மூன்று வியப்புகள்!!!

1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன்! முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன!


கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி! புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம்! மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை! குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது! கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை! வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன! பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள்! ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள்!


வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள்! குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம்! பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும்! மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள்! கூட்டமே இருக்காது! படுத்துக் கொண்டு போகலாம்! மாலை ஆறு மணி ஆகிவிட்டால், வெளியூர்த் தொடர்புகள் அத்தனையும் அறுந்து போகும்!

எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரி!?

முதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தை! பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று! அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர்! அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண்! செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி! தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம்! இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி! பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர்! திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம்!.

அன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர், சிறியோர், முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று, ஆன்மீக உணர்வு, ஆச்சாரம், அறச் செயல்கள், ஒழுக்க சீலங்கள், அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின! மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம், பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர்!

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவா? இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை! அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள்! வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு, பிறரையும் ”உண்ணீர்”, “உண்ணீர்” என்று உபசரிப் பார்கள்! 


வசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம், கடற் பாசி, ரொட்டி, இடி யாப்பம், முர்த்தபா, முட்டைப் புரோட்டா, அடுக்கு பிரியாணி, ஆட்டுக் கறி, கோழிக் கறி, குருவிக் கறி, முட்டை மீன், பாயாசம், பேரீச்சம் பழ இனிப்பு, என்று பரி மாறுவார்கள்! புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள்! சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள்! கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும்! இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும்! ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம்! நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும்! உண்டும், விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும்!

பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்துவிட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!

(தொடரும்)

பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,
வரலாற்றுத் துறை,
கா.மு.கல்லூரி.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்!


அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்!

நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம்,ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்! அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம்! ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்!

உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்! அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன! எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்!

இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது! ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும்! பயணக் கட்டணம் 4 அணா! பயணம் செய்வோரும் மிகவும் குறைவு! நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்!

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள்! பயணக் கட்டணம் எட்டணா! போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக்குறைத்த தோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள்! இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள்! பேருந்து யாவும் கரி வண்டிகளே!

நான் திரு ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம்! பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர்! சிலர் சைக்கிளில் செல்வர்! இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்!
சேர்மன் ஒரு குதிரை வண்டியும, ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார்! திரு ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்!

அக் காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு! தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது! அளவு மட்டும் அதிகமாக இருக்கும்! தயிரோடு சாப்பாடு இரண்டணாதான்! நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே! திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்!

நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார்! மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார்! நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை! எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம்! மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார்! விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது! அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார்! 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எ\ல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை! அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும்! அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார்! மீண்டும் எஸ்.எஸ்.எ\ல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது! இதனால் தேர்வு எழுத முடிய வில்லை! பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை!

பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது! அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம்! திடீ ரென மழை பிடித்துக் கொண்டது! பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை! நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்!

அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்ப தற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்! நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது! நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்!” மேற் படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது! அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.


என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்!

நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்! ஒருவர் திரு மஜீது! அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள்! மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு! இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்!

இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!

கல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிவீர ராம பாண்டினின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது!


ஹாஜி த. அ. அப்துல் ரசாக்

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை!

எம் சிந்தையைக் கவர்ந்த

கல்வித் தந்தை!


சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்.,


சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!


உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;


உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!


சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;

நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;

வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;

மசியா மனிதரை மசிய வைப்பார்!


திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்

குட்டினால் அனுபவம்! இவைகளின்

சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்

சொந்தக்காலில் நின்ற செயலாளர்!


மடிக் கணினி வரு முன்னரே

மடியில் வைத்துத் தட்டச்சில்,

பணி ஆணைகள் பல அச்சிட்டு,

படித்தோர்க்குப் பலன் தந்தார்.


ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்

ஆளுமையில் அடங்கும் துறைகள்;

கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய்

மாட்டிக் கொண்டு குட்டுப் படும்!


வாசகமொன்று இவர் எழுதிடின்,

வக்கணை பேச யாருளர்? பிறர்

வாசகத்தை இவர் திருத்திடின்,

வாய்திறந்து மறுப்போர் யாருளர்?


அலுவலகங்களுக்கு ஓர் உடை,

விழாக்களுக்கு என்று ஓர்உடை,

பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை

என்ற வழக்கம் உடையாரல்லர்!


யாவும் உடையார்க்கு உயருடையா?

பயமே அறியார்க்குப் படை பலமா?

தளரா நடையே போதும் அவருக்கு,

அடையா இலக்கை அடைவதற்கு!


நீட்டோலை வாசியா நின்றவரை,

ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்!

படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,

பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.


பட்டறிவில்லா எம் போன்றோரை,

பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!

அறிவுரைகளால் அதட்டி என்னை

முது கலையை அடைய வைத்தார்!


ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;

ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்

பதவி நெருங்கும் வரை அவர்

அன்பில் எம் முயர்வு இருந்தது!


பரவட்டும் தாளாளர் புகழொளி

பாரெல்லாம்! வல்ல இறைவன்,

புவனப் பதவி பல தந்தவருக்கு

சுவனப் பதவியை வழங்கட்டும்!


A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)

முன்னாள் மாணவர், முது கலைப்

பட்டதாரி ஆசிரியர்,

காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி

மறக்க முடியா மனிதர் (...தொடர்ச்சி)

இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன!

அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.


அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும்!” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.

தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின! 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது! நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.


அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள்!

எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.


02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம்! அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள்! இறை நாட்டப்படி நேர்ந்த இறப்பால் ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது மிகக் கடினம் என்ற போதிலும் அன்னாரது மூத்த புதல்வர் ஹாஜி ஜனாப் S.முகம்மது முகைதீன் அவர்களும் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர் ஹாஜி ஜனாப் A.M. சம்சுதீன் அவர்களும் அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தார்கள். தற்போது ஹாஜி S.M.S. அவர்களின் இரண்டாவது புதல்வர் ஜனாப் Dr. S.முகம்மது அஸ்லம் அவர்கள் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வருவது பாராட்டுக்குரியது. உலகம் உள்ள வரை கல்வி இருக்கும். கல்வி உள்ள வரை கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் புகழ் இருக்கும் என்பது உறுதி.


ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14


சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?
ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!


உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது! உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது! ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது! காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்! மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்! கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.

இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத்! காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை!

1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார்! காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று! காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன! அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர்! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின! தோன்றிக் கொண்டிருக்கின்றன! குப்பையை அள்ளி சாக்கடையில் போட்ட மாதிரி, சினிமாக்காரர்கள் அரசியலில் குதித்தார்கள். இதுவல்ல அதிசயம்! சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள்! இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி! போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது! விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள்!

இந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்தது? நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள்! நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள்!அவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று! நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார்?

எங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி! சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம்! உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார்! கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார்! வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை! அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.

இதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.

இதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம்! அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?” என்ற ஒரு நிலை இருந்தது! எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார்!

அரசியலில் சேராவிட்டால் என்ன நன்மை? நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார்! மாற்றி யோசிக்கலாம்! ஆட்சி மாற்றம் கொண்டு வரலாம்! எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம்! கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது! ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டது! உதவித் தொகை உயர்த்தப் பட்டது! விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது! இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது! அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற்றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள்!

சென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, எண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தன! அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர்!. ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ! மீண்டும் மு.க.! முகத்தில் கரி! மீண்டும் ஜெ! ச்சே! இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்! இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமறுக்குப் பிடிக்காது. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டது!

வேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது! முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு? அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா? அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா? சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவா?

சரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.

மேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோ! இன்னும் நாம் பெரிய 'மக்காக' இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால்
உமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும்!

வெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமா? முடியும்! அக்பரின் முன்னோடி என்றும், நவீன நாணய முறையின் தந்தை என்றும், நிர்வாகச் சிற்பி என்றும், நீதியின் ஊற்று என்றும் பேசப்படுகிற செர்ஷா, ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து, வரலாற்று ஆசிரியர்களின் இதயாசனத்தில் வீற்றிருக்கவில்லையா?

தொடரும்...



வாவன்னா, M.A.,B.Ed.(வரலாறு)
(உமர்தம்பிஅண்ணன்)


மறக்க முடியா மனிதர்


மறக்க முடியா மனிதர்


‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது!


‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன்.


“The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த மாமனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக் கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ் வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார்!



60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது!


அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் மசூதிகளில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடு நிலைப் பள்ளி தொடங்கப் பட்டது. காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடு நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது! S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.


கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன் முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார்!

1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம்! அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன! பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது!

----------------------

ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,

தலைமை ஆசிரியர் (ஓய்வு)

காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி

அதிராம்பட்டினம்

----


தொடரும்...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 13



ஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்

உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.

எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய ஒரு பெரிய ரேடியோ செய்யவேண்டும் என்பதற்காக எங்கள் மாமா எல்லா உதிரி பாகங்களையும் உமருக்கு வாங்கிக் கொடுத்தார்கள். மாணவர் உமரின் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே! அங்கீகாரம் தந்த மாமா, ரேடியோவின் அங்கங்களையும் வாங்கித் தந்ததும் உமரின் அங்கமெல்லாம் பூரித்தன! எதையும் செய்யத் துடிக்கும் இதயம் கொண்ட உமர், இதையும் செய்யத் துடித்தார் . ஒரே முனைப்பாக இணைப்புகள் கொடுத்தார். ரேடியோ இயங்கத் துவங்கியது. அதை அப்படியே மாமாவிடம் தந்துவிட்டார். எங்கள் மாமாவுக்கு உமரோடு பிணைப்பு அதிகமானது.

கல்லூரியில் பேராசிரியர் N.A. சாகுல் ஹமீது ஒலி, ஒளி காட்சிக்குப் பொறுப்பாளராக இருந்தார். அப்போது உமர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். N.A.S. உடன் சேர்ந்து கல்வி தொடர்பான படங்களையும், கலைப் படங்களையும் திரையிட உதவினார். கல்லூரியின் ஆண்டு விழாக்களிலும் இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் முக்கிய விருந்தாளிகள் மற்றும் பேச்சாளர்களின் பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்தார்.

உமருக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. ஒரு விலையுயர்ந்த புகைப் படக் கருவி வைத்திருந்தார். N.A. சாகுல் ஹமீது சாருடன் சேர்ந்து கல்லூரி விழாக்களில் புகைப்படம் எடுப்பார். இருவரும் எடுக்கும் படங்களில் தொழில் நுட்பம் இருக்கும். புகைப் படக் கருவி பழுதடைந்துவிட்டால் அதற்கு வைத்தியமும் பார்ப்பார் உமர்!. உமர் வீட்டிலேயே இருட்டறை தயார் செய்து பிலிம் டெவலப்பிங், ஃபோட்டோ பிரிண்டிங் ஆகிய பணிகளைச் செய்வார். இருட்டறையிலேயே டெவலப்பர், ஃபிக்சர் போன்றவைகளை வைத்திருப்பார். பிளிம்களை ‘டச்’ செய்து பிரிண்டும் போடுவார்.

ஸ்க்ரீன் ப்ரிண்டிங்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. வெள்ளை பிலிமில் எழுத்து அல்லது படங்களை அண்ணனை வைத்து வரைந்து, தாமே தயாரித்து வைத்திருந்த ரசாயனம் பூசப்பட்ட ஸ்க்ரீன் மேல், படம் வரையப்பட்ட பிலிமை வைத்து சூரிய ஒளியில் எக்ஸ்போஸ் செய்வார். இந்த ஸ்க்ரீனைப் பயன்படுத்தி பிரிண்ட் செய்து நகல் எடுப்பார்!

முன்பு டிரான்சிஸ்டர் ரேடியோவுக்குத்தான் மவுசு அதிகம். நிறையப் பேர் அதை கையில் வைத்துக் கொண்டுதான் செய்திகள், கிரிக்கட் வர்ணனைகள் கேட்ப்பார்கள். பேட்டரி செல்கள் பயன்படுத்துவதால் அது தீர்ந்தவுடன் மீண்டும் வாங்கியாகவேண்டும்; பணச்செலவு! இந்தச் செலவை மிச்சப் படுத்துவதற்காக உமர் எளிமிநேட்டர் என்ற எளிய சாதனத்தைத் தன் கைப்படச் செய்தார். காயில்களை அவரே சுற்றினார். கடையில் புதிதாக வாங்குகிற எளிமிநேட்டரோடு ஒப்பிடும்போது இது மலிவு. மின் தொடர்பு கொடுத்துவிட்டால் டிரான்சிஸ்டர் ரேடியோ தொடர்ந்து பாட ஆரம்பித்துவிடும். எளிமை மிகு உமர், எலிமிநேட்டர்களை ஏராளமானவர்களுக்குத் தாராளமாக செய்து வழங்கியிருக்கிறார். நன்றாகச் சம்பதித்தார் நல்ல பெயரை!

1980- களில் கையடக்கமாக ஒரு கணினி வந்திருந்தது. அதில் செய்தியை தட்டச்சு செய்து அச்செய்தியை ஒலியாக மாற்றி, அதை நாடாவில் பதிவு செய்து, கிரீச் ஒலி எழுப்பக் கூடிய இந்த செய்தியை மற்றொரு கணினியில் ஏற்றினால் இதில் முன்பு தட்டச்சு செய்யப்பட்ட செய்தி திரையில் அப்படியே வரும்! போட்டி மிகுந்த இந்த உலகில், முந்திக் கொள்வற்காக வியாபாரத் தொடர்பான செய்திகளை மற்றொரு ஊருக்கு அனுப்புவதற்கு தன் நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் உமர்!

உமர்தம்பியும் நானும் துபாயை விட்டு 2001-ல் ஊர் வந்தபின் அவர் ஓய்ந்துவிடவில்லை! தான் துபைக்குப் போகுமுன் செய்து கொண்டிருந்த பணிகளை மீண்டும் துவக்கினார்.

தனக்கு அமீரகத்தில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கும் பயன்படுத்த எண்ணினார். அதற்கான வரவேற்புகளும் வந்தன. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கார் விற்பனை மற்றும் சேவை நிறுவனத்துக்கு மென்பொருள் செய்ய அவருடைய மகன் மொய்னுதீனுக்கும், அவருடைய அன்பிற்குப் பாத்திரமான N.B.சாகுல் ஹமீதுக்கும் ஆலோசனைகள் சொல்வதில் உறுதுணையாக இருந்தார். உமரின் வழிகாட்டலில் அந்த இரு இளைஞர்களும் அந்தப்பணியை ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்துமுடித்தனர். அந்த நிறுவனத்துக்கு ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப் படும்போதெல்லாம், தொலைபேசி மூலமாக அழைப்பார்கள். இருவரும் உடனே சென்று பணியை முடித்துக் கொடுத்துவிட்டு வருவார்கள்.

இதே போல சென்னையில் உள்ள ஒரு குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் (Water Purifier) விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்திற்கு உமரும் அவருடைய மகனும் ஒரு மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் சென்னைக்குச் சென்று அதன் செயல் முறையை அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்கள். இந்த மென்பொருள் அந்த நிறுவனத்தில் இன்னும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

நானும் உமர்தம்பியும் ஊரில், காலையில் நடைப் பயிற்சிக்காகச் செல்லும்போது ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களைச் சந்திப்போம். தற்கால கல்வி தொடர்பாகப் பேசும்போது, இமாம் ஷாபி பள்ளியைப் பற்றியும் பேச்சு வரும். உமரின் பேச்சுக்களில் இருந்த கருத்துக்களின் முக்கிய பகுதியைப் புரிந்துகொண்டார் M.S.T. உமரை அவருக்குப் பிடித்துவிட்டது.

நம்மூரில் பெண்கள் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்பது M.S.T. அவர்களின் நீங்காத ஆசை. பெண்கள் கல்லூரி நிறுவ முயற்சி மேற் கொண்டிருந்தார். கற்றோர், பெற்றோர், மற்றோர் அனைவரயும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பல தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ‘கல்லூரி தேவை’ என்பது முடிவானது. இதைப்பற்றி நம்மூர்ப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியதாயிற்று. இதற்காகப் புள்ளி விவரம் எடுக்கவேண்டும். உமர்தம்பி மீது நம்பிக்கை வைத்திருந்த M.S.T. அவர்கள், அந்தப் பொறுப்பை உமரிடம் கொடுத்தார். ‘நம்மூரில் எத்தனை பேர், பெண்கள் கல்லூரியில் படிக்க விருப்பப்படுகிறார்கள்’ என்பதற்கான புள்ளி விவரம் தயரித்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். பைதுல்மால் புள்ளி விவரங்கள் தயாரிக்க உமர்தம்பிக்கு உதவ முன் வந்தது.

இந்தப் பணிக்காக பைத்துல்மால், படித்துவிட்டு வீட்டில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைப் பயன்படுத்தியது. இந்தப் பணிக்காகப் படிவங்கள் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டன. மாணவிகள் வீடு வீடாகச் சென்று தாய்மார்களிடம் வினாக்கள் தொடுத்து, தகவல்களைப் பெற்றனர். பெறப்பட்ட தகவல் படிவங்கள் உமரிடம் வந்தன. உமர் அவற்றின் உதவியைக் கொண்டு பெண்கள் கல்லூரி தொடர்பான புள்ளி விவரம் தயாரித்தார்.

புள்ளி விவரங்கள் எடுப்பதில் அவருக்கு இருந்த அனுபவங்களைப் பார்த்து நான் அயர்ந்து போனேன்! உமர் என் உள்ளதில் உயர்ந்து போனார்! கல்வியில் உமர் காட்டிய ஆர்வத்தையும், சொன்ன யுக்திகளையும் உணர்ந்துகொண்ட M.S.T. அவர்கள் அவருக்கு இமாம் ஷாபி மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர் பதவியை வழங்கி, அவரைப் பெருமைப் படுத்தினார். உமர் அதை தனது கடமையாக நினைத்தாரே தவிர பெருமையாக நினைக்கவில்லை!

நூல்களின் மேல் இருந்த ஆர்வம் காரணமாக, தனது மகன் மொயனுதீன் மற்றும் N.B.சாகுல் ஹமீது ஆகியோருடன் இணைந்து, காதிர் முகைதீன் கல்லூரி நூலகத்திற்கு ஒரு மென்பொருள் உருவாக்க முனைந்தார். மாணவர்களுக்கு நூல்கள் கொடுத்தல், திரும்பப் பெறுதல், புதிய நூல்களைப் பதிதல் போன்ற தகவல்களை அறிவிக்கும் ஒரு மென்பொருளை வடிவமைக்க முயற்சி மேற்கொண்டார்.

தனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியைத் தரக்ககூடிய ஒரு பொழுது போக்கு உமரிடம் இருந்தது. அதுதான் மீன் வளர்ப்பு!

powered by Blogger