மூன்று வியப்புகள்!!!

சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்.,
சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!
உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;
உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!
சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;
நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;
வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;
மசியா மனிதரை மசிய வைப்பார்!
திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்
குட்டினால் அனுபவம்! இவைகளின்
சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்
சொந்தக்காலில் நின்ற செயலாளர்!
மடிக் கணினி வரு முன்னரே
மடியில் வைத்துத் தட்டச்சில்,
பணி ஆணைகள் பல அச்சிட்டு,
படித்தோர்க்குப் பலன் தந்தார்.
ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்
ஆளுமையில் அடங்கும் துறைகள்;
கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய்
மாட்டிக் கொண்டு குட்டுப் படும்!
வாசகமொன்று இவர் எழுதிடின்,
வக்கணை பேச யாருளர்? பிறர்
வாசகத்தை இவர் திருத்திடின்,
வாய்திறந்து மறுப்போர் யாருளர்?
அலுவலகங்களுக்கு ஓர் உடை,
விழாக்களுக்கு என்று ஓர்உடை,
பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை
என்ற வழக்கம் உடையாரல்லர்!
யாவும் உடையார்க்கு உயருடையா?
பயமே அறியார்க்குப் படை பலமா?
தளரா நடையே போதும் அவருக்கு,
அடையா இலக்கை அடைவதற்கு!
நீட்டோலை வாசியா நின்றவரை,
ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்!
படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,
பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.
பட்டறிவில்லா எம் போன்றோரை,
பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!
அறிவுரைகளால் அதட்டி என்னை
முது கலையை அடைய வைத்தார்!
ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;
ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்
பதவி நெருங்கும் வரை அவர்
அன்பில் எம் முயர்வு இருந்தது!
பரவட்டும் தாளாளர் புகழொளி
பாரெல்லாம்! வல்ல இறைவன்,
புவனப் பதவி பல தந்தவருக்கு
சுவனப் பதவியை வழங்கட்டும்!
A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)
முன்னாள் மாணவர், முது கலைப்
பட்டதாரி ஆசிரியர்,
காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி
ஒருமுறை நான் பட்டுக்கோட்டைக்குச் செல்வதற்காக சேர்மன் வாடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது,என் அருகில் காரை நிறுத்தி, “அஸ்ஸலாமு அலைக்கும். ஏறிக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி ஏற்றிச் சென்று என்னைப் பட்டுக்கோட்டையில் விட்டவர்தான், சப்னம் கட்டிடத்தின் சொந்தக்காரர் என்று அறிந்து கொண்டதுடன்,அவர் என் மாணவர் என்றும் அறிந்து பெருமை அடைந்தேன். அவர் சற்று சீரியஸ் ஆகக் காணப்பட்டார்! ஆனால் அவர் பெயர் அப்போது எனக்குத் தெரியாது! இப்போது ஹாஜா முகைதீன் சாரோடு நடந்த உரையாடலுக்குப் பிறகு, ஷப்னங்களின் சொந்தக்காரரும் ‘அதிரை நிருபர்’ மூலம் தன் உண்மை சொரூபத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சபீரும் ஒருவர்தானா? என்ற ஐயம், நடைப் பயிற்சி போல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஐயம் கொண்ட என் ஐயத்தைப் போக்க கவிஞர் சபீர் மேற்கண்ட விடையைத் தந்தார் கமெண்ட் மூலம்!
பெண்கள் வாக்கிங் போவது மிக நல்ல பழக்கம். அதுவும் ஹஜ் போக இருக்கும் பெண்களுக்கு மிக மிக அவசியம்! ஆனால்,வாக்கிங்கின் போது டாக்கிங் அனாவசியம். (அ)வசியம் தேவைப் பட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்! நடைப் பயிற்சி செய்யும் போது, பேச்சுக்கு நாமே தடை போட்டுக் கொள்ள வேண்டும்! இறைவனை நினைவு கூர்ந்தவர்களாக,தலை குனிந்தவர்களாக, விரைந்து நடந்து செல்ல வேண்டும்! அப்படிச் செய்தால் கண்டிப்பாக உடல் நலமும் மன நலமும் மிக நன்றாக இருக்கும்!
ஹஜ் கடமையைச் செய்கிறவர்களுக்கு, மக்காவை அடைந்ததிலிருந்தே வாக்கிங் துவங்கி விடுகிறது! வேறு எதையும் நோக்காமல், இறைவனின் நினைவுடன், தலை குனிந்தவர்களாக கஅபாவை நோக்கி நடந்து, அருகில் சென்று கஅபத்துல்லாவை நிமிர்ந்து பார்க்கவேண்டும். “இறைவா நான் இப்போது கேட்கும், இதற்குப் பின் கேட்கப் போகும், இதற்கு முன் கேட்டதுமாகிய துஆக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக” என்று துஆ செய்ய வேண்டும்.இனி நடைதான்! எங்கும் நடை, எதிலும் நடை! கஅபத்துல்லாவை ஏழு முறை நடந்து சுற்ற வேண்டும்! தொழுகைக்குப் பின் சபா - மர்வா மலைகளுக்குச் செல்ல வேண்டும்! சபா - மர்வா நான்கு முறைகளும், மர்வா - சபா மூன்று முறைகளும் நடக்க வேண்டும்! தலை முடி நீக்கியவுடன் அல்லது பெண்களுக்கு சிறிது முடி வெட்டப் பட்டதுடன் உம்ரா நிறைவேறிவிடும்! உற்றார், உறவினர், நண்பர்கள் யாருக்கு வேண்டுமானாலும், இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமானாலும் உம்ரா செய்யலாம்! தடையில்லா நடைகள்! இந்நடை தோற்கின் எந்நடை வெல்லும்?
கடமையான முதல் உம்ராவை முடித்த பின், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு நடந்து சென்று அங்கே தங்க வந்துவிட வேண்டும். அங்கிருந்து மினாவுக்குச் செல்கிற வரை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை கஅபாவுக்கு நடந்து சென்று தொழவேண்டும். பின்னிரவுத் தொழுகைக்காக இரவு 3-30மணிக்கு பாங்கு சொல்லி விடுவதால், ஒரு நாளின் நடைப் பயிற்சி அப்போதே தொடங்கி விடுகிறது! தங்குமிடம் கஅபாவுக்கு அருகில் இல்லாவிட்டால் தினமும் நடக்கும் தூரம் அதிகமாகிவிடும்!
மினாவிலிருந்து அரஃபாவுக்கும், அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கும், முஜ்தலிஃபாவிலிருந்து ஜம்ராவுக்கும் டாக்சி, பஸ் பயன்பட்டாலும் அங்கே நடைகளே ஆக்கிரமிக்கின்றன. கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதிலும்,சஃபா மர்வாவிலும் நடைதான்! இதற்குப்பின் குர்பானி கொடுத்து, மீண்டும் தவாஃபு செய்துவிட்டால், ஹஜ்ஜுக் கடமை நிறைவேறிவிடுகிறது! ஹஜ் கடமையைச் செய்யும்போது சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை தாமாகவே குறைந்து விடுகின்றன! அங்கே பெண்களுக்கு மத்தியில் ஷைத்தான் புகுந்து அரசியலை முடுக்கி விட்டு விடுவான். அரசியலில் மூழ்கிவிட்ட நம் மக்களுக்கு இது பொரி அரிசி வாசனையாகப் போய் விடும்! இதிலிருந்து மிகவும் ஒதுங்கி இருக்கவேண்டும்!
அகம் புற வாழ்க்கைக்கும், இகம் பரம சுகத்திற்கும் ஹஜ்ஜின் நடைப்பயிற்சி மிகவும் உறு துணையாகவும் பெரும் பயனாகவும் இருக்கிறது,
இந்த ஆண்டு ஹஜ்ஜில் கலந்து கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும், உலகின் பல பாகங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அதிரை பிபிசி மற்றும் அதிரை நிருபர் வலைக் குழுமங்களின் சார்பாக உமர்த் தென்றல், நன்னெறி நின்று, நபி வழி பயின்று தன் தியாகப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது!
எவ் வழி நல் வழி.
அவ் வழி நம் வழி!
வாழ்க மனித குலம்!
வாழ்க மனித நேயம்!
-வாவன்னா
மறக்க முடியா மனிதர்
‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது!
‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன்.
“The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த மாமனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக் கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ் வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார்!
60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது!
அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் மசூதிகளில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடு நிலைப் பள்ளி தொடங்கப் பட்டது. காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடு நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது! S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.
கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன் முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார்!
ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்
----