங்கள், சீருடை இலவசம்.
தொலைக் காட்சிப் பெட்டி இலவசம்; அது இயங்கும் மின்சாரம் இலவசம். வீட்டுக்கு வருகிற தொழிலாளி தொலைகாட்சி முன்னால் அமர்ந்து கொண்டு வருவாயைத் தொலைத்து விட்டு, பின்னால் தங்கிவிடுகிறான். தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டதர்க்கு இவைதான் கரணம்.
இந்நிலை மாற வேண்டுமானால் அரசு இலவசங்களை ரத்து செய்யவேண்டும். தொழில் செய்ய மறுப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழில் என்பது எல்லாருக்கும் பொதுதான். தொழில்களை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஈடுபட்டு பொருள் ஈட்ட முன் வரவேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செயய முடியும். அயல் நாடுகளில் எந்தத் தொழிலையும் செய்ய ஆயத்தமாக இருக்கும்போது, உள்நாட்டில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
மாணவர்கள் தொழில் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். தொழில் படிப்பு என்றும் கை கொடுக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும். தொழில் வளர்வதற்கும் மக்களின் தேவைகள் நிறைவேறுவதற்கும் பொருளாதாரம் மேம்படுவதற்கும் தனி மனிதன் முதல் சமூகம் வரை அயராது பாடுபடவேண்டும்.
உழைப்பு உடல் நலத்தைத் தரும். வருவாயைத் தரும். மன மகிழ்வைத் தரும். நிம்மதியான வாழ்க்கை அமையும். நம் உயிர் காக்கும் உழைப்புக்கு உயிர் கொடுபோம்.
வாவன்னா

தனியார், பேராசை தணியார்!

கல்வி வாணிபப் பொருளாகிவிட்டது. எந்த அளவுக்கு அரசு கல்வியை இலவசப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு நேர் மாறாக தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை விலை உயர்ந்த வாணிபப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
தனியார் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. ஐந்தாவது வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. போதாதற்கு இந்தி வேறு கற்றுத் தருகிறார்களாம். எல்லாம் பணம் பண்ணத்தான். இவற்றில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் வரிசையில் நிற்கின்றனர். பாவம், இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது ஆசிரியைகளே தமிழ்வழி கல்வி கற்றவர்கள் என்று.
நகரங்களில் பெற்றோர் படித்தோராக இருப்பதால் பள்ளிகளையும் கவனிக்கிறார்கள்; பிள்ளைகளையும் கண்காணிக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு சம்பளம் பள்ளியே கொடுப்பதால் மாணவர்களிடமிருது கட்டணம் வசூலித்துத்தான் ஆகவேண்டும். இருந்தாலும் அதற்ககு ஒரு எல்லை உண்டு அல்லவா?
அந்த எல்லையை நிர்ணயிக்கத்தான் கருணாநிதி அரசு கோவிந்தராஜன் குழுவை அமைத்தது. அக்குழு நிர்ணயித்த கட்டணத்தில் திருப்தி இல்லை என்று மேல் முறையீடு செய்தன. முறையீட்டை விசாரிக்குமுன் கோவிந்தராஜன் பதவியைத் துறந்தார். அரசு ரவிராஜ பாண்டியன் குழுவை அமைத்தது.
ரவிராஜ பாண்டியன் குழு அறிவித்த கட்டணம் பெற்றோர், பள்ளி இவற்றின் எதிர்ப்பைச் சந்தித்தது. தனியார் பள்ளிகளுக்கு, பெற்றோரைப் பாதிக்கும் அளவுக்கு இக்குழு சலுகை செய்துள்ளது என்று பரவலாகப் பேசப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சிதான். இருந்தாலும் நீதி மன்றத்தை அணுகி இருக்கிறார்கள். பலித்தவரை பார்க்கிறார்கள். குழு நிர்ணயித்ததைவிட அதிகமாக வாங்குகிறார்கள் என்றும் பேசப்படுகிறடுது.
நகரங்களில் உள்ள ஒருசில பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் தரமான கல்வி தந்து, பிள்ளைகளை ஒளிமயமான நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பது ஒரு மாயை. இந்த மாயை கடை நிலை ஊழியனையும் மாய்ப்பதுதான் இன்றைய நிலை.
தனியார் பள்ளிகளிலிருந்து முறையான தகுதி உள்ள ஆசிரியர்கள் கூட அதிக ஊதியம் நாடி அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விடுகிறார்கள். அரசுப் பள்ளிகள் அல்லது உதவி பெரும் தனியார் உயர் நிலைப் பள்ளிகள் முன்புபோல் இப்போது இல்லை. அவற்றில் படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முழுத்தகுதி பெற்றவர்களாக இருப்பதுடன், அரசு அவர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகளும் தருகிறது.
தனியார் பள்ளிகளில் கட்டணம் தவிர புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை, பெல்ட், டை, சாக்ஸ், ஹேட், T’ஷர்ட் இவற்றில் அடிக்கும் கொள்ளைகளுக்கு எல்லையே இல்லை. ஆனால் அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லை; புத்தகங்கள், சீருடை, உணவு இலவசம்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவரின் பெற்றோர் கடமை, பிள்ளைகளை முறையாகக் கண்காணிப்பது. தனியார் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க பணத்துக்காக எடுத்துக்கொள்ளும் முயற்சியையும் உழைப்பையும் கவனத்தையும் அரசுப் பள்ளியில் பிள்ளைகளச் சேர்த்துவிட்டு, அவர்கள் படிப்பில் செலுத்தினால் தகுந்த பலன் கிடைத்தே தீரும்.
கலெக்டராக இருந்தும் தன் மகளை பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிற ஈரோடு மாவட்ட கலெக்டர் திரு ஆர். ஆனநதகுமாரை நாம் ஏன் முன் உதாரணமாகக் கொள்ளக்கூடாது? நம் பிள்ளைகளை அவரைப்போல ஆக்கத்தானே தனியார் பள்ளியில் சேர்க்கிறோம். நாமே ஏன் அவரைப்போல் ஆகிவிடக்கூடாது!
வாவன்னா

இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ

இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ

“இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.” என்ற தலைப்பில் திரு த.அரவிந்தன் தினமணி (20-05-2011) நாளிதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அக்கட்டுரையின் செய்தி சிதறா வண்ணம் சுருக்கிக் கீழே தரப்பட்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி வேட்பாளர் திரு க.பீம்ராவ்தான் அந்த எம்.எல்.ஏ. மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொதுத் தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். “எம்.எல்.ஏ. என்பது பதவி அல்ல; பொறுப்பு” என்கிறார்.
க.பீம்ராவ் மிக எளிமையானவர். ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீட்டில்தான் வசிக்கிறார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் எதுவும் இல்லை. மனைவி விரும்பி வாங்கி வைத்த இலவசத் தொலைக் காட்சிப் பெட்டி மட்டும்தான்!
கட்சியின் முழு நேர ஊழியராக இருப்பதால் மாதம் மூவாயிரம் ரூபாயில்தான் குடும்பம் நடத்தவேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டால் வேறு தொழில் செய்யக் கூடாதது. இவருக்கு உடுத்துவதற்குக் கூட சரியான உடை கிடையாது. ஆட்டோ ஓட்டுனர் சங்கம் இவருக்கு பேண்ட்டும் சட்டைகளும் எடுத்துக் கொடுத்துள்ளனர். பல தோழர்களும் உதவி செய்கிறார்கள்.
இவருக்கு மூன்று குழந்தைகள். இவர்களின் கல்விச் செலவுகளை உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள். எம்.எல்.ஏ. சம்பளம் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுதான் இல்லை. சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று விடுகிறது! வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாய்தான் அவருக்குக் கிடைக்கிறது! இதனால் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்கிறார். நாம் 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில்தான் வாழ்கிறோமா?
எம்.எல்.ஏ. பீம்ராவ் பற்றிய திரு த.அரவிந்தன் கட்டுரைக்கு 109 கருத்துரைகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்திருக்கின்றன. அனைவரும் அவரை வாயார, மனமார, வானளாவ வாழ்த்தி இருக்கிறார்கள். ஒரு வாசகர் ‘234 M.L.A. -ல் ஒருவர்தானா நல்லவர்? அட, கடவுளே!!!’ என்று வியந்திருக்கிறார். உங்கள் கருத்துரை என்னவோ?
வாவன்னா

விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும்

விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும்
இரண்டு மாத விடுமுறையை மாணவர்கள் நன்றாகவே அனுபவித்தார்கள். அதன் பலனையும் பெற்றோர் நன்கு அனுபவித்துவிட்டனர். தேர்வுகள் நடக்கும்போது விடுமுறை வராதா என்று மாணவர்கள் எண்ணுவதும், விடுமுறை வந்தபின் பள்ளி திறக்கமாட்டர்களா என்று பெற்றோர் ஏங்குவதும் ஒரு வேடிக்கையான வாடிக்கை!
பெற்றோரின் ஏக்கத்தில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது சமச்சீர் கல்விப் பிரச்சினை. வந்தது அறிவிப்பு: பள்ளி திறப்பு, தள்ளி வைப்பு! இந்த இரண்டு மாத விடுமுறைக் காலத்திற்குள் எத்தனை நிகழ்வுகள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தின!
தேர்தல் வந்தது. பெற்றோர் பிள்ளைகள் மீது வைத்திருந்த கவனம் சிதறியது. பிள்ளைகளின் அன்றாடச் செயல், ஒழுங்கு இவற்றின்மீதுள்ள கவனம் மாறியது. இதே விடுமுறைக் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் 51 நாட்கள் நடந்தது. மாணவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டு, அவர்களின் செயல்களையும் பள்ளிச் சிந்தனைகளையும் முடக்கி வைத்தது. இதில் பழகிவிட்ட மாணவர்கள் மேலும் விளையாட்டுகளையே தேடி அலைகின்றனர். விளையாடுவதற்காக அவர்கள் வீட்டை விட்டு அவுட்டாகிவிட்டால் பின் அவர்கள் கேட்சு ஆவது மிகவும் சிரமம்.
பள்ளிகள் திறந்தாயிற்று. என்ன பாடத்திட்டம் என்று அறியாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் குழம்பிக் கொண்டிருக்கும் நிலை. மூன்று வாரங்களுக்குப் பின்தான் பாடத்திட்டம் பற்றிய உண்மை நிலை புரியும்.
மற்ற ஆண்டுகளைவிட பெற்றோர் இந்த ஆண்டு பிரச்சினைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு சமச்சீர் புத்தகங்கள் நடை முறைக்கு வந்தால் எதிர்பார்ப்பு இருப்பதால் பாதிப்பு இருக்காது. பழைய பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் புத்தகங்கள் இனி அச்சாகி மாணவர் கைக்குக் கிடைக்க தாமதமாகும. குறிப்பாகப் பாதிக்கப்படுபவர்கள் புதிய பாடப் புத்தகங்களை முன்கூட்டிடே படித்துக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான். எனவே மாணவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர் பொறுப்பாகிவிட்டது.
கல்வி தொடர்பாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர், செய்திகள், செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். பாடங்கள் நடக்காத இந்த மூன்று வாரங்களில் வகுப்பு எப்படி நடக்கிறது என்பதை மாணவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.
மாணாக்கரை வீணாக்கும் சாதனங்களில் முக்கியமானது தொலைக்காட்சி. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும. செல்போனை அவர்களிடமிருந்து பிடுங்கிவிடவேண்டும். பெற்றோர் மாணவர்களை மாலையில் மட்டும் விளையாட அனுமதிக்கவேண்டும்.
பெண் மக்களின் கல்வியைப் பற்றி பெற்றோர் கவலைப்படும் சூழ்நிலை இல்லை. தனக்கு உதவியாக இல்லாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறாளே என்பதுதான் தாயின் கவலை. அதற்கு மாறாக மகனைப் பார்த்து, “நீ வெளி வேலைக் கெல்லாம் போகவேண்டாம்; வீட்டிலிருந்து படி” என்று பெற்றோர் சொல்லும் நிலை!
இனி எந்தப் பாடத் திட்டம் வந்தாலும் அதை நன்கு படித்து வெற்றி பெற எல்லா உதவிகளையும் பெற்றோர் செய்யவேண்டும். வீட்டின் உயர்வில் மட்டுமல்ல, நாட்டின் உயர்விலும் மாணவர்களின் பங்கு அதிகம். அவர்களை நெறிமுறைப் படுத்துவது பெற்றோர் என்ற முறையிலும், குடிமக்கள் என்ற முறையிலும் மக்களுக்குக் கடமை. கடமை உணர்ந்து மக்கள் செயலாற்றுவார்களாக!
வாவன்னா

அகமும் புறமும்

அகமும் புறமும்
சங்க காலத்தில் அகத்தையும் (அன்பு, ஈகை) புறத்தையும் (வீரம்) பெருமைப் படுத்துவதற்காக அகநானூறு, புறநானூறு என்ற இலக்கியங்கள் உருவாகின. இலக்கியத்துக்கும் பெருமை சேர்ந்தது. ஆனால் இன்று அகமும் புறமும் நம்மைச் சிறுமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
அகம் :
அகம் என்ற சொல்லுக்கு உள், மனம் என்று பொருள். அகத்திற்கு கர்வம் என்ற பொருளும் உண்டு. தன்னைப் பற்றிய செய்திகளைப் பெருமையாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இழிவாக நினைப்பது. மனத்தினுள்ளே இதைத் தேக்கி வைத்திருப்பதால் அகம் என்று பெயர் வந்திருக்கலாம். இது பாவம் என்பதால் அகம்பாவம்
பெரும்பாலும் பதவியில் இருப்பவர்களிடம் தான் அகம்பாவம் அதிகம் காணப்படுகிறது. இன்று அரசியலே அகம்பாவத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு அகபாவம் தோற்றால் இன்னொரு அகம்பாவம் தலை தூக்குகிறது. இரண்டு அகம்பாவங்களுக் கிடையில் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.
பணக்காரர்கள், படித்தவர்கள் அகம்பாவத்தின் சொந்தக்காரகள். பணக்காரரின் அகம்பாவம் அவரை நம்பி இருக்கும் ஏழைகளை மாய்க்கிறது; படித்தவர்களின் அகம்பாவம் அவர்களையே சாய்க்கிறது. அகம்பாவம் என்பது மனித இனத்துக்கே சொந்தமானது. ஒரு பிச்சைக்காரருக்கு காசைக் குறைத்துக் கொடுத்தால், “நீயே வெச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு நடக்கிறாரே! இது அவரது அகம்பாவம்.
தன் தவறை உணர்ந்தவர் கூட அதைத் திருத்திக் கொள்ளா திருப்பதற்கு அவருடைய அகம்பாவமே காரணம். தனது செயலே சரி என்ற நினைப்பு!
புறம்:
புறம் என்றால் வெளி என்று பொருள். ஒருவரைப் பற்றி அவர் அறியாத வகையில் மற்றவரிடம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு புறம் என்று பெயர்.
புறம் பேசுவது ஒரு பொழுது போக்காகவே ஆகிவிட்டது. இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் போது மூன்றாவதாக ஒருவர் அரூபமாக வந்து விடுகிறார். அவரது கறை போகும்வரை அவர் நன்றாக அலசப்படுகிரார். பாவம்! யாருக்கு?
புறம் பேசுவதை எல்லா மதங்களும், நீதி நூல்களும் புறக்கணிக்கின்றன. இருந்தும் மனிதன் அவற்றைப் புறந்தள்ளி விடுகிறான்.
புறம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் மனிதனுக்கு நேரம் இருப்பது. அதற்குக் காரணம், உழைப் பில்லாமல் இருப்பது. உழைப்பு என்பது உடல் உழைப்பு மட்டுமல்ல, தன் வசமுள்ள செயல்களை, அது படிப்பதாக இருந்தாலும் சரி, இறைவனைத் தொழுவதாகாக இருந்தாகும் சரி, அடுத்த பணிக்குப் போகும் வரை, அதைச் செய்து கொண்டு இருக்கவேண்டும்.
ஜப்பான் போன்ற நாடுகளில் புறம் பேசுவதைப் பார்க்க முடியுமா? பேச முடியாமல் உழைப்பு தடுக்கிறது. எந்த நாட்டில் அனத்துத் துறைகளிலும் உழைப்பு இருக்கிறதோ அங்கே புறம் பேசுதல் இருக்காது. புறம் பேசத் துடிப்பவர்கள் தங்களைப் பற்றி தங்கள் மனத்துக்குச் சொல்லிக் கொள்ளட்டும்! தன்னை உணரும் மனப் பக்குவம் ஏற்படும். அப்புறம் புறம் புற முதுகிட்டு ஓடும்.
அகமும் புறமும் நகையும் சதையுமல்ல; இரண்டும் வெவ்வேறானவை. கேடு விளைவிக்கக் கூடிவை. இணக்மான சமுதாயத்தில் பிணக்கை ஏற்படுத்தக் கூடிவை. இதை உணராமல் மனிதன் அகம் கொண்டு நன்நெறிகளைப் புறந்தள்ளி விடுகிறான்!
-வாவன்னா

அதிராம்பட்டினமும் ஆங்கிலக் கல்வியும்

உயர் வகுப்பாரும் வசதி படைத்தவர்களும் படிக்கவேண்டும் என்பதற் காக கொண்டு வரப்பட்ட கல்வித் திட்டம்தான் மெட்ரிகுலேஷன், C.B.S.E. இதில் பெற்றோர் பிள்ளைகளைச் சேர்ப்பதன் முக்கிய நோக்கம் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக. அப்படிப் பேசுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. அப்படிப்பட்ட பயிற்சி தரப்படும் அறிகுறியுமில்லை.


நம்முடைய ஆங்கிலப் பள்ளிகளில் L.K.G., U.K.G. நடத்தும் ஆசிரியைகள், வேறு வேலை கிடைக்கும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை இந்த வேலையில் இருக்கலாம் என்ற அடிப்படையில் தான் பணி புரிகிறார்கள். அவர்கள் ஆங்கில வழிக்கல்வி கற்றவர்களுமல்லர், பயிற்சி பெற்றவர்களும் அல்லர்.


நம்மூரில் ஆங்கிலப்பள்ளி தோன்றி முப்பத் தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன, அதன் பின் பல பள்ளிகள் தோன்றின. இங்கு ஆங்கிலத்தைக் காண முடியவில்லை. இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நகரங்களிலும் வெளிநாடுகளிலும் பள்ளிகளில் இடம் கிடைப்பதில்லை. துவக்கத்திலிருந்தே மாணவர் ஆசிரியர் தரத்திற்கேற்ப எளிய புத்தகங்களை வைத்து தரத்தை படிப்படியாக உயர்த்தி இருக்கவேண்டும்.


நம்மூர் ஆங்கிலப் பள்ளி மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் நம்மைப் பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள். அந்த அளவுக்கு ஆங்கிலம் இங்கிலாந்து தூரம். பெற்றோர் கனவு நனவாவது எப்போது? போதாததற்குத் தமிழையுமல்லவா தொலைத்துவிடுகிறார்கள்.


பெற்றோர் என்ன நோக்கத்திற்காக அப்பள்ளிகளில் சேர்த்தார்களோ, அந்த நோக்கம், அதாவது சரளமாக ஆங்கிலம் பேசுவது வந்துவிட்டால் அப்பள்ளியின் வேறு குறைபாடுகளை மறந்துவிட வாய்ப்பு உண்டு.


சமச்சீர் கல்விப் புத்தகங்கள் வந்தபின் மற்ற சாதாரண பள்ளிககளோடு ஒப்பிடும்போது மெட்ரிக் பள்ளிகளின் தரம் தாழ்ந்து காணப்படுமோ எனத்தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றன.
எது எப்படியோ வாங்கும் பணத்திற்கு ஆங்கிலம் தந்தால் சரி!

உமர்தம்பிஅண்ணன்

இலவசம் யார் வசம்?

கல்வி, புத்தகம் இலவசம்;
உணவு, சீருடை இலவசம்;
லேப்டாப், சைக்கிள் இலவசம்;
கல்வியின் உயிர் யார் வசம்?

விவசாய மின்சாரம் இலவசம்;
சமையல் எரிவாயு இலவசம்;
தொலைக் காட்சியும் இலவசம்;
2-ஜி மெகா ஊழல் யார் வசம்?

அரிசி இருபது கிலோ இலவசம்;
ஆடுகள், மாடுகள் இலவசம்;
மிக்சி, கிரைண்டர் இலவசம்;
சொத்துக் குவிப்பு யார் வசம்?

வேட்டி, சேலை இலவசம்;
திருமண உதவி இலவசம்;
தங்கத் தாலி இலவசம்;
குடும்ப அரசியல் யார் வசம்?

உமர்தம்பிஅண்ணன்

கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு

கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு

வா.. வின் ஓவியம்

அதிரை வாசி,
அதிகம் வாசி!
அறிவை நேசி!
ஆழ்ந்து யோசி!
அளந்து பேசி,
அடக்கம் நேசி!
அறிவாய் உனக்குத்
துன்பம் தூசி!

உமர்தம்பிஅண்ணன்

powered by Blogger