கண்ணுக்குள் கண்ணாடி

நேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது கிடைத்த ஒரு தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடல்லாமல் ஆனந்ததையும் அளித்தது.

தடித்த கண்ணாடிகளை தவிர்க்க உதவும் ஒரு லேசர் சிகிச்சைபற்றிய தகவல் அது. லேசிக்(LASIK - Laser Assisted In-Situ Keratomileusis) எனப்படும் ஒருமுறை மூலம் லேசரை பாவித்து பார்வைக் கோளாரை சரி செய்யும் ஒரு வழி. இதை முதலில் அறிமுகம் செய்தவர் சிறீனிவாசன் என்கிற மைலாப்பூரைச் சேர்ந்த சென்னை வாசிதான் என்கிற தகவல்தான்என்னை அப்படி ஆச்சரியப் படுத்தியது. இந்த தகவலைத் தந்தவர் ஏதோ வழியே போகும் ஓர் ஆசாமி அல்ல. நேத்திராலயாவின் தலைவர்- பத்மபூ‡ன் விருதுபெற்ற கண் மருத்துவர்.

சில ஆண்டுகளுக்கு முன் அமீரகத்தில் படித்துக் கொண்டிருந்த என் மூத்த மகனுக்கு இந்த சிகிச்சை செய்ய நேர்ந்தது. -2.5 அளவுக்குகண்ணாடி அணிய வேண்டிருந்த அவன் அதை அணிவதை தவிர்த்து வந்ததால் பெரும் சிக்களுக்குள்ளானான். படிப்பில் தாழ்வு ஏற்படத்தொடங்கியது. நண்பர்கள் மத்தியில் கேளிக்குள்ளானதாலோஎன்வோ அது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவனே "கண்ணாடியில்லாமலே பார்வை சரி செய்கிறார்களாம்; நான்அதைச் செய்து கொள்ள வேண்டும்" என்றான். ஏதோ ஒரு வலைப் பக்கத்தில் இந்த செய்தியைக் கண்ட அவன் அதில் பிடிவாதமாகஇருந்தான். விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தபோது விசாரித்து அங்குள்ள பிரபல கண் மருத்துவ மனையில்(அகர்வால் கண் மருத்துவமனை) இந்த சிகிச்சை அளிப்பதறிந்து அங்கு செய்து கொண்டான். அப்போது ஒரு புதிய விடயமாகப் பேசப் பட்டது. அன்றிலிருந்து அவவன் கண்ணாடி அணியத் தேவையிருக்கவில்லை.

பொதுவாக இளம் வயதில் கிட்டப்பார்வை (அதாவது தூரத்தில் இருப்பது மங்கலாக தெரிவது - myopia) கோளாறுகள் ஏற்படுவது சகஜம். இதற்கு குழி கண்ணடிகளை அணிவது அவசியம். சில சமயங்களில் அதிக எண்ணுள்ள தடித்த கண்ணாடிகளை அணிய வேண்டியிருக்கும். கண்ணினுள் போட்டுக்கொள்ளும் லென்சு (contact lense) களை பாவிக்கலாம் என்றாலும் அதிலும் நிரம்ப சிக்கல் இருக்கிறது. இதற்கு இந்த லேசிக் சிகிச்சை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மற்ற கண் அறுவை சிகிச்சை போலல்லாமல் சிகிச்சைக்குப்பின் சாதரணமாக இருக்கலாம்.

இந்த முறை இளம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல பெண்களின் திருமணம் அமையாதிருப்பதற்கு தடித்த கண்ணாடிகளும் ஒரு காரணம்.

சரி இந்த முறையில் என்னதான் நடக்கிறது? நாம் லேசர் பற்றி அறிந்ததெல்லாம் சில விழாக்களில் நடக்கும் லேசர் ஓளி வேடிக்கைகள்தான். ஆனால் லேசர் என்ற ஒளிக்கற்றை எத்தையோ வகைகளில் கையாளப் படுகிறது. கணினியில் குறுந்தட்டை படிப்பதிலிருந்து ஏவுகணைகளை வழிகாட்டுவது வரை பல்வேறான வகைகளில் பயன்படுகிறது. அறுவை சிகிச்சையில் குறிப்பாக கண் மருத்துவத்தில் இதன் பங்கு அதிகம்.

கிட்டப் பார்வையை களைய வேண்டுமானால் குழி லென்சு அணியவேண்டும் என்பது நாம் அறிந்ததே(பள்ளி நாட்களில் படித்தவை நினைவில் வரவேண்டுமே!). அதாவது, கண்ணினுள் இருக்கும் குவி லென்சின் அளவு எண்ணை(power index) குறைக்க வேண்டும். வேறு விதமாகச் சொன்னால் அதன் தடிமனைக் குறைக்க வேண்டும். இறைவனால் கொடுக்கப்பட்ட அந்த லென்ஸ் அலாதியானது. சாதாரன கண்ணாடியல்லாமல் தேவைக்கேற்ப குவியத்தை மாற்றிக் கொள்ளக்கூடியது. அதில் கை வைப்பது அவ்வளவு உசிதமில்லை. அதற்கு பதிலாக முன்னால் இருக்கும் கார்னியா-cornia(கருவிழி பகுதி)வில் அந்த மாற்றம் செய்யபடுகிறது.

கார்னியா என்பது ஒரு கண்ணாடி போல் ஒளியைச் செலுத்தும் ஒரு திசு. தேவையான மாற்றத்தை அதில் செய்து விட்டால் பார்வையை சரி செய்து விடலாம். அதாவது கண்ணாடியாக அணியும் குழி லென்ஸ் என்ன விளைவைத் தருமோ அந்த அளவுக்கு அதை செதுக்கி எடுத்துவிட்டால் கண்ணாடி அணிந்த அதே நிலையைக் கொண்டு வந்துவிடலாம். இந்த செதுக்கும் வேலையைத்தான் லேசர் செய்கிறது. சரி, எவ்வளவு செதுக்கவேண்டும்? இதை முன்னமே கணிக்க வேண்டும். Auto-refractor என்ற கருவியின் துணைகொண்டு துள்ளியமாக கணிப்பார்கள்.

இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப் படுவது Excimer எனப்படும் ஒருவகை லேசர். இது குளிர் லேசர் வகையைச் சார்ந்தது. ஒரு நேனோ மீட்டர்(பில்லியனில் ஒரு பகுதி) அளவு விட்டத்தைவிட குறைவான அளவுதான் கண்ணினுள் செலுத்தப்படுகிறது. இது கார்னியாவின் முலக்கூறுகளை உடைத்து செதுக்குகிறது. சிகிச்சையின்போது லேசர் கற்றைகளை தொடர்ந்து செலுத்துவதில்லை. விட்டுவிட்டு செலுத்தப்படும். ஒவ்வொரு முறை செலுத்தப்படும்போதும் சிறிது சிறிதாக கார்னியா செதுக்கபடும். ஒரு மில்லி மீட்டரில் 1000 இல் ஒரு பங்கு அளவுக்குகூட துள்ளியமாக செதுக்கலாம். இந்த லேசர் செலுத்தப்படும் நேரம் (சுமார் 20 நொடிகள் - இது தேவைக்கேற்ப மாறும்) சிறிதே என்றாலும் அதற்குமுன் செய்யப்படும் சோதனைகளுக்கு சற்று நேரம் பிடிக்கும்.

இந்த சிகிச்சை முறை நிரந்தரமானதா? ஆம்; 90 சதவிகிதம் நிரந்தரமானதுதான்.
ஒரு சிலருக்கு மீண்டும் திருத்தம் தேவைப்படலாம். செலவு சற்று அதிகம்தான். வந்த புதிதில் இருந்ததைவிட இப்போது குறைந்திருக்கிறது.

என் பையன் அவனுடைய பழைய புகைப் படத்தைப் பார்த்து அவ்வப்போது சிரிதுக்கொள்வான். "இந்த தடிச்ச காண்ணாடியெ போட்டுக்கிட்டுதானே அலைஞ் சுக்கிட்டிருந்தேன்?"

யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்

இப்போது அனேகமாக எல்லா வலைத்தளங்களும் இயங்கு எழுத்துருக்களைப் பாவிப்பதில் நாட்டம் கொள்கின்றன. இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழ் எழுத்துரு இல்லாத கணினிகளும் தங்கள் பக்கங்களை காணச் செய்யலாம். இரண்டு, தங்கள் சொந்த எழுத்துக்களைக் கொண்டு(அது எம்மாதிரியான குறியேற்றமாக இருந்தாலும்) படிக்கச் செய்யலாம்.

தமிழில் குறியீட்டுத் தரம் இன்னும் ஒரு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் நாளுக்கொன்றாக துவக்கப் படும் இணைய சஞ்சிகைகள் இயங்கு எழுத்துருக்களை பாவிக்க வேண்டிருக்கிறது. இல்லையென்றால் பத்திரிக்கைக் கொன்றாக எழுத்துருக்களை நம் கணினியில் நிரப்ப வேண்டியிருக்கும். இயங்கு எழுத்துருக்களுக்கு வித்திட்ட நெட்ஸ்கேப் வேறு இடையில் எகிறிக்கொண்டது.

வலைத்தளங்களை அமைப்போரும் சரி, அல்லது வலைத்தள சஞ்சிகளை அளிப்போரும் சரி, இணையத்தில் தங்கள் ஆக்கங்கள் படிக்கப்பட்டால் போதும் என்று மட்டுமே எண்ணுகின்றனர். ஆனால் அவை பிறருடன் பரிமாறிக் கொள்ளுமாறு அமைவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் சில ஆக்கங்களை அச்சு எடுக்க வேண்டுமானாலும் சிக்கல்தான். இந்த நிலை மாறவேண்டுமானால் யுனிகோடே சரணம். யுனிகோடு தட்டச்சு செய்ய இயலுவதால் இப்போது பலதரப்பட்ட கணினி பாவிப்பாளரிடையே "ஒப்பன் ஆ(ஓ)பீஸ்" ஓர் எழுச்சியைக் கொடுத்திருக்கிறது

யுனிகோடு செம்மையாக அமைய வேண்டும் என்ற கருத்தில் பேதமில்லை. ஆனால் மிகக் காலம் தாழ்ந்த எழுச்சியென்றே தோன்றுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சோதனையாக தமிழ் யுனிகோடை வலையில் ஏற்றியபோது ஏதோ இருக்கட்டும் என்று விட்டுவிட்டோமா அல்லது அதில் மாற்றம் வரவேண்டும் என்பதை எல்லா பயனரும் அறியும் வண்ணம் விவாதிக்கப்படவில்லையா என்று தெரியவில்லை.

இனி பெரிதாக யுனிகோடில் மாற்றம் வராது என்பது மெல்ல உறுதியாகி வருவதால் யுனிகோடிற்கு மாறுவது தவிற்க இயலாதது. அறிந்தோ அறியாமலோ எல்லோரும் யுனிகோடை பாவிக்கும் காலம் வரப்போகிறது. இப்போது புதிதாக தொடங்கும் வலைத்
தளங்கள் யுனிகோடில் அமைகின்றன. இயங்கு எழுத்துருக்களுக்கு மவுசு குறையப் போகிறது. வேண்டுமானால் சில சித்திர(special charecters) எழுத்துக்களை மட்டுமே தோன்றச் செய்ய அது பயன்படலாம்.

இன்று அக்டோபர் 2

இன்று காந்தி பிறந்த நாள்.

தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக காந்தி சிலைக்கு மாலையணிவிப்பதும் மலர் வளையம் வைப்பதுமாக தொலைக் காட்சிகளில் காட்டப் பட்டனர். சிலரைப் பார்க்கும்போது உள்ளூர சிரிப்பு வந்தது. இவர்களுக்கும் காந்திக்கும் என்ன தொடர்பு? காலத்தின் கோலம் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறது.

நிச்சமாக காந்திஜி ஒரு தீர்க்கதரிசிதான். அவருக்குப் பின்னால் வரப்போகும் தலைவர்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்த எவ்வளவு எளிமையான வழியை குரங்கு பொம்மைகள் வழியாக நமக்கு சொல்லித்தந்திருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகள் எப்படி "நேர்த்தியாக" காந்தீய வழியைப் பின்பற்றிகின்றனர்? உண்மைகளைப் பேசுவதே இல்லை. எளியோருக்கு நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதே இல்லை. மக்கள் போடும் அவலக் கூச்சல்களை காதில் போட்டுக் கொள்வதே இல்லை.

இங்கு இரட்டைக் குவளை முடிந்தபாடில்லை. கீழவெண்மணிகள் ஓய்ந்தபாடில்லை.

அரசியல்வாதி என்ற ஜாதியில் எல்லாம் சர்வ சமம். இந்த ஜாதியில் தீண்டாமையில்லை. அரசியல் திருமணங்கள் ஜாதி பார்ப்பதில்லை. வேண்டியதெல்லாம் "ஓட்டு" என்ற சீதனம்தான். சீதனம் தகுமானதாக இருந்தால் ஜோடிப் பொருத்தம் தானாகவே அமைந்துவிடும்.

நல்லவேளை அக்டோபர் 2 காலண்டரில் இருக்கிறது. இல்லையென்றால் காந்தியின் நினைவுகள் எப்போதொ கரைந்து போயிருக்கும்.

காந்திக்கு போட்ட நாமம் வாழ்க!

எழுத்துச் சீர்மையும் யுனிகோடும்

எழுத்துச் சீர்மை பற்றி அவ்வப்போது பேசப் பட்டு வந்தாலும் கணினி பயன்பாட்டிற்கு வந்த பின் குறிப்பாக யுனிகோடு பயன்பாட்டிற்கு வந்த பின் அதிகம் பேசப்படுகிறது. காரணங்கள் இரண்டு. ஒன்று எழுத்துச் சீர்மை பற்றி கூறப்படுபவற்றில் சில இதில் அடங்கி இருக்கின்றன. இரண்டு யுனிகோடில் ஏற்படப்போகும் மற்றம் நிலையானது.

எழுத்து மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்து வந்தாலும் "னை", "லை" மாற்றங்கள் நாமறிந்து சமீப காலத்தில் வந்தவை. பெரியார் அறிமுகப் படுத்திய இந்த மாற்றம் அரசால் அங்கீகரிப்பட்டு மெல்ல எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போது சொல்லப்படும் உகர ஊகார மாற்றங்களும் அதைப் போன்றதே.

"னை, லை" மாற்றங்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளப் பட்டதற்குக் காரணம் புதிதாக எந்த எழுத்து வடிவங்களும் அறிமுகப் படுத்தப் படவில்லை. (இன்றும் நான் கையால் எழுதும்போது பழைய கொக்கி எழுத்துக்கள்தான் வருகின்றன). இம்மாதிரியான ஒரு மாற்றம் உகர/ஊகாரங்களுக்கும் வந்தால் ஏற்றுக்கொள்ளப் படும். அதாவது புதியதொரு வடிவத்தை அறிமுகப் படுத்தாமல் இப்போது இருக்கும் "¤", "¥" க்களையே பாவிக்கலாம். இம்மாதிரியான மாற்றங்கள் இப்போதிருக்கும் யுனிகோடில் இருக்கவே செய்கின்றன. இம்மட்டில் இருந்தால் உ/ஊ மாற்றங்களைச் செய்வதில் அவ்வளவு சிரமம் இருக்காது.

பொதுவாக ஒரு விடயத்தை கற்றுகொள்ளும்போது அது கரடுமுரடாக இருந்தாலும் கற்றுகொள்ள இயலும். ஆனால் கற்ற ஒரு விடயத்தில் மாற்றம் வந்தால் அதை எளிதில் ஏற்றுகொள்வது கடினம். குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போது குதர்க்கமான பலவற்றை கற்றுக்கொள்கின்றன. அது நாம் அறிந்து கற்றுக் கொடுப்பவையாக இருக்கலாம் அல்லது தானே அனுபவத்தில் கற்றுக் கொள்ளுபவையாக இருக்கலாம். ஆங்கிலம் கற்றுக் கொள்ளும்போது இல்லாத குதர்க்கமா? "put" என்னும்போது "புட்" என்கிறோம். "cut" என்னும்போது "குட்" என்று சொல்லுவதில்லை "கட்" என்கிறோம். அதை ஏற்றுக்கொண்டும் விட்டோம். ஆனால் இன்று ஒரு விதி வந்து "கட்"ஐ "குட்" என்றுதான் சொல்லவேண்டும் என்றால் என்ன நடக்கும்?

உ/ஊ மாற்றங்கள் புதிய வடிவுகளை புகுத்தாத வகையில் ஏற்றுக்கொள்ளப்படும் மாற்றங்களே. ஆனால் அதிரடியாக வேறு சில வந்தால் அவை தோல்வியில்தான் போய் முடியும்.

powered by Blogger