வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 5




ஹஜ் பயணம்

உமர் அல் ஃபுத்தைமில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சக பாக்கிஸ்தானியர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானியர் கார் மூலமாகவோ பஸ் மூலமாகவோ ஹஜ்ஜுக்குப் போய் வருவதை அறிந்திருந்தார். இவருடன் பணி புரிந்த நண்பர்கள் உமர் ஹஜ் செய்வதை ஆர்வப்படுத்தினர். துபாயிலிருந்து கார், பஸ், விமானம் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்வது எளிது. அந்தக்கடமையை செய்துவிடுமாறு அடிக்கடி கூறுவர்.

உமர் என்னை ஹஜ் செய்துவரும்படி வற்புறுத்தினார். பொருள் ஈட்ட வந்த இடத்தில் ஹஜ் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஊட்டியவர் உமர்தான். அந்த நன்மையில் அவருக்கும் பங்கு உண்டு. நான் விமானம் மூலம் சென்று வந்தேன். ஆனால் உமர் தேர்ந்தெடுத்ததோ பஸ் பயணம்!


ஹஜ் சீசனில் ஹஜ்ஜுக்கு பஸ் மூலமாக அழைத்துச் செல்வதை சிலர் தொழிலாகவே துபாயில் நடத்தி வந்தனர். செலவு குறைவு; மிகவும் துன்பத்துக்குள்ளாக நேரிடும். இது உமருக்கு நன்கு தெரியும். மனைவியுடன் பஸ் மூலமாகப் போய் வர முடிவெடுத்தார். பஸ் பயணம் ஒத்து வருமா என்பது எங்கள் கவலை. உமர்தம்பி இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஹஜ் பயணத்தை மேற்கொண்டார். துன்பங்களை எதிர் நோக்க முன்பே ஆயத்தமாகிவிட்டதால் அவற்றைத் தாங்கிக்கொண்டார்.

சாலை எங்கும் போக்கு வரத்து நெரிசல். இடையிடையே சோதனைச் சாவடிகள் பொறுமையைச் சாகடித்தன. வாகனங்கள் ஊர்ந்துதான் செல்லும். தொலை தூரப் பயணமாதலால் குளிர்ச்சாதனம் தேவை; தொலை தூரப் பயணமாதலால் குளிர்ச்சாதனம் வேலை செய்யாது! நினைத்தால் இறங்கி அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. பஸ் நிறுத்தப்படும் இடங்களில் மட்டும்தான் இறங்க முடியும். அதுவும் தொழுகை, உணவு நேரங்களில் மட்டும்தான்.

துபாயிலிருந்து பஸ் புறப்படுவதற்கு முன் பயணிகள் அவர்களது உடைமைகளுடன் சரியாக இருக்கின்றார்களா என்று பார்க்கும்போது ஒருவருடைய பாஸ்போர்ட் காணவில்லை. இதற்காக மணிக் கணக்கில் காக்க வைத்துவிட்டார்கள். இறுதி செய்யப்பட்ட குழுவில் ஒருவர் வராமல் இருந்தால்கூட பயணம் ரத்தாகிவிடும். புதிய நடைமுறைகள் மேற்கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒருவாறாக தவறவிட்டதாக சொல்லப்பட்ட பாஸ்போர்ட் கிடைத்த பின்னர்தான் பயணத்தைத் துவக்கினார்கள்.

வியாபார நோக்கத்தோடு ஏஜெண்டுகள் செய்கிற தில்லுமுல்லுகளை சொல்லி முடியாது. துபாயில் சொல்லி அழைத்துவந்த மாதிரி நடந்து கொள்ளமாட்டார்கள். உமர்தம்பி சவூதியை அடைந்ததும் அவரவர், ஹோட்டலில் ஒதுக்கப்பட்டிருந்த இடங்ககளைப் பிடித்துக்கொண்டனர். உமர்தம்பிக்கும் அவர் மனைவிக்கும் இடம் ஒதுக்கப்படவில்லை. இரவு தங்க இடமில்லை. ஒரு நல்ல மனிதர் தன் இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே உமர் கண்ட காட்சி அவரது கோபத்தைச் சீண்டியது. ஏஜென்ட் அங்கே வசதியாகத் தங்கியிருக்கிறார். அவர் உமரைப் பார்த்ததும், “மன்னித்துக் கொள்ளுங்கள். இரண்டு பேர் இடம் கேட்டுக் கெஞ்சினார்கள். உங்கள் இடத்தைக் கொடுத்துவிட்டேன். துபாயில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்” என்றார். பிறகு இடம் ஒதுக்கித்தந்தார்.

உமர்தம்பி ஹஜ் செய்யச் சென்றிருந்த ஆண்டு (ஏப்ரல் 1997) , இதற்கு முன்னரும் பின்னரும் நடந்திராத ஒரு நிகழ்ச்சி ஹஜ்ஜில் ஏற்பட்டது. மினாவில் ஹாஜிகள் தங்கயிருந்த கூடாரங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. கூடாரத்துக்குள் கேஸ் அடுப்புகளை வைத்து சமைத்துக் கொண்டிருக்கும்போது கவனக்குறைவால் தீப்பிடித்துவிட்டது. இத்தீ எல்லாக் கூடாரங்களிலும் பற்றிக்கொண்டது. சில கூடாரங்களை விட்டுவிட்டு சற்று தள்ளியிருந்த கூடாரங்களும் எரிந்தன. நல்ல வேளை; அந்த நேரத்தில் பலர் வெளியில் நின்றனர். தீப்பிடித்தவுடன் உள்ளே இருந்தவர்களும் ஓடி வந்துவிட்டார்கள்! வெளியே வர முடியாதவர்களில் காயமடைந்தவர்களை ஹாஜிகள் வெளியில் தூக்கி வந்தார்கள். அவர்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. சிலர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர் இவர்களில் சுமார் 150 பேர் இந்தியர்கள். இவர்கள் இந்த நெருப்பினால் நிச்சயமான நெருப்பிலிருந்து தப்பியவர்கள்! என்றும் வற்றாத ஜீவ நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத்தைச் சுவைக்கப் போகிரவர்கள்! இன்ஷா அல்லாஹ்.

மினாவுக்குச் செல்லும்போது ஹாஜிகள் பெரும்பாலான உடைமைகளை தாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலில்தான் வைத்துவிட்டுப் போவார்கள். மினாவுக்கு, தேவையான உடைகள் மற்றும் பணம் இவற்றைத்தான் எடுத்துச் செல்வார்கள். ஹாஜிகள் கூடாரத்தில் வைத்துவிட்டுச் சென்ற பொருள்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. தீயில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக சவூதி அரசும் இந்திய அரசும் முயற்சிகள் எடுத்துக்கொண்டன.

தொலைக் காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு மனம் பதைத்தது. பலர் அங்குமிங்கும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள் என்று கேள்விப்பட்டோம். தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு, “அல்லாஹ் உதவியால் பெற்றோருக்கு எதுவும் ஆகியிருக்காது” என்று சொல்லி துணிவு ஊட்டினோம். துபாயிலிருந்து சவூதிக்குத் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டோம். “விவரம் சரியாகத் தெரியவில்லை; தெரிந்ததும் சொல்கிறோம்” என்றார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு உமரிடமிருந்தே போன் வந்தது. “நலமாக இருக்கிறோம். பொருள்கள் ஓட்டலில் இருக்கின்றன; கூடாரத்தில் இருந்த சில பொருள்கள் மட்டும் எரிந்துவிட்டன” என்றார்.

தீ விபத்தின் போது மக்கள் இங்குமங்கும் சிதறி ஓடியதால் ஹஜ் கடமையை பலரால் சரியாகச் செய்ய முடியவில்லை. சிலர் திருப்தியின்றி அடுத்த வருடங்களில் மீண்டும் ஹஜ் செய்ததாகக் கேள்வி! மினா விபத்திலிருந்து தப்பித்த உமர் தம்பதியர் அரபாத், முஜ்தலிபா கடமைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மினா திரும்பினர். இரண்டு நாட்கள் அங்கு தங்கி ஷைத்தானுக்குக் கல் எறிந்துவிட்டு, குர்பானி கொடுத்துவிட்டு, இறுதியாக தவாபைப் பூர்த்தி செய்துவிட்டு தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மதீனா சென்றனர். அங்கே ஒருவாரம் தங்கி, பள்ளியில் தொழுது, ஜியாரத்தும் செய்தனர். மீண்டும் பஸ் மூலமாகப் புறப்பட்டு துபை தேரா வந்து சேர்ந்தனர் ஹாஜிகள். அல்ஹம்துலில்லாஹ்!

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 4




உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கியவர் ஒரு சிந்தி; பகுதி 3-ல் சொல்லப்பட்டவர்தான். பாடியா பிரிவைச் சேர்ந்தவர். துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும் குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபையிலும் கராமாவிலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர்தம்பி கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூடத்தின் பொறுப்பாளராகப் பணி ஏற்றார்.

சத்வாவில் பணிபுரிந்த நான் பணிமுடித்து டாக்சியில் வந்து கராமாவில் இறங்கிவிடுவேன். உமர்தம்பி பணி முடித்த பிறகு இருவரும் மீண்டும் டாக்சியில் புறப்பட்டு பர்துபை வருவோம் அங்கிருந்து அப்ரா (படகு) மூலமாக தேரா வருவோம். இது கொஞ்ச நாட்கள் நீடித்தது.

உமர் பணி புரிந்த தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவந்து “இதை உடனே செப்பனிட வேண்டும்” என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக சிலர் செலவு எவ்வளவு ஆகும் என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை பணி முடிந்து வரும்போது தனக்கு தொலைக்காட்சி பெட்டி வேண்டும் என்றார். எல்லாம் பேசி முடித்து ஒத்துக் கொண்டபின் அவர் போய் விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியில் LOT(line output transformer) என்ற சாதனம் பழுதாகி இருந்தது. அது அவர்களிடம் இல்லாதததால் வெளியிலிருந்து வாங்கிவர நேரிட்டது. சற்று விலை கூடுதலான உதிரிப் பாகமும் கூட.

உமரின் பணியகம் மதியம் 1-லிருந்து 4 மணிவரை உணவருந்துவதற்காகச் சாத்தப் பட்டிருக்கும். உமர் மதிய உணவிற்குச் சென்றுவிட்டார். சில பணியாளர்கள் பணிமனையிலேயே உணவருந்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.

உமர் வழக்கம்போல் மதிய இடைவேளைக்குப் பின் அலுவலகம் திரும்பினார். அலுவலக கட்டிடத்தை நெருங்கும்போது சாலையில் தொலைக்காட்சி பெட்டியொன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று உற்றுப் பார்த்தபோதுதான் 'அவசரமாக வேண்டும்' என்று கொடுத்துவிட்டுப் போன அதே தொலைக் காட்சிப் பெட்டி என்று தெரிந்தது. உமருக்கு ஒன்றும் புரியவில்லை. அலுவலகத்தினுள் சென்றவுடன் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட்ட நபர் தலை கலைந்தவராக வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார். என்னவென்று வினவியபோது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

சுமார் இரண்டரை மணியளவில் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் வந்திருக்கிறார். வெளிக் கதவு சாத்தப் பட்டிருக்கவே அதைத் திறக்கும்படிக் கூறி, தன்னுடைய தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்வதற்காக வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டிய செப்பனிட்ட ஊழியர், அது செப்பனிடப் பட்டுவிட்டதாகவும் நான்கு மணிக்கு மீண்டும் பணியகம் திறக்கும்போது வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் தாம் வீட்டிற்குப் போகும் வழியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த ஊழியர் அது 'மதிய உணவு இடைவேளை' என்றும் மேலும் பொறுப்பாளர் 4 மணிக்குத் திரும்புவார் என்றும் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாகியிருக்கிறதென்ற விபரம் தனக்குத் தெரியாததால் 4 மணிக்கு வரும்படியும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர் தான் இல்லம் போய்த் திரும்ப நேரம் பிடிக்கும் என்றும் தன்னிடம் தற்போது பணம் இல்லாததையும், வீட்டிலிருந்துதான் எடுத்துவர வேண்டும் என்றும் தொலைக் காட்சிப் பெட்டியைத் தரும்படியும் கூறியிருக்கிறார். ஊழியர் மறுக்கவே வாய்ச் சண்டை முற்றி, இறுதியில் அந்த நபர் ஊழியரின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் அந்த தொலைக் காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வந்து சாலையில் எறிந்து விட்டார்.

தொலைக் காட்சிப் பெட்டியை செப்பனிட்ட அந்த ஊழியர் பம்பாய்காரர். நேரே 'பர்துபை' காவல் நிலையம் சென்று அங்கிருந்த மேலதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார். விபரங்களைக் கூறி, தன் கழுத்தில் ஏற்பட்ட நகக் காயங்களையும் காட்டியிருக்கிறார். அந்த நபரை விசாரிப்பதாக் கூறி ஊழியரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. மருத்துவ மனையிலிருந்து அந்த ஊழியர் திரும்பி வந்திருந்தபோதுதான் உமர் அலுவலகம் திரும்பியிருக்கிறார். (பெரிய காயங்கள் ஏதுமில்லை என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்)

சுமார் ஐந்து மணியிருக்கும். ஒரு போலீஸ்காரர் அலுவலகத்தினுள் நுழைவதைக் கண்ட உமருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதுதான் அந்த வாடிக்கையாளர் போலீஸ்காரர் என்று உமருக்கு தெரிய வந்தது. 'போலீஸ்காரர் சமாச்சாரம்தான் நமக்குத் தெரியுமே. அவர்களுடைய பொல்லாப்பு சங்லிப் பின்னல் மாதிரி போகுமே. ஏன் இந்த ஊழியர் இந்தச் வம்பை வாங்கிக் கட்டிக்கொண்டாரோ? பேசாமல் தொலைக் காட்சிப் பெட்டியை அவரிடம் தந்திருக்கலாமே' என்று உமர் எண்ணினார்.

அவர் உமரை நெருங்கி "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். உமரும் பதிலளித்தார். உமரிடம் அந்த தொலைக் காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாயிற்று என்றார். 350 திர்ஹம் என்றார். பணப் பையைத் திறந்து பணத்தைத் தந்துவிட்டு, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஏதோ ஒரு மன நிலையில் அப்படி நடந்து கொண்டேன். என் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க மாலையில் டி.வி. வேண்டும் என்று அடம் பிடித்ததால் அப்படி நான் நடந்து கொள்ள வேண்டியதாயிற்று." என்று சொல்லிவிட்டு அந்தப் பணியாளரிடம் மன்னிப்பும் கேடுக் கொண்டார். உமர், "சார் உங்கள் டி. வி.?" என்று வினவியபோது "கல்லி வல்லி (விட்டுத் தொலை)" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் உமர் அறிய வந்த செய்திகள் உமரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அந்த ஊழியர் மேலதிகாரியிடம் புகார் செய்த பின்னர் பணியிலிருந்து திரும்பிய அந்த போலீஸ்காரரை அந்த அதிகாரி மீண்டும் வரவழைத்து அவரைக் கடிந்துகொண்டு உடனே தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட ஆகும் தொகையை செலுத்திவிடுமாறு கூறியிருக்கிறார். இவைகளை கேள்வியுற்ற உமர் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார். நம் நாட்டில் போலீஸ்காரர்களை வேறு விதமாகவே பர்த்துப் பழகிய உமருக்கு ஒரு புது அனுபவமாகவே இருந்தது.

முதலாளி விசுவாசத்தோடும், துணிச்சலோடும் நடந்துகொண்ட அந்த இந்தியரையும், மேலதிகாரிக்குக் கட்டுப் பட்டு பெருந்தன்மையோடு நடந்து கொண்ட அந்தப் போலீஸ்காரரையும் நாம் மனமாரப் பாராட்டத்தான் வேண்டும். மனிதம் மாய்ந்துவிடவில்லை!.

தொடரும்....

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 3



சிறு வயதில் உமர்தம்பி நோயால் நோவினை அடைந்தார். அவர் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது டெட்டனஸ்என்ற வாய்ப்பூட்டு நோய் ஏற்பட்டது. இதில் பிழைப்பவர்கள் சிலரே! சிறுவர்கள் உள்ளங் காலில் புண் ஏற்பட்டால் அதைக் கவனிக்காமல், மாடு, குதிரை இவற்றின் சாணம் போன்றவற்றை மிதித்து நடந்தால் ஏற்படும் நோய். உடல் விறைத்துவிடும்; வாய் திறக்க முடியாது; சிறு ஒலியைக் கேட்டால் கூட தாங்கிக்கொள்ள முடியாது!

இந்த நோயால் பாதிக்கப்பட்டு 16 நாட்கள் தஞ்சை மிராசுதார் மருத்துவ மனையில் மருத்துவம் பார்க்கப்பட்டது. விலை உயர்ந்த ஊசி போடப்பட்டது. இதற்குப் பிறகு எங்களின் முழு கவனமும் உமர்மீது திரும்பியது. இந்நோயால் படிப்பு பாதிக்கப்பட்டது. அன்னையார் செல்லம் கொடுக்கத் துவங்கினார்கள்.

உமர் படிக்கும் காலத்திலேயே வேளா வேளைக்குச் சாப்பிட மாட்டார். நண்பர்களோடு ஆராய்ச்சிப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது கருவிகளோடு போராடிக் கொண்டிருப்பார். அம்மாவின் கூப்பாடும் சாப்பாடும் பெரிதாகத் தெரியாது. நேரத்திற்குச் சாப்பிடாததால் வயிற்றுப் புண் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் காலங்களில் வயிற்றுப் புண்ணால் மிகவும் அவதிப்பட்டார். வயிற்றில் புண்ணையும் கருவிகளில் கண்ணையும் வைத்திருந்ததால் எண்ணும் எழுத்தும் எட்டி நின்றன.

ஒரு முறை துபாயில் அவருக்கு அம்மை நோய் கண்டது. 15 நாட்கள் வேலைக்குச் செல்லாமல் அறையிலேயே தனியாக இருந்தார். ஆள் துணையின்றி மிகவும் துன்பப்பட்டார். பொறுமையாக இருந்தார். பொறுமைக்குப் பரிசும் காத்திருந்தது! இந்த கால கட்டத்தில் அவர் ஒரு இந்தியரிடம் வேலை செய்தார். அவர் ஒரு சிந்தி. கடைந்த மோரில் வெண்ணெய் ஒன்ஸ்மோர்கிடைக்குமா என்று பார்ப்பார். கஞ்ச நெஞ்சன். எதையும் சிந்தார்; எதையும் சிந்தியார்.

உதிரி பாகம் போடாமலே பழுது நீக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு, உதிரி பாகம் போட்டதாகச் சொல்லி பணம் வாங்கும்படிச் சொல்வார். உமரின் மனதுக்கு இது பெரும் உறுத்தலாக இருந்தது. இந்த இடத்தை விட்டு எப்படியும் வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த நேரத்தில் உமர் பணியாற்றிக் கொண்டிருந்த சிந்தியின் கடைக்கு ஒமான் நேஷனல் கம்பெனியிலிருந்து நேஷனல் தொலைக் காட்சிப் பெட்டிகள் பழுது நீக்குவதற்காக வந்தன. இதன் பொருட்டு அந்தக் கம்பெனிக்கு போய் வரும் வாய்ப்புக் கிட்டியது. மேலாளரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. மேலாளர் தன் நிறுவனத்திற்கு வந்துவிடும்படி உமரைக் கேட்டுக்கொண்டார்.

அம்மை நோயால் வீட்டில் இருந்த இந்த விடுமுறை நேரம் உமருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒமான் நேஷனல் மேலாளருடன் அடிக்கடி தொடர்புகொள்ள முடிந்தது. நேர்முகத் தேர்வு போன்முகத் தேர்வாக அமைந்தது. உமர் நேஷனலுக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். பணி ஆணை கிடைத்தது. விசாவுக்கும் ஏற்பாடு செய்தனர். துபை ஒமான் நேஷனல் நிறுவனத்தில் விசா பெற்ற உமர்தம்பிக்கு, நேஷனல் தொலைக் காட்சிப் பெட்டிக்கு சர்வீஸ் செய்பவராக பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. டிவி மட்டுமல்லாமல், நேஷனல், பானாசோனிக் நிறுவனங்களின் தயாரிப்புகள் எல்லாவற்றிலும் உமர் மன்னனாகத் திகழ்ந்தார்!

உமருக்கு குடும்ப விசா கிடைத்தது. புதுப்பிப்பதற்காக அனுப்பட்ட மனைவி, மக்கள் பாஸ்போர்ட் அப்போதிருந்த நெருக்கடி நிலை காரணமாக ஓராண்டுக்குப் பிறகுதான் கிடைத்தது. விசாவை பல முறை புதுப்பித்தோம். அதற்கு முன் உமரை அபுதாபிக்கு மாற்றிவிட்டார்கள். பாஸ்போர்ட் முன்னரே கிடைத்திருந்தால் மாற்றலாகி இருக்கமாட்டார். உமர் குடும்பத்தோடு அபுதாபியில் வசித்தார். கொடுக்கப்பட்ட வீடு தமிழர்கள், மலையாளிகள் அதிகம் இல்லாத பகுதி. அவர் வீடு இருந்த கட்டிடத்தில் அரபி பேசும் மக்கள் மட்டுமே இருந்தார்கள். இது அவரது மனைவிக்கும் மகன்களுக்கும் மிகுத்த தனிமையை ஏற்படுத்தியது. உமர் பணிகளுக் கிடையே வந்து பார்த்துப் போவார். இருப்பினும் மகழ்ச்சி இல்லை. பையன்களை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு வியாழனும் அபுதாபி சென்று விடுவேன். சனிக்கிழமை அப்படியே துபை வந்து என் பணிக்குச் சென்றுவிடுவேன்.

உமர் தன்னை துபாய்க்கு மாற்றித் தரும்படி கேட்டிருந்தார். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. துபாய்க்கு (தலைமையகம்) உமர் தேவை என்பதால் அவரை துபாய்க்கு மாற்றினார்கள். இப்போது உமர் குடும்பம் காகலகலப்புக்கு மீண்டது. எனக்கும் இரட்டிப்பு ஆதாயமாக ஆனது. உமர் அபுதாபியிலேயே இருந்திருந்தால் மேலாளர் பதவியை உடனே பெற்றிருந்திருப்பார். கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்படக்கூடாது அல்லவா?

தொடரும் ...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 2


இதற்கிடையில், உமருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது! இயற்கையிலேயே உமருக்கு இயற்பியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். நம் கல்லூரியில் இளங்கலையில் இயற்பியல் பாடம் இல்லை. வேறு வழியின்றி உயிரியல் (Zoology) பாடத்தை எடுத்துப் படித்தார்!

பறவைகள், மிருகங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அலாதியான ஆர்வம்! உலகிலேயே பறவை ஆராய்ச்சியில் மிகப் பிரபலம் அடைந்திருந்த சலீம் அலி பற்றி என்னிடம் நிறையச் சொல்வார்! இவ்வளவு ஆர்வம் இருந்தும், நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்வு பெறவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது! நன்கு படித்து, நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. ஆராய்ச்சிக்குத் தடை போட்டுவிட்டு, வருவாயைத் தேட முற்படுவதா?’ என்பார். தன்னிடமிருந்து அப்படியெல்லாம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பார்.


கடை நடந்த காலங்களில் பட்டுக்கோட்டைக் கண்ணப்பாவுக்கு உதிரி பாகங்கள் (spare parts) வாங்குவதற்காக அடிக்கடிச் செல்வார். இவருடைய திறமையை அறிந்த கண்ணப்பா முதலாளி, தன் கடையில் வந்து பணி செய்யும்படிக் கேட்டிருந்தார். காலச் சூழ்நிலை, பணி செய்யும்படி அவரை விரட்டியது. முன்பு ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கண்ணப்பாவில் பழுது நீக்கும் பணியில் அமர்ந்தார். 'பிலிப்ஸ்' ரேடியோவின் பழுது நீக்கும் பணி புரிந்தார். அப்போது தொலைக் காட்சி அறிமுகமான காலம்! பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை உமர் இயக்கிக் காட்டினார்!

மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்ற அவா இருந்தது. பொருளாதாரச் சூழ்நிலையையும் மீறிய ஆசை இது! அதைத் தவறு என்று சொல்ல முடியாது. எங்கள் வீட்டில் உள்ளவர்களின் மாத்திரைகளைப் படித்துப் பார்த்து, அதில் உள்ள மருத்துவக் குணங்களைச் சொல்வார்! இணைய தளம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அதில் போய் மருந்து மாத்திரைகளைப் பற்றியும், நோய்களைப் பற்றியும் அறியும் ஆர்வம் அதிகமாக இருந்தது உமருக்கு!



தனக்கு வந்திருந்த சர்க்கரை நோயைப் பற்றி நிறையப் படித்தார். ஆராய்ச்சி செய்தார்.

தொடரும்.....

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 1


உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி கிளே, தனக்கு வயது எட்டு மாதம் ஆனபோதே நடக்கத் துவங்கி விட்டாராம்! நம் உமர் தம்பியும் தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடந்துவிட்டார்!

ஏன் இந்த ஒப்பீடு? செயற்கரிய செயல்களைப் பிற்காலத்தில் செய்ய இருப்பவர்களின் தொடக்க வாழ்வு, பெரும்பாலும் இப்படித்தான் இருந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.

இரண்டு, மூன்று வயதில் தன் மழலை வாயால் திருக்குறள்களை ஒப்புவிப்பார்! அந்த வயதிலேயே டார்ச் விளக்கு மூடியைத் திறந்து, பேட்டரி செல்களை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு விளையாடுவார்! அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பே எடிசன், மார்க்கோனி, ஸ்டீவன்சன், ஜேம்ஸ் வாட் இவர்களைப் பற்றிக் கதையாகச் சொல்வேன். அவரை விஞ்ஞானி ஆக்கவேண்டும் என்பது என்னுடைய அன்றைய ஆர்வம்! பேராசைதான். தன் உடன்பிறப்பை உயர்ந்தவனாக ஆக்கிப் பார்க்க மூத்த சகோதரனுக்கு ஆசை எழுவதில் வியப்பில்லைதானே?


சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் மிக உண்டு! நமதூர் காதர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி முன்பு கீற்றுக் கொட்டகையில் நடந்தது. உமர் தம்பி ஆறாம் வகுப்பு ஆங்கில வகுப்பில் அமர்ந்துகொண்டு, அடுத்திருந்த ஏழாம் வகுப்பில் திரு. ரெங்கராஜன் சார் நடத்தும் அறிவியல் பாடத்தை உன்னிப்பாகக் கவனிப்பார்! அதை என்னிடம் வந்து சொல்வார்! திரு ரங்கராஜன் சார் வகுப்பு என்றால் நிரம்பப் பிடிக்கும் உமர் தம்பிக்கு.

மார்க்கோனியைப் போல வானொலிப் பெட்டி செய்யவேண்டும் என்று சிறு வயதிலேயே ஆசை! எங்கள் வீட்டு வாசலில் எப்போதும் சாக்பீஸ் பெட்டியால் செய்யப்பட ரேடியோ, அவரால் தொகுக்கப்பட்டது, பாடிக்கொண்டே இருக்கும்! பின்னாளில் உமர் தம்பி கும்பகோணத்தில் நடந்த கண்காட்சியில் ரேடியோ நிலையம் ஒன்றை அமைத்து, பாட்டுகளையும் செய்திகளையும் கண்காட்சிக் கூடம் முழுவதும் ஒலி பரப்பினார். நம் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியைத் தஞ்சை மாவட்டமே பாராட்டியது!

எங்கள் மாமா, ABC பிரிண்டர்ஸ் ஜனாப் S.M. அபூபக்கர் அவர்கள் உமர் தம்பிக்குத் தன் பொறுப்பில் ‘ABC ரேடியோ சர்வீஸ்என்ற பழுது நீக்கும் கடையைத் துவங்கித் தந்தார்கள். முறைப்படி 'லைசென்ஸ்' பெற்றுக் கடை நடந்துவந்தது.

இதற்கிடையில், மருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்த படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது! தொடரும்.....

powered by Blogger