வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 2
பறவைகள், மிருகங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அலாதியான ஆர்வம்! உலகிலேயே பறவை ஆராய்ச்சியில் மிகப் பிரபலம் அடைந்திருந்த சலீம் அலி பற்றி என்னிடம் நிறையச் சொல்வார்! இவ்வளவு ஆர்வம் இருந்தும், நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்வு பெறவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது! நன்கு படித்து, நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. ’ஆராய்ச்சிக்குத் தடை போட்டுவிட்டு, வருவாயைத் தேட முற்படுவதா?’ என்பார். தன்னிடமிருந்து அப்படியெல்லாம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பார்.
கடை நடந்த காலங்களில் பட்டுக்கோட்டைக் கண்ணப்பாவுக்கு உதிரி பாகங்கள் (spare parts) வாங்குவதற்காக அடிக்கடிச் செல்வார். இவருடைய திறமையை அறிந்த கண்ணப்பா முதலாளி, தன் கடையில் வந்து பணி செய்யும்படிக் கேட்டிருந்தார். காலச் சூழ்நிலை, பணி செய்யும்படி அவரை விரட்டியது. முன்பு ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கண்ணப்பாவில் பழுது நீக்கும் பணியில் அமர்ந்தார். 'பிலிப்ஸ்' ரேடியோவின் பழுது நீக்கும் பணி புரிந்தார். அப்போது தொலைக் காட்சி அறிமுகமான காலம்! பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை உமர் இயக்கிக் காட்டினார்!
மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்ற அவா இருந்தது. பொருளாதாரச் சூழ்நிலையையும் மீறிய ஆசை இது! அதைத் தவறு என்று சொல்ல முடியாது. எங்கள் வீட்டில் உள்ளவர்களின் மாத்திரைகளைப் படித்துப் பார்த்து, அதில் உள்ள மருத்துவக் குணங்களைச் சொல்வார்! இணைய தளம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அதில் போய் மருந்து மாத்திரைகளைப் பற்றியும், நோய்களைப் பற்றியும் அறியும் ஆர்வம் அதிகமாக இருந்தது உமருக்கு!
0 Response to "வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 2"
Post a Comment