விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும்

விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும்
இரண்டு மாத விடுமுறையை மாணவர்கள் நன்றாகவே அனுபவித்தார்கள். அதன் பலனையும் பெற்றோர் நன்கு அனுபவித்துவிட்டனர். தேர்வுகள் நடக்கும்போது விடுமுறை வராதா என்று மாணவர்கள் எண்ணுவதும், விடுமுறை வந்தபின் பள்ளி திறக்கமாட்டர்களா என்று பெற்றோர் ஏங்குவதும் ஒரு வேடிக்கையான வாடிக்கை!
பெற்றோரின் ஏக்கத்தில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது சமச்சீர் கல்விப் பிரச்சினை. வந்தது அறிவிப்பு: பள்ளி திறப்பு, தள்ளி வைப்பு! இந்த இரண்டு மாத விடுமுறைக் காலத்திற்குள் எத்தனை நிகழ்வுகள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தின!
தேர்தல் வந்தது. பெற்றோர் பிள்ளைகள் மீது வைத்திருந்த கவனம் சிதறியது. பிள்ளைகளின் அன்றாடச் செயல், ஒழுங்கு இவற்றின்மீதுள்ள கவனம் மாறியது. இதே விடுமுறைக் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் 51 நாட்கள் நடந்தது. மாணவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டு, அவர்களின் செயல்களையும் பள்ளிச் சிந்தனைகளையும் முடக்கி வைத்தது. இதில் பழகிவிட்ட மாணவர்கள் மேலும் விளையாட்டுகளையே தேடி அலைகின்றனர். விளையாடுவதற்காக அவர்கள் வீட்டை விட்டு அவுட்டாகிவிட்டால் பின் அவர்கள் கேட்சு ஆவது மிகவும் சிரமம்.
பள்ளிகள் திறந்தாயிற்று. என்ன பாடத்திட்டம் என்று அறியாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் குழம்பிக் கொண்டிருக்கும் நிலை. மூன்று வாரங்களுக்குப் பின்தான் பாடத்திட்டம் பற்றிய உண்மை நிலை புரியும்.
மற்ற ஆண்டுகளைவிட பெற்றோர் இந்த ஆண்டு பிரச்சினைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு சமச்சீர் புத்தகங்கள் நடை முறைக்கு வந்தால் எதிர்பார்ப்பு இருப்பதால் பாதிப்பு இருக்காது. பழைய பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் புத்தகங்கள் இனி அச்சாகி மாணவர் கைக்குக் கிடைக்க தாமதமாகும. குறிப்பாகப் பாதிக்கப்படுபவர்கள் புதிய பாடப் புத்தகங்களை முன்கூட்டிடே படித்துக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான். எனவே மாணவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர் பொறுப்பாகிவிட்டது.
கல்வி தொடர்பாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர், செய்திகள், செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். பாடங்கள் நடக்காத இந்த மூன்று வாரங்களில் வகுப்பு எப்படி நடக்கிறது என்பதை மாணவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.
மாணாக்கரை வீணாக்கும் சாதனங்களில் முக்கியமானது தொலைக்காட்சி. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும. செல்போனை அவர்களிடமிருந்து பிடுங்கிவிடவேண்டும். பெற்றோர் மாணவர்களை மாலையில் மட்டும் விளையாட அனுமதிக்கவேண்டும்.
பெண் மக்களின் கல்வியைப் பற்றி பெற்றோர் கவலைப்படும் சூழ்நிலை இல்லை. தனக்கு உதவியாக இல்லாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறாளே என்பதுதான் தாயின் கவலை. அதற்கு மாறாக மகனைப் பார்த்து, “நீ வெளி வேலைக் கெல்லாம் போகவேண்டாம்; வீட்டிலிருந்து படி” என்று பெற்றோர் சொல்லும் நிலை!
இனி எந்தப் பாடத் திட்டம் வந்தாலும் அதை நன்கு படித்து வெற்றி பெற எல்லா உதவிகளையும் பெற்றோர் செய்யவேண்டும். வீட்டின் உயர்வில் மட்டுமல்ல, நாட்டின் உயர்விலும் மாணவர்களின் பங்கு அதிகம். அவர்களை நெறிமுறைப் படுத்துவது பெற்றோர் என்ற முறையிலும், குடிமக்கள் என்ற முறையிலும் மக்களுக்குக் கடமை. கடமை உணர்ந்து மக்கள் செயலாற்றுவார்களாக!
வாவன்னா

0 Response to "விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும்"

powered by Blogger