வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 8

பகுதி – 8 (பத்திரிகை, தொலைக் காட்சி)


உமர்தம்பிக்கு சிறு வயதிலேயே பத்திரிகை படிக்கும் பழக்கம் வந்துவிட்டது.. நான் கல்கண்டு வாரப் பத்திரிகை வாங்கிப் படிக்கும்போது, அவரும் மர்மக் கதைத் தொடருக்காக கல்கண்டு படிப்பார். வாசிப்புத் திறன் வளர்ந்தவுடன் கேள்வி பதில், அரசியல் கட்டுரைகள், அறிவுக் கட்டுரைகள் முதலியன வாசிக்க ஆரம்பித்தார். நான் வாங்குவதற்கு முன்பே கடையில் போய் வாங்கிவிடுவார். தமிழ்வாணனுக்குப் பின் கல்கண்டின் இனிப்பு கரைந்துவிட்டது. அதைப் படிப்பதையும் நிறுத்திக்கொண்டார்.


துக்ளக் பத்திரிகை வெளிவந்த புதிதில் பரபரப்பாக விற்றுக் கொண்டிருந்தது. சோவுடைய கேள்வி பதில்களும், தலையங்கமும், வேடிக்கையான அரசியல் கட்டுரைகளும், மருத்துவரின் கட்டுரைகளும் சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதைத் தவறாமல் வாங்கிப் படிப்பார். பட்டுக்கோட்டைக்கு பஸ்சில் போகவர இருக்கும்போது, பஸ்ஸிலேயே துக்ளக்கைப் படித்து முடித்துவிடுவார் தமிழில் ‘இந்தியா டுடே’ நடு நிலை நழுவாமல் வந்துகொண்டிருந்தது. அந்தப் பத்திரிகையையும் படித்தார்.


எலக்ட்ரானிக் தொடர்பான பத்திரிகைகள் அஞ்சலில் வந்துகொண்டிருந்தன. தமிழ்க் கம்ப்யூட்டர், ELECTRONICS FOR YOU, P.C. MAGAZINE ஆகிய பத்திரிகைகளை சந்தா கட்டி வரவழைத்தார். அவற்றை விரும்பிப் படித்தார். அவற்றிலிருந்து புதுப்புது கண்டு பிடிப்புகளைப் பற்றி அறிந்துகொண்டார். அவற்றை தன் தொழிலில் கையாண்டார். கணினி, எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார்.


செய்தித்தாள்களில் இந்து மட்டும் படிப்பார். குமுதத்தில் வந்துகொண்டிருந்த சுஜாதாவின் கதைகளை விரும்பிப்படிப்பார். சுஜாதாவின் அறிவியல் தொடர்பான கதைகள் உமருக்குப் பிடிக்கும். செம்மொழி மாநாட்டில், சமீபத்தில் வாழ்ந்து இறந்துபோன ஐவர் பெயர்கள் இணையத் தமிழ் அரங்கங்களுக்கு வைக்கப்பட்டன. ஐவருள் இருவர், உமரும் சுஜாதாவும். பாக்யம் ராமஸ்வாமியின் அப்புஸ்வாமி கதைகள், ரா. கி. ரங்கராஜனின் மொழிபெயர்ப்புக் கதைகள் உமருக்குப் பிடிக்கும். உமருக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளர் அருணாச்சலம் என்பவர். இவர் எலக்ட்ரானிக் தொடர்பான புத்தகங்கள் நிறைய எழுதியிருக்கிறார். அதற்காக அவர் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவருடைய எழுத்துக்களால்தான் உமர்தம்பி, தன் அறிவியல் அறிவை நன்கு வளர்த்துக்கொண்டார். அருணாச்சலத்தினுடைய “ஓம்ஸ்ரேடியோஸ்” என்ற நிறுவனத்தில்தான் உமரும் அவர் நண்பர்களும் எலக்ட்ரானிக் பட்டயப் படிப்புப் படித்தார்கள்.


உமர்தம்பி துபை வந்த பிறகு கல்ஃப் நியூஸ், கலீஜ் டைம்ஸ் என்ற இரு செய்தித்தாள்களை வாசிக்கும் வழக்கம் இருந்தது. துபாயில் சமுதாயப் பத்திரிகைகளை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அவர்களிடம் ஒற்றுமை உணர்வு இல்லாததால் அவற்றைப் படிப்பதையும் விட்டுவிட்டார்.


உமருக்கு அரசியல் மேடைகள் பிடிக்காது. நடு நிலை அரசியல் விமரிசனங்களைப் படிக்கும் உமருக்கு அரசியல் வாதிகளின் பொய்யுரைகள் வெறுப்பைத் தரும். பட்டி மன்றங்கள் திட்டமிட்ட நாடகங்கள் என்று உணர்ந்து அவற்றை ஒதுக்கினார். இலக்கியப் பேச்சாளர்களில் இறையருள் கவிமணியை விரும்பினார். இறையருட் கவிமணி, கவிக்கோ, வைரமுத்து, மு.மேத்தா ஆகியோரின் கவிதைகளும் கவியரங்க மேடைகளும் உமருக்குப் பிடிக்கும்.


தொலைக் காட்சிகள் மூலம் தனது அறிவை வளர்த்துக்கொண்டார். உமருக்கு STAR TV., B.B.C., C.N.N., NDTV., DISCOVERY CHANNEL ஆகியன தீனி போட்டன. ZEE TV யில் ‘ஆப் கி அதாலத்’ என்ற நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பார். அந் நிகழ்ச்சியில் பிரபலங்களை அழைத்துவந்து அமர வைத்து, அவர்கள் பதில் சொல்லத் திணறக்கூடிய வினாக்களைத் தொடுப்பார் நிகழ்ச்சியாளர். அவர்களின் திணறல் அல்லது பதில் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவையாக இருக்கும். B.B.C. யில் அவர் விரும்பிக் பார்ப்பது HARD TALK. பெயரோடும் புகழோடும் இருப்பவர்களிடம் தொடுக்கப்படும் கேள்விக் கணைகள் அவை. ஆழமான, அழகான நிகழ்ச்சி அது.


இது தவிர இரண்டு உலகப் போர்களில் கலந்துகொண்ட பிரிட்டிஷ், ஜெர்மானிய, ஜப்பானிய வீரர்களின் அனுபவங்களைக் கேட்பார். விமானம், கப்பல் விபத்துக்கள், அதற்கான காரணங்கள், சாகச நிகழ்ச்சிகள் இவற்றை கவனத்தோடும் ஆர்வத்தோடும் பார்ப்பார். NDTVயில் பிரணாய் ராயின் BIG FIGHT, WALK THE TALK, அரசியல் மற்றும் பொது விவாதங்களைக் கேட்பார். ஸ்டார் டிவியில் That’s incredible , Believe It or Not மற்றும் National Geographic Channel- இல் ஒளிபரப்பாகும் “AIR CRASH INVESTIGATION” நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பார்.


சன் டி.வி. யில் மருத்துவர்களுடைய பேட்டிகள், வணக்கம் தமிழத்தில் வரும் பிரபலங்களின் சந்திப்பு, நேருக்கு நேர் ஆகியன உமர் விரும்பும் நிகழ்ச்சிகள். ஷார்ஜா டி.வி.யில் அபூ ஆமினாவின் பேச்சுக்களைக் கவனிப்பார் . ஜாகிர் நாயக், மற்றும் பிரபல இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொள்ளும் உரையாடல்களைக் கூர்ந்து கேட்பார்.


அகமது தீதாது உடைய பேச்சுக்கள் என்றால் உமருக்கு உயிர். அகமத் தீதாத் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர். தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர். எல்லா மதங்களைப் பற்றியும் கற்றுணர்ந்த அறிஞர். பிற மத அறிஞர்களோடு விவாதங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து வீட்டில் போட்டுப்பார்ப்பார். அகமது தீதாது ஒரு முறை துபாய் வந்திருந்தார். அவருடைய அருமையான பேச்சைக் கேட்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது. அதோடு அவரைச் சந்தித்துக் கை கொடுக்கும் பேறும் பெற்றோம்.


அவர் சொன்ன ஒரு செய்தியை மறக்கமுடியாது. “தீதாத் ‘அல் இஸ்லா’ சங்கத்திற்குப் பேச வருகிறார்” என்ற செய்தியை விளம்பரம் போட கலீஜ் டைம்ஸில் மறுத்துவிட்டார்கள். இதை தீதாத் வருத்தத்தோடு குறிப்பிட்டுச் சொன்னார். “அடுத்த முறை அந்தப் பத்திரிகை என்னுடைய விளம்பரத்தைப் போடாத வரை நான் துபாய்க்கு வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். தீதாத் மீண்டும் துபாய் வரவே இல்லை. சில மாதங்களில் சவூதி மருத்துவ மனையில் இறந்து போனார். அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் ஜாயித், அகமது தீதாதுக்கு பக்க பலமாக இருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது. அமீரகம் வந்தால் அதிபர் ஜாயிதைப் பார்க்காமல் போகமாட்டார் அஹமது தீதாத்.


ஜாகிர் நாயக்கின் வருகை ஓரளவுக்கு அகமது தீதாதின் இழப்பை ஈடு செய்தது. ஜாகிர், தீதாதின் வாரிசாகவே திகழ்கிறார். தீதாத், ஜாகிரை தீதாத் பிளஸ் என்றே வர்ணித்திருக்கிறார். உமர் ஜாகிர் நாயக்கின் வீடியோ கேசட்டுகளைப் போட்டுப் பார்ப்பார். ஜாகிர் நாய்க்தலைமையிலான டிரஸ்ட் PEACE TV என்ற தனி இஸ்லாமிக் தொலைகாட்சி சேனலை நடத்தி வருகிறது. அறிவியல் சார்ந்த இஸ்லாமிய உலக அறிவை விரிவாகப் பெறத் துடித்துக் கொண்டிருந்த உமர் இன்று இருந்திருந்தால் இந்தச் சேனலில்தான் மூழ்கி இருப்பார்.


தொடரும்...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி 7


உமர்தம்பிக்கு விளையாட்டுக்களில் ஆர்வமுண்டு; ஆனால் அவர் விளையாட்டு வீரர் அல்லர். விளையாட்டு நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தவர். அவ்வப்போது நடைமுறையில் உள்ள கிரிக்கட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆட்டங்களின் விதி முறைகளும் உமருக்குத் தெரியும். விளையாட்டுக்களைப் பார்த்து ரசிப்பதில் தனி மகிழ்ச்சி.

நான், உமர் சிறுவனாக இருக்கும்போது உலகக் குத்துச் சண்டைச் சாம்ப்பியனாக இருந்த முகம்மது அலியைப் பற்றி கதை போல நிறையச் சொல்வேன். பன்னிரண்டு வயதில் சைக்கிளைத் தொலைத்தது; ஒரு போலீஸ்காரரிடம் குத்துச்சண்டை பழகியது; அவர் சொல்லித் தராத வித்தைகளை எல்லாம் அவரிடமே காட்டியது; ஒலிம்பிக்கில் இரண்டு முறை வென்று தங்கப் பதக்கம் பெற்றது; குத்துச் சண்டையின் எல்லா ஜாம்பவான்களுக்கும் சவால் விட்டது என்று எல்லா செய்திகளையும் சொல்வேன். மிக ஆர்வமாகக் கேட்பார். பிறகு முகம்மது அலியின் சண்டையைப்பற்றி எந்தப் பத்திரிகையில் வந்தாலும் படிப்பார். இலங்கை வானொலியில் அலியின் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது நேரடி ஒலிபரப்பைப் பரபரப்பாகக் கேட்பார். இப்போது காற்று திசை மாறி அடிக்க ஆரம்பித்தது! முகம்மது அலி பற்றி உமர் எனக்குச் சொல்லத் துவங்கினார்! உமர் துபாய் வந்த பிறகு, அலி தனது குத்துச்சண்டை எதிரிகளான, ஜோபிரேஜியர், ஃபோர்மன், நார்டன் ஆகியோருடன் போட்ட பிரபலமான சண்டைகளின் வீடியோ கேசட்டுகளை வாங்கிப் போட்டுப் பார்த்தார்.

முகம்மது அலி ஓய்வு பெற்றார். அவர் பார்க்கின்சன் நோயால் துன்பப் பட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அமெரிக்காவில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்தன. அதன் இறுதி நாளில் அவருக்கு புகழாரம் சூட்டி தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனுடைய பின்னணிக் காரணத்தை உமர்தான் எனக்கு விளக்கினார்.

அமெரிக்காவில் தங்க முட்டை இடும் வாத்துக்களான கறுப்பர்கள் எவ்வளவு தான் தங்கப் பதக்கங்களைக் கொண்டு வந்து குவித்தாலும் அமெரிக்காவின் நிறவெறி நீங்கவில்லையே என்ற விரக்தியில் முகம்மது அலி, தான் இரண்டாவது முறை வாங்கிய ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டார். அவர் இழந்துவிட்ட இந்தத் தங்கப் பதக்கத்தை மீண்டும் பெறவும், அமெரிக்கா இழந்த கண்ணியத்தை மீட்டவும் அமெரிக்க ஒலிம்பிக்கில் அமெரிக்க அதிபரால் அலிக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது! அதை முகம்மது அலி கண்ணீர் மல்கப் பெற்றுக் கொண்டார். இளவல் தந்த தகவல் இது!

முகம்மது அலிக்குப் பின் குத்துச்சண்டை மேடையை உலுக்கிக் கொண்டிருந்தவர் மைக் டைசன் ஆவார். டைசனின் வெற்றிக் குவியல்களைப் பார்த்த உமர், ‘இவர் அலியின் சாதனைகளை உடைத்துவிடுவார்’ என்று சொன்னார். டைசன் விதியை மீறியதால் விதி அவரோடு மோதி அவரை வெளியேற்றியது. ஆனால் இஸ்லாம் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. டைசனின் இந்த வெற்றியை உமர் அறிவார். டைசன் உம்ரா சென்று வந்ததை உமர் அறியார். இறைவனின் ஏற்பாடு அப்படி!

உமர்தம்பிக்கு மல்யுத்தப் போட்டிகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். மகன்களோடு அமர்ந்து பார்த்து ரசிப்பார். கால் பந்தாட்டங்களில் அதிக ஆர்வம் உண்டு. உலகக் கோப்பையைவிட, ஐரோப்பிய கால்பந்து ஆட்டங்களைத்தான் மிகவும் விரும்பிப் பார்ப்பார். கால்பந்து ஆட்டக்காரர்களில் பிரேசிலின் பீலேயைத்தான் உமருக்குப் பிடிக்கும். அடுத்துதான் மரடோனா. ஊர் வந்த பிறகும் கால்பந்து ஆட்டங்களைப் பார்க்கும் ரசனை குறையவில்லை. அஃபா, குல்முகம்மது கால்பந்து போட்டிகளுக்கு தொடர்ந்து போகும் வழக்கம் இருந்தது.

பள்ளிக்கூடங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் செலுத்தினார். பள்ளியை விட்டு வெளியே சென்ற பிறகும் கூட வெளியூர்களுக்குச் சென்று நம் பள்ளியின் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு களிப்பார். ஆர்வமூட்டுவார். கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் நம் பள்ளி புள்ளிகள் பல பெற்று முன்னிலையில் இருந்த நேரம் அது.

நம் பள்ளியில் முன்பு பணியாற்றிய காதர் ஷரீப் சார் மாணவர் எழுவர் (STUDENT SEVENS) என்ற கால்பந்துக் குழுவை நிர்வகித்துவந்தார். இந்தக் குழு மாவட்ட அளவிலான பள்ளிகளின் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடும். பெரிய போட்டிகளிலும் கலந்துகொண்டு கோப்பையைக் கைப்பற்றும். இந்தக் குழு ஆடும் போட்டிகளுக்கு உமர் தவறாமல் போய்வருவார். தாஜுதீன் சார் (மறக்க முடியுமா?) எங்கள் குடும்ப நண்பர். தடகள விளையாட்டுப் போட்டிகளுக்காக மாணவர்கள் வெளியூர் செல்லும்போது உமரையும் அழைத்து வருவார். அந்த வீரர்களில் ஜபருல்லா, தாஜுதீன், சிராஜுதீன், சேக்தம்பி, அல்அமீன், இன்னும் சில சிங்கங்கள், குறிப்பிடத் தகுந்தவர்கள்.

ஒரு முறை மாணவர் ஜபாருல்லாஹ் 400 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் மாநில அளவில் கலந்து கொள்ள உடற் பயிற்சி ஆசிரியருடன் சென்னை சென்றிருந்தார். ஜபருல்லாவை ஊக்கப்படுத்துவதற்காக சென்னைக்கு நாங்கள் சென்றபோது உமர்தம்பியும் எங்களுடன் வந்தார்! ஜபருல்லாஹ் இந்த இரண்டு போட்டிகளிலும் நிச்சயமாக வெல்லக்கூடியவர். ஆனால் அவர் எங்கள் கையை விட்டுப்போய், போட்டி ஆரம்பிக்க சற்று நேரத்திற்கு முன் மைதானத்துக்கு வந்தார்! “நானூறைக் கோட்டை விட்டேன்; நான் நூறின் கோட்டையாவது முதலில் தொடுவேனா?” என்ற ஐயப்பாட்டில் இருந்தார். போட்டி துவங்கியது. இரண்டு வீரர்களை மிகவும் திறமையாக விரட்டி வந்தார்! ஜபருல்லா ஒரு மாற்றத்தைத்தருவார் என்று எதிர் பார்த்து சென்னை சென்றோம் . ஆனால் அவர் எங்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தார்!

உமர் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனைகள் கேட்பார். கிரிக்கட் வீரர்களில் கபில்தேவை மிகவும் பிடிக்கும். சென்னையில் நடந்த இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் டெஸ்ட் ஆட்டத்திற்கு, கபில்தேவ் ஆடுகிறார் என்பதற்காக சென்னை போய் ஆட்டத்தைப் பார்த்து வந்தார். மேற்கு இந்தியத்தீவு அணியில் லாராவையும் சந்திரபாலையும் உமருக்குப் பிடிக்கும். துபாய் வந்த பிறகு இரண்டு மூன்று முறை ஷார்ஜா சென்று கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்த்தார்.

உமர் ஒரு மாணவரையோ, தொழில் நுட்பம் அறிந்தவரையோ, விளையாட்டு வீரரையோ முதன் முதலாகப் பார்த்தால் அவரது எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லிவிடுவார்! இது ஜோசியம் அல்ல; உமரின் நுண்ணறிவு! ஒருமுறை ஷார்ஜாவில் இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கட் விளையாட்டுப் போட்டி நடந்தது. அந்த ஆட்டத்தில்தான் பாக்கிஸ்தானின் அதிவேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் அறிமுகமாகிறார். இதற்குமுன் அவரை யாரும் பார்த்தில்லை. வக்கார் ஷார்ஜாவில் படித்தவர். வக்காரின் பந்துவீச்சைப் பார்த்த உமர் கொஞ்ச நேரத்திலேயே சொல்லிவிட்டார் ‘இவர் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக வருவார்’ என்று! உமரின் வாக்கு வக்கார் விசயத்தில் சரியாகப் பலித்தது. ஒரு கட்டத்தில் யூனுஸ் உலகின் முதல் தர அதிவேகப் பந்து வீச்சாளராகப் புகழ் பெற்றார்! பச்சை வானத்தின் உச்சியைத் தொட்டார்!

தொடரும்...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 6




பகுதி – 6

எகிப்து ஓர் ஆப்பிரிக்கநாடு. நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் நாடு. மெசபடோமியா, சிந்துவெளி நாகரீகங்களுக்கு இணையான நாகரீகத்தைக் கொண்ட நாடு. காகிதத்தை உலகிற்குத் தந்த நாடு. உயர்வகைப் பருத்திக்குப் பெயர் பெற்ற நாடு. மிகப் பெரிய சூயெஸ் கால்வாயை தன்னகத்தே கொண்ட நாடு. பிரமிக்க வைக்கும் பிரமிடுகளைக் கொண்ட நாடு.

இப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட எகிப்து நாட்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை பானாசோனிக் தொலைபேசி நிறுவனம் நடத்தியது. அந்த நாடுகளில் தன் நிறுவனத்தின் தொலை பேசிக் கருவிகள் செயல்படுவதை மேலும் மேம்படுத்துவதற்காக பானாசோனிக் தொலைபேசி நிறுவனம், முயற்சியை மேற்கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக உமரை எகிப்துக்கு ஒமான் நேஷனல் அனுப்பி வைத்தது. உமர் போலவே தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஜப்பானிலிருந்தும் நிபுணர்கள் வந்திருந்தனர். நான்கு நாட்கள் கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டார் உமர். வல்லுநர்கள் தங்கள் அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

எகிப்துக்கு அங்கே உள்ள புராதனச் சின்னங்களைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டினர் வருகின்றனர். சூயெஸ் கால்வாய்க்கு அடுத்தபடியாக வருமானம் சுற்றுலாத் துறையிலிருந்துதான் கிடைக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள புராதனச் சின்னங்களை கண்டு வரலாற்று உண்மைகளை உணரலாம். இப்படிப்பட்ட இடங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பு உமருக்குக் கிடைத்தது.

எகிப்தில், நைல் நதிக் கரையில் அமைந்துள்ள ‘ஷெரட்டன்’ ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.. சிறப்பு மிக்க நைல் நதியின் அழகைக் கண்டு ரசித்தார் உமர். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்பைப் பயன் படுத்திக்கொண்டார். மேலும் சரித்திரச் சிறப்புடைய மற்றும் உலக அதிசயமான பிரமிட்கள், அதிலுள்ள மம்மிகள் ஆகியன பற்றியும் கேட்டறிந்து தன் அறிவுப் பெட்டகத்தில் வைத்துக் கொண்டார் உமர்!

துபாயில் நாங்கள் எகிப்தியர்களோடு பழகி வந்ததால், அங்கு உள்ள வாழ்க்கை முறையைப் பற்றிக் கேட்டேன். மக்கள் வருவாய்க்காக ஆளாய்ப் பறக்கிறார்கள் என்றார். சுற்றுலாப் பயணிகளுக்கு வழி காட்டுவதுதான் அவர்களின் வருமான மூலதனம். ஒரு வாடகை வண்டி ஓட்டுனர் உமரிடம் அவருடைய தொலைபேசி எண்ணைத் தந்து, “நீ அடுத்த முறை வரும்போது தவறாமல் எனக்கு போன் செய்” என்றாராம்! தொலை (பேசி) நோக்குத் திட்டம்!

அல்ஃபுத்தைம் குழுமத்தில் உமர் பணியில் சேருவதற்கு முன்னால்துபை கல்வி அமைச்சகத்தில், ஒலி, ஒளிக் காட்சி கல்வித் துறையில் வேலை பெறும் நோக்குடன் உமர், நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். இதற்கு ஏற்பாடு செய்தவர் அவர் நண்பர் அன்சாரி. ஒலி, ஒளிக் காட்சி கல்வித் துறைத் தலைவர் அவருக்கு சோதனை நடத்தினார். ஒரு தொலைக் காட்சிப் பெட்டியைக் காட்டி, “இதை இயங்க வைக்கவேண்டும்” என்றார். உமர் தொலைக் காட்சிப் பெட்டியின் பின் பக்கம் சென்றார். இரண்டு ஒயர்களைத் தொட்டார். ஒரு நிமிடம்தான்; தொலைக் காட்சிப் பெட்டி வேலை செய்யத் துவங்கிவிட்டது! அந்த ஒலி, ஒளிக் காட்சி கல்வித் துறைத் தலைவர் உமரைப் பாராட்டினார்: “ஹிந்தி, ஷைத்தான்!”. ஒயரைத் துண்டித்து வைத்திருந்தார் அந்த மேதாவி. நாம் அதற்கு மேல் தாவ மாட்டோமா? உமரை வேலைக்கு எடுக்கவேண்டும் என்பதில் அந்த அரபிக்கு சுயநல நோக்கம் இருந்ததால் அந்த வேலையில் உமர் சேர விரும்பவில்லை.

எகிப்திலிருந்து துபை திரும்பி வந்த உமர்தம்பிக்கு வேறொரு மாற்றம் காத்திருந்தது. உமர், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார். கம்ப்யூட்டர் நெட்வொர்க் பற்றி கற்றுக்கொண்டார். தான் பணிபுரியும் நிறுவனமான ஒமான் நேஷனல் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியது. அப்பொழுது மற்றவர்களுக்கு அதைப்பற்றி விளக்க வகுப்பும் நடத்தியுள்ளார். ஒமான் நேஷனல் நிறுவனத்தில் இவருக்குப் பதவி உயர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது!

துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network and System Administrator, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்படப் பணியாற்றியிருக்கிறார். ஒரு குழுவை நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது.

அல்ஃபுத்தைம் குழுமத்தில் பலதரப்பட்ட வாணிப (Diversified Business) நிறுவனங்கள் இருந்தன. அவற்றின் செயல்பாடுகளை மிகத் துல்லியமாக அறிவதற்காக அல்புத்தைம் குழுமம் E.R.P. (Enterprise Resource Planning) முறையை அனைத்து நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. அதற்காக உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் நாட்டு மென்பொருளான SAP (Systems Applications and Products also called Structural Analysis Program ) ஐத் தேந்தெடுத்தது. SAP மிகப்பெரிய நிறுவனங்களில் மட்டுமே செயல் படுத்தப்படும் மென் பொருளாகும். குழுமத்தின் தலைவர் முதல் கீழ் மட்டத்தில் உள்ள ஊழியர் வரை அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனத்தின் நிலையை தான் இருந்த இடத்திலிருந்தே புரிந்துகொள்ள முடியும். இது வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழி வகுக்கும்.

இதன் அடிப்படையில் குழும நிர்வாகத்தின் மேலாளர் தகுதியில் உள்ள ஒரு சிலர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தொழில் நுட்பத்துறையில் சேவைப் பிரிவில் உள்ளவர்களில், உமர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களுக்கு குழுமம் SAP மென் பொருளில்பயிற்சி கொடுத்தது. இவர்களைக் கொண்டு I.M.D. என்ற புதிய நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இதில் உமர் SAP மென் பொருளை நடைமுறைப்படுத்தும் ஒரு குழுவின் தலைவராக (SAP Implementation Team Leader for Divisions with Service Related Business) பணியாற்றினார். இதில் வந்து இணைந்த மேலாளர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பிப் போகவே இல்லை. எல்லாருக்கும் பணியையும் சம்பளத்தையும் மாற்றி அமைத்திருந்தார்கள். மேலாளர்கள் முன்பு பணியில் இருந்த இடங்கள் நிரப்பப்பட்டன. உமர்தம்பியின் இடமும் நிரப்பப்பட்டது. டிவி பழுது நீக்குநராக துபைக்குள் நுழைந்தவர், இப்போது System Engineer ஆக பதவி உயர்ந்திருந்தார்! பட்டப்படிப்பு மட்டுமே படித்தவர், பொறியியல் படிப்பு படித்தவருக்கு நிகராகப்பதவி உயர்வு பெற்றார் .

கணினி அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இப்போதுதான் அவருக்கு நிறையக் கிடைத்தது. பணியிலிருந்து திரும்பிவந்ததும் கணினியில்தான் அமர்வார். இணைய தளத்தின் வருகை நெட்வொர்க் பணியை எளிமைப்படுத்தியது. இணைய தளம் அறிமுகமான உடனேயே உமர் இ மெயில் முகவரியைப் பெற்றுக்கொண்டர். இணைய தளம் என்ற விசாலமான உலகில் பவணி வந்தார். தன்னுடைய அறிவுத் தாகத்தையும் தீர்த்துக் கொண்டார். அவருடைய அறிவுத் தேடலுக்கு இணைய தளம் வடிகாலாக அமைந்தது. இணையத்தின் இணையில்லாப் பயனை உணர்ந்து இணையத்திலேயே இணைந்திருந்தார்.

உமரின் அளப்பரிய ஆர்வமும் இடைவிடாத முயற்சியும்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அவரை இட்டுச் சென்றது. கன்னித் தமிழுக்கு கணினியில் இடம் வாங்கித் தந்தார். இன்று தமிழ் மக்கள் தட்டித் தட்டிக் கொடுத்து தமிழை வளர்க்கிறார்கள்!



powered by Blogger