தனியார், பேராசை தணியார்!
1:48 PM
Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
0 Comments
கல்வி வாணிபப் பொருளாகிவிட்டது. எந்த அளவுக்கு அரசு கல்வியை இலவசப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு நேர் மாறாக தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை விலை உயர்ந்த வாணிபப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
தனியார் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. ஐந்தாவது வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. போதாதற்கு இந்தி வேறு கற்றுத் தருகிறார்களாம். எல்லாம் பணம் பண்ணத்தான். இவற்றில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் வரிசையில் நிற்கின்றனர். பாவம், இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது ஆசிரியைகளே தமிழ்வழி கல்வி கற்றவர்கள் என்று.
நகரங்களில் பெற்றோர் படித்தோராக இருப்பதால் பள்ளிகளையும் கவனிக்கிறார்கள்; பிள்ளைகளையும் கண்காணிக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு சம்பளம் பள்ளியே கொடுப்பதால் மாணவர்களிடமிருது கட்டணம் வசூலித்துத்தான் ஆகவேண்டும். இருந்தாலும் அதற்ககு ஒரு எல்லை உண்டு அல்லவா?
அந்த எல்லையை நிர்ணயிக்கத்தான் கருணாநிதி அரசு கோவிந்தராஜன் குழுவை அமைத்தது. அக்குழு நிர்ணயித்த கட்டணத்தில் திருப்தி இல்லை என்று மேல் முறையீடு செய்தன. முறையீட்டை விசாரிக்குமுன் கோவிந்தராஜன் பதவியைத் துறந்தார். அரசு ரவிராஜ பாண்டியன் குழுவை அமைத்தது.
ரவிராஜ பாண்டியன் குழு அறிவித்த கட்டணம் பெற்றோர், பள்ளி இவற்றின் எதிர்ப்பைச் சந்தித்தது. தனியார் பள்ளிகளுக்கு, பெற்றோரைப் பாதிக்கும் அளவுக்கு இக்குழு சலுகை செய்துள்ளது என்று பரவலாகப் பேசப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சிதான். இருந்தாலும் நீதி மன்றத்தை அணுகி இருக்கிறார்கள். பலித்தவரை பார்க்கிறார்கள். குழு நிர்ணயித்ததைவிட அதிகமாக வாங்குகிறார்கள் என்றும் பேசப்படுகிறடுது.
நகரங்களில் உள்ள ஒருசில பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் தரமான கல்வி தந்து, பிள்ளைகளை ஒளிமயமான நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பது ஒரு மாயை. இந்த மாயை கடை நிலை ஊழியனையும் மாய்ப்பதுதான் இன்றைய நிலை.
தனியார் பள்ளிகளிலிருந்து முறையான தகுதி உள்ள ஆசிரியர்கள் கூட அதிக ஊதியம் நாடி அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விடுகிறார்கள். அரசுப் பள்ளிகள் அல்லது உதவி பெரும் தனியார் உயர் நிலைப் பள்ளிகள் முன்புபோல் இப்போது இல்லை. அவற்றில் படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முழுத்தகுதி பெற்றவர்களாக இருப்பதுடன், அரசு அவர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகளும் தருகிறது.
தனியார் பள்ளிகளில் கட்டணம் தவிர புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை, பெல்ட், டை, சாக்ஸ், ஹேட், T’ஷர்ட் இவற்றில் அடிக்கும் கொள்ளைகளுக்கு எல்லையே இல்லை. ஆனால் அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லை; புத்தகங்கள், சீருடை, உணவு இலவசம்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவரின் பெற்றோர் கடமை, பிள்ளைகளை முறையாகக் கண்காணிப்பது. தனியார் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க பணத்துக்காக எடுத்துக்கொள்ளும் முயற்சியையும் உழைப்பையும் கவனத்தையும் அரசுப் பள்ளியில் பிள்ளைகளச் சேர்த்துவிட்டு, அவர்கள் படிப்பில் செலுத்தினால் தகுந்த பலன் கிடைத்தே தீரும்.
கலெக்டராக இருந்தும் தன் மகளை பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிற ஈரோடு மாவட்ட கலெக்டர் திரு ஆர். ஆனநதகுமாரை நாம் ஏன் முன் உதாரணமாகக் கொள்ளக்கூடாது? நம் பிள்ளைகளை அவரைப்போல ஆக்கத்தானே தனியார் பள்ளியில் சேர்க்கிறோம். நாமே ஏன் அவரைப்போல் ஆகிவிடக்கூடாது!
வாவன்னா
0 Response to "தனியார், பேராசை தணியார்!"
Post a Comment