இனிப்பும் கசப்பும்

இன்று நவம்பர் 14. குழந்தைகள் தினம். இந்த இளந்தளிர்களின் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில் இன்னொன்றையும் நினைவுகூர வேண்டும். இன்று 'உலக சர்க்கரை குறைபாடு' உடையவர்களின் தினமும் கூட. சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை ஆட்கொள்ளும் நோய் என்பதுதான் பரவலாக எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இளந்தளிர்களையும் அது மிகவும் அலைக்கழிக்கும் என்பதுதான் உண்மை. பிறவியிலேயே அல்லது இளம் வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோயுடன் போராடும் சிறியோரும் அவர்தம் பெற்றோரும் படும் தொல்லை அளவிலாதது.

ஆனால் இன்றைய நவீன மருத்துவத்தின் உதவியாலும் அந்நோயைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதாலும் இந்நோயைச் சமாளிப்பது சாத்தியமாகியிருக்கிறது.

இந்நோயைப் பற்றியும் குறிப்பாக அறிகுறிகள், விளைவுகள் பற்றியும் அறிந்து கொள்ள பெரும்பாலோர் ஆர்வமாயிருக்கின்றனர். ஓராண்டிற்கு முன்னால் எழுத்தப்பட்ட இந்த கட்டுரை படிப்போருக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகிறேன்.

குறிப்பு:
இந்த கட்டுரை, சர்க்கரை நோயின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும்,
எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்வதற்கும் மேலும் அது
தொடர்பான வேறு சிக்கல்கள் எழாமல் பார்த்துக் கொள்வற்கும் உதவும்
தகவல்களைத் தரும் நோக்கில் எழுதப்பட்டது. இங்கு மருந்துகள் பெயரோ
பயன்படுத்தும் முறையோ தரப்படாது. ஏனென்றால் அம்மருந்துகள் மருத்துவரின் உதவியோடு அவரவருக்கு தேவையான அளவு தரப்பட வேண்டும். இக்கட்டுரையைப் படிக்கும்போது இதில் குறிப்பிடப்படும் அறிகுறிககள் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி குறுதிச் சோதனை செய்து கொள்வது நல்லது.

"என்ன சாப்பிடுகிறீர்கள்? 'டீ' அல்லது 'காபி'? - நண்பர்கள் சிலர் நம் இல்லத்திற்கு வரும்போது வழக்கம்போல் வினவினால், "ஏதேனும் ஒன்று... ஆனால் சர்க்கரை இல்லாமல்..." என்று சிலர் சொல்லக் கேட்பது வழக்கமாகிவிட்டது. 40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப்
பேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது. இன்று அன்றாடம் எப்படி ஒருவருக்கொருவர் இரத்த அழுத்த அளவை விசாரித்துக் கொள்கிறோமோ அதே போல் சர்கரையின் அளவைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் பத்து மடங்காக உயர்ந்து காணப்படும் இந்நோய், வேறு சில நோய்களின் தாயாக அமைந்து விடுகிறது. இந்த நோயைப் பற்றிய அறிவு நோயுற்றிருப்பவருக்கு இருப்பது மட்டுமல்லாமல் அவரை நெருங்கி இருப்பவருக்கும் தேவை. முதலில் இது ஒரு நோய்தானா என்ற வினா தொக்கி நிற்கிறது. இல்லை; இது ஒரு நோய் இல்லை - ஒரு குறைபாடு. எப்படி ஒருவருக்கு உடலுறுப்பு ஒன்றில் ஊனம் ஏற்படுகிறதோ
அதேபோல்தான் இதுவும். இது தொற்று அல்ல. உள்ளுறுப்பில் ஏற்படும் ஓர் ஊனம். Diabetes mellitus என்ற முழுப் பெயருடன் குறிக்கப் படும் இந்தக் குறைபாடு, பழங்காலம் தொட்டே அறியப் பட்டு வந்திருக்கிறது. 'இனிப்பு நீர்", "மதுர நோய்", "சர்கரை நோய்", "நீரிழிவு நோய்" என்ற பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. Diabetes mellitus என்ற பெயர் ஏற்படக் காரணமான ஒரு (ருசிகர?) தகவல்:

பழங்காலத்தில் வைத்தியர்கள் தன்னிடம் வரும் நோயாளியின் நோயின் தன்மையறிய அவர்களின் சிறு நீரைச் சுவைத்துப் பார்ப்பதுண்டாம். இந்த நோய் உள்ளவர்களின் சிறு நீர் இனிப்பாக இருக்கக் கண்டு "இனிப்பான சிறுநீர்" எனப் பொருள்படும் Diabetes mellitus என்ற பெயரை இட்டனராம்!

சர்க்கரை நோய் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.
வகை I (Type - I):
Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM) - இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் சர்க்கரை நோய்.

வகை - II (Type - II):
Adult onset diabetes - முது வயது சர்க்கரை நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத சர்க்கரை நோய்

மூன்றாவது வகையாக கர்ப்ப கால சர்க்கரை நோய்(gestational diabetes) - இது ஒரு தற்காலிகமான நிலை. சில பெண்களுக்கு இது ஏற்படக் கூடும். பேறு காலம் முடிந்ததும் சரியாகிவிடும். இது கிட்டத் தட்ட இரண்டாம் வகை போன்றதுதான்.

மேற்க்கண்டவை ஒரு பொதுவான பகுப்பு. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களும் இன்சுலின் எடுக்க வேண்டிய நிலை வரலாம். இன்சுலின் என்றால் என்ன, அதை ஏன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பது பற்றி ஒவ்வொரு வகையை விரிவாகக் காணும்போது விளங்கிக் கொள்ளலாம்.

முதலில் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில்(pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு "இன்சுலின்" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன. உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது? இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் "இன்சுலின்" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக(glycogen - கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது(பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாம்' போடுவதுமாதிரி!). அடுத்த உணவு கிட்டதபோதோ அல்லது உடலின் சக்தி செலவழிக்கப் படும்போதோ சேமித்து வைக்கப் பட்டிருக்கும் glycogen மீண்டும் சர்க்கரையாக மாற்றப் பட்டு உடலுறுப்புக்களுக்கு அளிக்கப் படுகிறது.
இப்படியான ஒரு செயல்பாட்டால் மீந்திருக்கும் சர்க்கரையை ஏதோ ஓர் காரணம் கொண்டு glycogen ஆக மாற்றி சேமித்து வைக்க வகையில்லதிருந்தால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை தங்கிவிடும். அப்படித் தங்கினால் வேண்டாத விளைவுகளை அது ஏற்படுத்தும். அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்? அவைகளைக் விரிவாகக் காண்பதற்கு முன்னால்
இந்த நோய் ஏற்பட்டிருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதைக் காணலாம்.

குறிப்பு:
கீழ்க் காணும்வற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் அச்சப் பட்டுவிடாதீர்கள். அது தற்காலிகமான ஒன்றாகக் கூட இருக்கலாம். அவை தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம்.

அறிகுறிகள்:
-அதிகப்படியான தாகம்
-அடிக்கடி சிறுநீர் போதல்
-அதிகமாப் பசித்தல்
-காரணமில்லாத எடை குறைவு
-உடம்பில் வலியெடுத்தல்
-சோர்வு
-காயங்கள் எளிதில் ஆறாமை
-அடிக்கடி சிறு சிறு நோய்கள் தொற்றுதல்
-சில நேரங்களில் பார்வை தெளிவின்மை.
மேற்கண்டவற்றில் சிலவோ அல்லது எல்லாமோ ஒருவருக்கு இருக்கலாம். இனி, இந்த குறைபாடு எப்படி வருகிறது என்பதையும் ஒவ்வொரு வகையின் தன்மையையும் காண்போம்.

வகை I
அதிகப்படியான சர்க்கரையை glycogen (கிளைக்கோஜன்) ஆக மாற்றி சேமித்து வைக்க கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் தேவையான ஒன்று என்று கண்டோமல்லவா? கணையம் இன்சுலினை சுரகத் தவறும்போது இந்நோய் வெளிப் படுகிறது. ஏன் இப்படி? இந்த இன்சுலின் சுரக்கக் காரணமாக இருக்கும் beta((பீட்டா) செல்கள் கணையத்தில் மிக மிகக் குறைந்தோ, அல்லது முழுவதுமாக இல்லாமலோ இருக்கலாம். இப்படி, பிறக்கும்போதே கூட சில இளம் நோயாளிகளுக்கு இருக்கலாம். அல்லது ஏதோ ஓர் காரணத்தால் அவை அழிக்கப் பட்டும் இருக்கலாம். இம்மதிரியான குறை, இளம் வயதில் (கிட்டத்தட்ட 20 வயதிற்குள்) தோன்றிவிடுவதால் இவ்வகையை Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் என்றழைக்கிறார்கள். இம்மதிரியான நோயாளிகளுக்கு இன்சுலினை வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்துவதைத்
தவிர வேறு வழி இல்லை.

வகை II
இரண்டாவது வகை வயதானவர்களுக்கு(40 வயதிற்கு மேல்) வருவதாகும். கணையதில் இருக்கும் பீட்டா செல்கள் அளவு குறைந்தோ அல்லது இன்சுலின் போதுமான அளவு சுரந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள இயலாத ஓர் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கலாம். இம்மாதிரியான குறைபாடுடையவர்கள் வாய் மூலம் உட்கொள்ளும் மருந்துகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் ஒரு நோயல்ல - ஒரு குறைபாடு. அந்தக் குறைபாட்டை மருந்துகள் உண்டோ அல்லது இன்சுலின் எடுத்தோ எவ்வழியிலாவது சரிசெய்ய முடியுமானால் வாழ்க்கையைச் சிக்கலின்றிக் கழிக்கலாம்.

முதல் வகையானது 10 விழுக்காடே காணப் படுகிறது. இரண்டாவது வகைதான் வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். ஒருவரின் உடற்கூறு, வாழும் வகை, உண்ணும் உணவு, செய்யும் தொழில் இவை எல்லாமே சர்க்கரை நோயின் அளவை நிர்ணயிக் கூடியவை.

ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை சர்க்கரை நோய் என்று அறிய வந்துவிட்டால்(கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற தற்காலிக வகை தவிர) அந்த 'வரத்தோடு' வாழ வேண்டியதுதான். ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒரு பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள்: சர்க்கரை நோய் நம்மை ஆளுவதற்கு முன்னால் அதை நாம் ஆளத் தொடங்கிவிட வேண்டும். அதனால்தான் சர்க்கரை நோயை treat செய்வதாகச் சொல்வதில்லை; manage செய்வதாகச் சொல்கிறோம். என்ன, முன் சொன்ன அறிகுறிகளில் சில உங்களுக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு குறுதிச் சோதனை செய்து கொண்டுவிட்டீர்களா? எல்லாம் சரியாக இருக்கிறதா?
வாழ்த்துக்கள். இல்லை, இரத்தத்தில் சர்க்கரை இருப்பதாகத் தெரிய வந்ததா? கவலையை விடுங்கள். அயர்ந்து போக வேண்டாம். இந்த உலகில் நீங்கள் தனித்தவரல்லர். உங்களோடு கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்களுள் இலட்சக் கணக்கான அறிவியலாளர்களும், பேராசிரியர்களும், பொறியிலாளர்களும், கணினி வல்லுனர்களும், மருத்துவர்களும், விளையட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்த நோய் கொண்டிருந்தும் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களும் உண்டு. அது ஏன் -
கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப் பந்தாளர்களில் ஒருவராகத் திகழும் வசீம் அக்ரம், இன்சுலின் எடுத்துக் கொள்ளும் ஒரு சர்க்கரை நோயாளிதானாம்!
சர்கரை நோயை முன்னறிய முடியுமா? அவற்றை தடுத்துக்க் கொள்ள முடியுமா? இக்கட்டுரையைப் படிக்கும்போது எல்லோர் மனதிலும் எழக்கூடிய முதல் கேள்வி. இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ பதில் சொல்ல இயலாது. காரணம், கணையத்தில் ஏற்படக்கூடிய கட்டி, கல்லடைப்பு, வீக்கம் போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப் படும் சூழ் நிலை தவிர இது உடம்பிற்குள்ளேயே முன் கணிக்கப்பட்ட(programmed) ஒன்றாக அமைந்து விடுகிறது. இதில் பாரம்பரியமும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. தாயோ அல்லது தந்தையோ சர்க்கரை நோயாளியாக இருந்தால் பிள்ளைகளுக்கும் வர அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி முன் கணிக்கப் பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள இயலுமா? கடினம்தான். ஆனால் இந்த நோய் தலைகாட்டப் போகும் சற்று முன் அறிந்து கொள்ள இயலும். இதற்கு GTT - glucose tolerance test(சர்க்கரை அளவை தாங்கும் தன்மை) ஒன்றைச் செய்து கொள்ளலாம். ஓர் இரவுப் பட்டினிக்குப் பின், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்(எடுத்துக்காட்டாக அரை மணிக்கொருமுறை) ஒரு குறிப்பிட்ட அளவு(50 - 100grams) கரைக்கப் பட்ட சர்க்கரையை(glucose)க் கொடுத்து அதே இடைவெளியில் இரத்ததை எடுத்து சோதனை செய்வர். ஒரு நோயில்லாத மனிதருக்கு சர்க்கரையின் அளவு அவ்வளவு ஒன்றும் கூடிவிடாது. ஆனால் நோய் இருக்கும் மனிதருக்கு அதன் அளவு கூடியே இருக்கும்.

பொதுவாக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பிருக்கிறது. உடல் எடையை அளவாக வைத்துக் கொள்ளுதல், தொடர்ந்த உடற்பயிற்சி, மனச் சிக்கல்(stress) இல்லாமல் பார்த்துக் கொள்ள்ளுதல் ஆகியவை இந்த நோயைத் தூர வைப்பதற்குண்டான வழியாகும்.

சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகமாகியிருக்கிறது. என்றாலும் பலருக்கு இந்தோய் இருப்பது தற்செயலாகவே தெரிய வருகிறது. வேறு ஏதாவது ஒரு நோய்க்காக குறுதிச் சோதனை செய்யும்போது குறுதியில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகத் தெரிய வரும்போதுதான் பலர் இந்த நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று அறிய வருகிறார்கள்.

நாம் முன்பு கண்டபடி இந்நோயின் சில அறிகுறிகளோடு(தாகம், அடிக்கடி சிறுநீர் போதல், சோர்வு போன்றவை) இதன் தாக்கம் நின்று விடுவதில்லை. அவ்வறிகுறிகள் இனி ஏற்படப் போகும் சிக்கல்களுக்கான முன்னோடிகள். சர்க்கரை நோய், வேறு பல நோய்களின் தாய் என்று சொன்னேனல்லவா? அவற்றுள் அச்சமுறுத்தும் நோய்கள் சில:

-கண்பார்வை பாதித்தல்
-சிறுநீரகங்கள் பழுதடைதல்
-இதய நோய்
-கால்களில் புரையோடிய புண்

அதிர்ந்து போய்விடாதீர்கள். சர்க்கரை நோய் ஆரம்பித்த ஓரிரு நாட்களில் இவை வந்துவிடுதில்லை. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காமல் ஆண்டுக் கணக்கில் தொடர விடுவோமானால் இவ்விளைவுகள் உண்டாகும். முதலில் தொடக்க கால அறிகுறிகளான தாகம், சிறுநீர் அடிக்கடி போதல் போன்றவை ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? இந்த சர்க்கரையும் அப்படித்தான். உடலுக்கு எரிபொருளாய் விளங்கினாலும் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. நம் சிறுநீரகங்களின் பணி, இரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவது. அவ்வகையில்தான் மீந்திருக்கும் சர்க்கரையும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு செய்யவேண்டியிருப்பதால் சிறுநீரகங்கள் அதிகமாகப் பணியாற்றி சிறுநீரை அதிகமாக வெளியேற்றுகிறது. எனவே உடலில் நீர் அளவு குறைந்து தாகம் எடுக்கிறது. இன்சுலின் சுரக்காததாலோ அல்லது இருக்கும் இன்சுலினை உடம்பு பயன்படுக்கொள்ள வகையில்லாததாலோ சேமித்து வைக்கப்பட்ட புரதத்தையும் கொழுப்பையும் உடல் இழக்க நேரிடுகிறது. அதன் விளைவாக உடல் இளைக்கிறது. இப்படியே இரத்தத்தில் சேர்ந்துவிடும் பொருட்களால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. விளைவு? உடலுறுப்புக்களுக்குப் போதிய இரத்தம் கிட்டாது. குறிப்பாக மிக நுண்ணிய இரத்த நாளங்களைக் கொண்ட கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை வெகுவாகப் பாதிக்கப் படுகின்றன. சிறு நீரகங்கள் செயல் இழக்க ஏதுவாகிறது. இதில் மிகக் குறிப்பாகக் கவனிக்க வேண்டியவை கண்கள். கண்களின் விழித்திரையில்(retina) மிக, மிக நுண்ணிய
இரத்த நாளங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளில் ஏற்படும் அடைப்புக்களால் அவை வெடித்து கண் உள்ளேயே இரத்தம் கசியலாம். இந்த அடைப்புக்களால் புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் தோன்றி அவை தடித்து விழித்திரையின் சமமான பரப்பை மேடுகளாக மாற்றலாம். அதன் விளைவாக ஒழுங்கில்லா உருவங்கள்(distorted images) தெரியலாம். இவைகளின் பின் விளைவுகள் பார்வை இழப்பாகவும் அமையும்.

இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பே இருதய நோய்க்கு வழி வகுக்கிறது என்பதை நாம் அறிவோம். சர்க்கரை நோயாளிக்கு இரத்த நாள அடைப்பு ஏற்படுவதால் இதயநோய் வருவதற்கு எளிதாக வழி வகுத்து விடுகிறது. இதய நோயாளிகளில் ஒரு கணிசமான அளவு சர்க்கரை நோய் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகளிடையே ஏற்படும் மற்றொரு சிக்கல், நரம்பு மண்டலம் பாதிக்கப் படுவதாகும். குறிப்பாக கால்களில் மெல்ல மெல்ல உணர்ச்சிகள் குறைந்து விடும். அதனால் ஏதேனும் அடித்தாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ கூட வலி தெரியாது. எனவே நோயாளி அதை கவனிக்காது அலட்சியம் செய்து விடுவார். மேலும் கால்களில் இரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதால் புண் எளிதில் ஆறாமல் விரைவில் பரவும். அதன் விளைவாக அப்பகுதியை வெட்டியெடுக்கும்படியாகக் கூட நேரலாம். இவையன்றி வேறு உறுப்புக்களும் பாதிப்படையலாம்.

சர்க்கரை நோயாளிக்கு ஏற்படக் கூடிய மூன்று 'pathy' களைப் பற்றிச் சொல்வார்கள்:
Nephropathy (நெப்ரொபதி) - சிறு நீரகக் கொளாறுகள் - செய்லிழத்தல்
Neuropathy (நியுரொபதி) - நரம்புகள் பாதிக்கப் படுதல்
Retinopathy (ரெட்டினொபதி) - கண் விழித்திரை பாதிப்படைதல் - பார்வை இழத்தல்

இவையல்லாமல் அவ்வப்போது தொற்றும் சில்லரை நோய்கள். மற்றவரைவிட சாதாரணமாக நம்மிடையே புழங்கும் சிறு சிறு நோய்கள்கூட இவர்களை எளிதில் பற்றிக் கொள்ளும். இந்த "இனிப்பு" நோயின் கசப்பான விளைவுகள் இவை.

மேற்கண்ட விளைவுகளைப்பற்றித் தெரிந்து கொள்ள முறையான சோதனைகள் தேவை. ஒரு முறையான - குறிப்பாக நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் தேவையான சோதனைகளைச் செய்வர். அவற்றுள் சில:

இரத்தம்:
- சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.
- கொழுப்பின் அளவு
- யூரியா(உப்பு)வின் அளவு
- ஈரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ª உதவும் சில சோதனைகள்

சிறுநீர்:
- சிறுநீரில் சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.
- சிறுநீரில் புரதம், அசிடோன்
- மேலும் சில சோதனைகள்

மேலும் ஒரு தேவையான சோதனை HbA1c எனப்படும் ஒரு குறுதிச் சோதனையாகும். இந்த சோதனை வசதி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சர்க்கரை நோய் சிறப்பு நிலையங்களிலோ அல்லது பெரிய இரத்தச் சோதனை நிலையங்களிலோ இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சர்க்கரை அளவின் சராசரியை இந்தச் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அவ்வப்போது செய்யப்படும் சர்க்கரைச் சோதனைகள் உணவிற்குத் தக்கவாறும் நேரத்திற்குத் தக்கவாறும் மாறுவதால்
இந்த HbA1c சோதனை ஒரு சரியான அளவுகோலாகக் கருதப் படுகிறது.
என்ன. இந்த "இனிப்பு" நோயின் கசப்பான விளைவுகளை அறிந்து கொண்டதும் அச்சமாக இருக்கிறதா? இந்தக்கட்டுரையின் நோக்கம், சர்க்கரை நோயின் கொடிய விளைவுகளை அறியத்தருவதும் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அதைச் சாமர்த்தியமாகவும் எளிதாகவும் கையாண்டு மேற்சொன்ன சிக்கல்களை தவிர்க்கும் வழிகளை அறியத் தருவதுமாகும். அச்சம் தவிருங்கள்; இனி ஆக வேண்டியவைகளைக் காண்போம். இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை எப்படி மேலாண்மை செய்வது? எவ்வாறு மேலும்
சிக்கல்கள் நேராமல் பார்த்துக் கொள்வது? கட்டுரையின் இந்த இரண்டாவது நோக்கத்தை இனிக் காண்போம்.

மூன்று தலையாய விடயங்கள் இந்த நோயை மேலாண்மை செய்வதிலே இருக்கின்றன.
1. உணவுக் கட்டுப்பாடு
2. தேவையான மருந்துகளைத் தவறாமல் எடுத்தல்
3. தெவையான அளவு உடற்பற்சி.

ஏன் உணவுக் கட்டுப்பாடு தேவை?
இந்தக் கட்டுரையின் துவக்கதில் கண்ட சில அடிப்படையான விடயங்களை மீண்டும் நினைவு கூர்ந்தால் உங்களுக்கு ஓர் உண்மை தெரியவரும். இரத்தத்தில் சேரும் அதிகப் படியான சர்க்கரையைச் சேமித்து வைத்துக் கொள்ள உடல் ஏதுவாக இருக்கவில்லை என்றும் அதனால்தால்தான் மேற்கண்ட சிக்கல்கள் தோன்றுகின்றன என்று கண்டோமல்லவா? ஏதாவது ஒரு வழியில் அதிகப்படியான சர்க்கரையைச் சேரவிடாமல் செய்துவிட்டால்? சிக்கல்களைத் தவிர்க்கலாமல்லவா? ஆம்; அதில் ஒன்றுதான் உணவுக் கட்டுப்பாடு. இந்த உணவுக் கட்டுப்பாட்டைக் கைக் கொள்ள வேண்டுமானால் முதலில்.உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரி(சக்தி) தேவைப்படும் என்று அறிய வேண்டும்.
ஒவ்வொருவரூக்கும் தேவைப் படும் கலோரியின் அளவு வேறுபடும். ஒருவரின் உடல் வாகு, செய்யும் வேலை, அவர் உடல் சக்தியை எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பன போன்றவை இதில் அடங்கும். ஒரு நல்ல 'Dietitian"(சத்துணவு நிபுணர்) இதனை கணக்கிட்டு அறியத் தரக்கூடும்.

தேவையான மருந்துகளை எடுத்தல்:
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் தகுந்த அளவுப்படி தகுந்த நேரங்களில் எடுக்கவேண்டும். சில மாத்திரைகள் கணையத்தைத் தூண்டி இன்சுலினை அதிகம் சுரக்கவைக்கும் வகையாக இருக்கலாம். சில, இன்சுலின் உடம்பில் தேவையான அளவு இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலிருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றலாம்.

சிலருக்கு இன்சுலினை ஊசிமூலம் தேவைக்கேற்ற அளவு ஒரு நாளில் ஒருமுறை, இருமுறை அல்லது மும்முறை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அவற்றிலும் விரைவாச் செயல்படக் கூடியது, மெல்லச் செயல் படக்கூடியது என இருக்கின்றன. அவை இரண்டும் கலந்த வகையும் கிடைக்கிறது. இதையும் சரியான நேரத்தில் சரியான அள்வு எடுக்க வெண்டும்.

உடற்பயிற்சி:
உடற்பயிற்சி மிக இன்றியமையாததாகும். வயதிற்கேற்ற, அவரவர் தேவைக்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். எவ்வகையானது எவருக்கு உகந்தது என்பதையும் மருத்துவர் அறிவுறுத்துவார். உடற்பயிற்சிகளில் எல்லாம் சுலபமானது, எவ்வயதினரும் செய்யக் கூடியது நடையாகும். ஒரு நாளில் குறைந்த அளவு 40 நிமிடம் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நடப்பது மிகத் தேவையான ஒன்றாகும்.

மேற்சொன்ன மூன்றையும் முறையாகச் செய்வோர் அச்சத்தைத் தூர வைத்துவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடரலாம்.

இறுதியாக, இநோயாளிகள் செய்யக் கூடியன, கூடாதன பற்றியும் மேலும் சில
தகவல்களையும் காண்போம்.

"உங்களுக்கு சர்க்கரை நோயா? அரிசிச் சோறு உண்ணாதீர்கள்;கோதுமை உண்ணுங்கள்" என்றும் "கேழ்வரகு இதற்கு நல்ல மருந்து" என்றும் பலர் உபதேசம் செய்யக் கேட்டிருக்கிறோம். சர்கரை நோயாளி, தான் ஏதோ ஒதுக்கி வைக்கப் பட்டவர்போல் உணரத் தொடங்கி விடுவார். சர்க்கரை நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்ற பத்தியமில்லை. அடிப்படையை விளங்கிக் கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவு
மெதுவாகச் செறிக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் செரிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும். கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு ஒன்றும் மருந்தல்ல. ஆனால் அதில் நார்ப்பொருள்(உமி) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். மற்றப்படி அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே(70%) மாவுப் பொருள் இருக்கிறது. மேலும். எந்த வகை உணவு உண்கிறோம் என்பது பொருட்டல்ல; எவ்வளவு உண்கிறோம் என்பதே பொருட்டாகும். பொதுவாக கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நலம். கீரை வகைகள் மிக நல்லது. ஒரு நாளைய உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் சர்க்கரை அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். நாம் முன்பு கண்டபடி மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவர். இது தவறாகும். மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என பரிந்துரைத்தாரோ அவ்வண்ணமே செய்ய வேண்டும். மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மறந்து விட்டால் போகட்டும் என விட்டுவிட வேண்டும். அவ்வறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும்.

அடுத்து உடற்பயிற்சி. பெரும்பாலும் நடையே பரிந்துரைக்கப் படுகிறது. உங்களுக்குள் ஒரு "வாக்" உறுதி(வாக்குறுதி) எடுத்துக்கொண்டு அதைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இதுவும் மருத்துவர் குறிப்பிட்ட அளவோடுதான் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செயதால் சர்க்கரை அளவு குறைந்து போகக்
கூடும். ஆக, எதுவாயினும் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கவேண்டும்.

சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். சர்க்கரை குறைவதற்குத்தானே இவ்வளவும் செய்கிறோம். குறைவதற்காக ஏன் அச்சப் படவேண்டும்? உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை கூடியிருப்பதைவிட வேண்டிய அளவில் மிகக் குறைந்திருப்பது அபாயகரமானதாகும். மயக்கம் வரலாம். இந்நிலை அதிக நேரம் தொடர்ந்தால் "கோமா"(Coma) நிலைக்குக் கூட போகலாம். சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

- உங்கள் சிறுநீரை அடிக்கடி(குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக்
கொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.

- வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்க்கக "One touch", "Gluco meter" போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவு உண்டபின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வெண்டும்.

- HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாததிற்கொருமுறை செய்து கொள்ள
வேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சரசரியைக்
காட்டும். அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்:

* 5.6% க்குக் கீழே - நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது
* 5.6% to 7% - சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள்
* 7% to 8% - ஒரளவு கட்டுப்பாடு
* 8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை
+ 10% க்கு மேல் - கட்டுப்பாடு மிக மோசம்

நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புக்கள்:
- உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் சர்க்கரை அளவு குறையலாம். அப்போது அது கை கொடுக்கும்.
- உங்களுடன் இருப்பர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு சர்க்கரை திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.

- உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பை காலை நெருக்காத அளவுக்குத் தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று அவதானியுங்கள்.

- கையிலோ அல்லது காலிலோ சூடு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.
- இரத்த அழுத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.
- வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள்.
எல்லவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள். உங்கள் உடம்பை நீங்கள் ஆள கற்றுக் கொள்ளுங்கள்; இனிமையான வாழ்வை எதிர் கொள்வீர்கள்!

இப்படியும் இருக்கு

நான் அமீரகத்திற்கு வந்த புதிது. ஒரு மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற்கூடத்தில் மேலாளராகச் சேர்ந்திருந்தேன். எங்கள் தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவந்து இதை உடனே செப்பனிட வேண்டும் என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாக பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக சிலர் செலவு எவ்வளவு ஆகும் என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை பணி முடிந்து வரும்போது தனக்கு தொலைக்காட்சி பெட்டி வேண்டும் என்றார். எல்லாம் பேசி முடித்து ஒத்துக் கொண்டபின் அவர் போய் விட்டார். அந்த தொலைக்காட்சி பெட்டியில் LOT(line output transformer) என்ற சாதனம் பழுதாகி இருந்தது. அது எங்களிடம் இல்லாதததால் வெளியிலிருந்து வாங்கிவர நேரிட்டது. சற்று விலை கூடுதலான உதிரிப் பாகமும் கூட.

எங்கள் பணியகம் பதியம் 1-லிருந்து 4 மணிவரை உணவருந்துவதற்காகச் சாத்தப் பட்டிருக்கும். நான் மதிய உணவிற்குச் சென்றுவிட்டேன். சில பணியாளகள் பணிமனையிலேயே உணவருந்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.

நான் வழக்கம்போல் மதிய இடைவேளைக்குப் பின் அலுவலகம் திரும்பினேன். அலுவலக கட்டிடத்தை நெருங்கும்போது சாலையில் தொலைக்காட்சி பெட்டியன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று உற்றுப் பார்த்தபோதுதான் 'அவசரமாக வேண்டும்' என்று கொடுத்துவிட்டுப் போன அதே தொலைக் காட்சிப் பெட்டி என்று தெரிந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அலுவலகத்தினுள் சென்றவுடன் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைத் திருத்திய நபர். தலை கலைந்தவராக வியர்க்க விருவிருக்க நின்றிருந்தார். என்னவென்று வினவியபோது கதையை அவிழ்க்க ஆரம்பித்தார்.

சுமார் இரண்டரை மணியளவில் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் வந்திருக்கிறார். வெளிக் கதவு சாத்தப் பட்டிருக்கவே அதைத் திறக்கும்படிக் கூறி, தன்னுடைய தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்வதற்காக வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டிய திருத்திய ஊழியர், அது திருத்தப் பட்டுவிட்டதாகவும் நான்கு மணிக்கு மீண்டும் பணியகம் திறக்கும்போது வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் ஒரு போலீஸ்காரர் என்பது அவர் சீருடையில் இருந்ததிலிருந்து தெரிய வந்திருக்கிறது. தாம் பணி முடிந்து நேரே வருவதாகவும் வீட்டிற்குப் போகும் வழியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு எங்கள் ஊழியர் அது 'மதிய உணவு இடைவேளை' என்றும் மேலும் மேலாளர் 4 மணிக்குத் திரும்புவார் என்றும் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாகியிருக்கிறதென்ற விபரம் தனக்குத் தெரியாததால் 4 மணிக்கு வரும்படியும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த போலீஸ்காரர் தான் இல்லம் போய்த் திரும்ப நேரம் பிடிக்கும் என்றும் தன்னிடம் தற்போது பணம் இல்லாததையும், வீட்டிலிருந்துதான் எடுத்துவர வேண்டும் என்றும் தொ. கா. பெட்டியைத் தரும்படியும் கூறியிருக்கிறார். ஊழியர் மறுக்கவே வாய்ச் சண்டை முற்றி, இறுதியில் அந்த போலீஸ்கார் ஊழியரின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் அந்த தொலைக் காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வந்து சாலையில் எறிந்து விட்டார்.

தொ. கா. பெட்டியை திருத்திய அந்த ஊழியர் பம்பாய்காரர். நேரே 'பர்துபை' காவல் நிலையம் சென்று அங்கிருந்த மேலதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார். விபரங்களைக் கூறி, தன் கழுத்தில் ஏற்பட்ட நகக் காயங்களையும் காட்டியிருக்கிறார். அந்த போலீஸ்காரரை விசாரிப்பதாக் கூறி ஊழியரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. மருத்துவமனையிலிருந்து அந்த ஊழியர் திரும்பி வந்திருந்தபோதுதான் நான் அலுவலகம் திரும்பியிருக்கிறேன். (பெரிய காயங்கள் ஏதுமில்லை என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்)

சுமார் ஐந்து மணியிருக்கும். அந்த போலீஸ்காரர் அலுவலகத்தினுள் நுழைவதைக் கண்ட எனக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. போலீஸ்காரன் சமாச்சாரம்தான் நமக்குத் தெரியுமே. போலீஸ்காரன் பொல்லாப்பு சங்லிப் பின்னல் மாதிரி போகுமே. ஏன் இந்த ஊழியன் இந்தச் சனியனை வாங்கிக் கட்டிக்கொண்டானோ? பேசாமல் தொ. கா. பெட்டியை அவனிடம் தந்திருக்கலாம்.

அவர் என்னை நெருங்கி "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். நானும் பதிலளித்தேன். என்னிடம் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாயிற்று என்றார். 350 திர்ஹம் என்றேன். பணப் பையைத் திறந்து பணத்தைத் தந்துவிட்டு, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஏதோ ஒரு மன நிலையில் அப்படி நடந்து கொண்டேன். என் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க மாலையில் டி.வி. வேண்டும் என்று அடம்பிடித்ததால் அப்படி நான் நடந்து கொள்ள வேண்டியதாயிற்று." என்று சொல்லிவிட்டு அந்த்ப் பணியாளரிடம் மன்னிப்பும் கேடுக் கொண்டார். நான், "சார் உங்கள் டி. வி.?" என்று வினவியபோது "கல்லி வல்லி(விட்டுத் தொலை)" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் நான் அறிய வந்த விடயங்கள் என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. எங்கள் ஊழியர் மேலதிகாரியிடம் புகார் செய்த பின்னர் பணியிலிருந்து திரும்பிய அந்த போலீஸ்காரரை அந்த அதிகாரி மீண்டும் வரவழைத்து அவரைக் கடிந்துகொண்டு உடனே தொ. கா. பெட்டியைச் செப்பனிட ஆகும் தொகையை செலுத்திவிடுமாறு கூறியிருக்கிறார். இவைகளை கேள்வியுற்ற நான் அச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன். நம் நாட்டில் போலீஸ்காரர்களை வேறு விதமாகவே பர்த்துப் பழகிய எனக்கு ஒரு புது அனுபவமாகவே இருந்தது.

கண்ணுக்குள் கண்ணாடி

நேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது கிடைத்த ஒரு தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடல்லாமல் ஆனந்ததையும் அளித்தது.

தடித்த கண்ணாடிகளை தவிர்க்க உதவும் ஒரு லேசர் சிகிச்சைபற்றிய தகவல் அது. லேசிக்(LASIK - Laser Assisted In-Situ Keratomileusis) எனப்படும் ஒருமுறை மூலம் லேசரை பாவித்து பார்வைக் கோளாரை சரி செய்யும் ஒரு வழி. இதை முதலில் அறிமுகம் செய்தவர் சிறீனிவாசன் என்கிற மைலாப்பூரைச் சேர்ந்த சென்னை வாசிதான் என்கிற தகவல்தான்என்னை அப்படி ஆச்சரியப் படுத்தியது. இந்த தகவலைத் தந்தவர் ஏதோ வழியே போகும் ஓர் ஆசாமி அல்ல. நேத்திராலயாவின் தலைவர்- பத்மபூ‡ன் விருதுபெற்ற கண் மருத்துவர்.

சில ஆண்டுகளுக்கு முன் அமீரகத்தில் படித்துக் கொண்டிருந்த என் மூத்த மகனுக்கு இந்த சிகிச்சை செய்ய நேர்ந்தது. -2.5 அளவுக்குகண்ணாடி அணிய வேண்டிருந்த அவன் அதை அணிவதை தவிர்த்து வந்ததால் பெரும் சிக்களுக்குள்ளானான். படிப்பில் தாழ்வு ஏற்படத்தொடங்கியது. நண்பர்கள் மத்தியில் கேளிக்குள்ளானதாலோஎன்வோ அது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவனே "கண்ணாடியில்லாமலே பார்வை சரி செய்கிறார்களாம்; நான்அதைச் செய்து கொள்ள வேண்டும்" என்றான். ஏதோ ஒரு வலைப் பக்கத்தில் இந்த செய்தியைக் கண்ட அவன் அதில் பிடிவாதமாகஇருந்தான். விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தபோது விசாரித்து அங்குள்ள பிரபல கண் மருத்துவ மனையில்(அகர்வால் கண் மருத்துவமனை) இந்த சிகிச்சை அளிப்பதறிந்து அங்கு செய்து கொண்டான். அப்போது ஒரு புதிய விடயமாகப் பேசப் பட்டது. அன்றிலிருந்து அவவன் கண்ணாடி அணியத் தேவையிருக்கவில்லை.

பொதுவாக இளம் வயதில் கிட்டப்பார்வை (அதாவது தூரத்தில் இருப்பது மங்கலாக தெரிவது - myopia) கோளாறுகள் ஏற்படுவது சகஜம். இதற்கு குழி கண்ணடிகளை அணிவது அவசியம். சில சமயங்களில் அதிக எண்ணுள்ள தடித்த கண்ணாடிகளை அணிய வேண்டியிருக்கும். கண்ணினுள் போட்டுக்கொள்ளும் லென்சு (contact lense) களை பாவிக்கலாம் என்றாலும் அதிலும் நிரம்ப சிக்கல் இருக்கிறது. இதற்கு இந்த லேசிக் சிகிச்சை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மற்ற கண் அறுவை சிகிச்சை போலல்லாமல் சிகிச்சைக்குப்பின் சாதரணமாக இருக்கலாம்.

இந்த முறை இளம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல பெண்களின் திருமணம் அமையாதிருப்பதற்கு தடித்த கண்ணாடிகளும் ஒரு காரணம்.

சரி இந்த முறையில் என்னதான் நடக்கிறது? நாம் லேசர் பற்றி அறிந்ததெல்லாம் சில விழாக்களில் நடக்கும் லேசர் ஓளி வேடிக்கைகள்தான். ஆனால் லேசர் என்ற ஒளிக்கற்றை எத்தையோ வகைகளில் கையாளப் படுகிறது. கணினியில் குறுந்தட்டை படிப்பதிலிருந்து ஏவுகணைகளை வழிகாட்டுவது வரை பல்வேறான வகைகளில் பயன்படுகிறது. அறுவை சிகிச்சையில் குறிப்பாக கண் மருத்துவத்தில் இதன் பங்கு அதிகம்.

கிட்டப் பார்வையை களைய வேண்டுமானால் குழி லென்சு அணியவேண்டும் என்பது நாம் அறிந்ததே(பள்ளி நாட்களில் படித்தவை நினைவில் வரவேண்டுமே!). அதாவது, கண்ணினுள் இருக்கும் குவி லென்சின் அளவு எண்ணை(power index) குறைக்க வேண்டும். வேறு விதமாகச் சொன்னால் அதன் தடிமனைக் குறைக்க வேண்டும். இறைவனால் கொடுக்கப்பட்ட அந்த லென்ஸ் அலாதியானது. சாதாரன கண்ணாடியல்லாமல் தேவைக்கேற்ப குவியத்தை மாற்றிக் கொள்ளக்கூடியது. அதில் கை வைப்பது அவ்வளவு உசிதமில்லை. அதற்கு பதிலாக முன்னால் இருக்கும் கார்னியா-cornia(கருவிழி பகுதி)வில் அந்த மாற்றம் செய்யபடுகிறது.

கார்னியா என்பது ஒரு கண்ணாடி போல் ஒளியைச் செலுத்தும் ஒரு திசு. தேவையான மாற்றத்தை அதில் செய்து விட்டால் பார்வையை சரி செய்து விடலாம். அதாவது கண்ணாடியாக அணியும் குழி லென்ஸ் என்ன விளைவைத் தருமோ அந்த அளவுக்கு அதை செதுக்கி எடுத்துவிட்டால் கண்ணாடி அணிந்த அதே நிலையைக் கொண்டு வந்துவிடலாம். இந்த செதுக்கும் வேலையைத்தான் லேசர் செய்கிறது. சரி, எவ்வளவு செதுக்கவேண்டும்? இதை முன்னமே கணிக்க வேண்டும். Auto-refractor என்ற கருவியின் துணைகொண்டு துள்ளியமாக கணிப்பார்கள்.

இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப் படுவது Excimer எனப்படும் ஒருவகை லேசர். இது குளிர் லேசர் வகையைச் சார்ந்தது. ஒரு நேனோ மீட்டர்(பில்லியனில் ஒரு பகுதி) அளவு விட்டத்தைவிட குறைவான அளவுதான் கண்ணினுள் செலுத்தப்படுகிறது. இது கார்னியாவின் முலக்கூறுகளை உடைத்து செதுக்குகிறது. சிகிச்சையின்போது லேசர் கற்றைகளை தொடர்ந்து செலுத்துவதில்லை. விட்டுவிட்டு செலுத்தப்படும். ஒவ்வொரு முறை செலுத்தப்படும்போதும் சிறிது சிறிதாக கார்னியா செதுக்கபடும். ஒரு மில்லி மீட்டரில் 1000 இல் ஒரு பங்கு அளவுக்குகூட துள்ளியமாக செதுக்கலாம். இந்த லேசர் செலுத்தப்படும் நேரம் (சுமார் 20 நொடிகள் - இது தேவைக்கேற்ப மாறும்) சிறிதே என்றாலும் அதற்குமுன் செய்யப்படும் சோதனைகளுக்கு சற்று நேரம் பிடிக்கும்.

இந்த சிகிச்சை முறை நிரந்தரமானதா? ஆம்; 90 சதவிகிதம் நிரந்தரமானதுதான்.
ஒரு சிலருக்கு மீண்டும் திருத்தம் தேவைப்படலாம். செலவு சற்று அதிகம்தான். வந்த புதிதில் இருந்ததைவிட இப்போது குறைந்திருக்கிறது.

என் பையன் அவனுடைய பழைய புகைப் படத்தைப் பார்த்து அவ்வப்போது சிரிதுக்கொள்வான். "இந்த தடிச்ச காண்ணாடியெ போட்டுக்கிட்டுதானே அலைஞ் சுக்கிட்டிருந்தேன்?"

யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்

இப்போது அனேகமாக எல்லா வலைத்தளங்களும் இயங்கு எழுத்துருக்களைப் பாவிப்பதில் நாட்டம் கொள்கின்றன. இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழ் எழுத்துரு இல்லாத கணினிகளும் தங்கள் பக்கங்களை காணச் செய்யலாம். இரண்டு, தங்கள் சொந்த எழுத்துக்களைக் கொண்டு(அது எம்மாதிரியான குறியேற்றமாக இருந்தாலும்) படிக்கச் செய்யலாம்.

தமிழில் குறியீட்டுத் தரம் இன்னும் ஒரு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் நாளுக்கொன்றாக துவக்கப் படும் இணைய சஞ்சிகைகள் இயங்கு எழுத்துருக்களை பாவிக்க வேண்டிருக்கிறது. இல்லையென்றால் பத்திரிக்கைக் கொன்றாக எழுத்துருக்களை நம் கணினியில் நிரப்ப வேண்டியிருக்கும். இயங்கு எழுத்துருக்களுக்கு வித்திட்ட நெட்ஸ்கேப் வேறு இடையில் எகிறிக்கொண்டது.

வலைத்தளங்களை அமைப்போரும் சரி, அல்லது வலைத்தள சஞ்சிகளை அளிப்போரும் சரி, இணையத்தில் தங்கள் ஆக்கங்கள் படிக்கப்பட்டால் போதும் என்று மட்டுமே எண்ணுகின்றனர். ஆனால் அவை பிறருடன் பரிமாறிக் கொள்ளுமாறு அமைவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் சில ஆக்கங்களை அச்சு எடுக்க வேண்டுமானாலும் சிக்கல்தான். இந்த நிலை மாறவேண்டுமானால் யுனிகோடே சரணம். யுனிகோடு தட்டச்சு செய்ய இயலுவதால் இப்போது பலதரப்பட்ட கணினி பாவிப்பாளரிடையே "ஒப்பன் ஆ(ஓ)பீஸ்" ஓர் எழுச்சியைக் கொடுத்திருக்கிறது

யுனிகோடு செம்மையாக அமைய வேண்டும் என்ற கருத்தில் பேதமில்லை. ஆனால் மிகக் காலம் தாழ்ந்த எழுச்சியென்றே தோன்றுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சோதனையாக தமிழ் யுனிகோடை வலையில் ஏற்றியபோது ஏதோ இருக்கட்டும் என்று விட்டுவிட்டோமா அல்லது அதில் மாற்றம் வரவேண்டும் என்பதை எல்லா பயனரும் அறியும் வண்ணம் விவாதிக்கப்படவில்லையா என்று தெரியவில்லை.

இனி பெரிதாக யுனிகோடில் மாற்றம் வராது என்பது மெல்ல உறுதியாகி வருவதால் யுனிகோடிற்கு மாறுவது தவிற்க இயலாதது. அறிந்தோ அறியாமலோ எல்லோரும் யுனிகோடை பாவிக்கும் காலம் வரப்போகிறது. இப்போது புதிதாக தொடங்கும் வலைத்
தளங்கள் யுனிகோடில் அமைகின்றன. இயங்கு எழுத்துருக்களுக்கு மவுசு குறையப் போகிறது. வேண்டுமானால் சில சித்திர(special charecters) எழுத்துக்களை மட்டுமே தோன்றச் செய்ய அது பயன்படலாம்.

இன்று அக்டோபர் 2

இன்று காந்தி பிறந்த நாள்.

தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக காந்தி சிலைக்கு மாலையணிவிப்பதும் மலர் வளையம் வைப்பதுமாக தொலைக் காட்சிகளில் காட்டப் பட்டனர். சிலரைப் பார்க்கும்போது உள்ளூர சிரிப்பு வந்தது. இவர்களுக்கும் காந்திக்கும் என்ன தொடர்பு? காலத்தின் கோலம் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறது.

நிச்சமாக காந்திஜி ஒரு தீர்க்கதரிசிதான். அவருக்குப் பின்னால் வரப்போகும் தலைவர்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்த எவ்வளவு எளிமையான வழியை குரங்கு பொம்மைகள் வழியாக நமக்கு சொல்லித்தந்திருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகள் எப்படி "நேர்த்தியாக" காந்தீய வழியைப் பின்பற்றிகின்றனர்? உண்மைகளைப் பேசுவதே இல்லை. எளியோருக்கு நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதே இல்லை. மக்கள் போடும் அவலக் கூச்சல்களை காதில் போட்டுக் கொள்வதே இல்லை.

இங்கு இரட்டைக் குவளை முடிந்தபாடில்லை. கீழவெண்மணிகள் ஓய்ந்தபாடில்லை.

அரசியல்வாதி என்ற ஜாதியில் எல்லாம் சர்வ சமம். இந்த ஜாதியில் தீண்டாமையில்லை. அரசியல் திருமணங்கள் ஜாதி பார்ப்பதில்லை. வேண்டியதெல்லாம் "ஓட்டு" என்ற சீதனம்தான். சீதனம் தகுமானதாக இருந்தால் ஜோடிப் பொருத்தம் தானாகவே அமைந்துவிடும்.

நல்லவேளை அக்டோபர் 2 காலண்டரில் இருக்கிறது. இல்லையென்றால் காந்தியின் நினைவுகள் எப்போதொ கரைந்து போயிருக்கும்.

காந்திக்கு போட்ட நாமம் வாழ்க!

எழுத்துச் சீர்மையும் யுனிகோடும்

எழுத்துச் சீர்மை பற்றி அவ்வப்போது பேசப் பட்டு வந்தாலும் கணினி பயன்பாட்டிற்கு வந்த பின் குறிப்பாக யுனிகோடு பயன்பாட்டிற்கு வந்த பின் அதிகம் பேசப்படுகிறது. காரணங்கள் இரண்டு. ஒன்று எழுத்துச் சீர்மை பற்றி கூறப்படுபவற்றில் சில இதில் அடங்கி இருக்கின்றன. இரண்டு யுனிகோடில் ஏற்படப்போகும் மற்றம் நிலையானது.

எழுத்து மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்து வந்தாலும் "னை", "லை" மாற்றங்கள் நாமறிந்து சமீப காலத்தில் வந்தவை. பெரியார் அறிமுகப் படுத்திய இந்த மாற்றம் அரசால் அங்கீகரிப்பட்டு மெல்ல எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போது சொல்லப்படும் உகர ஊகார மாற்றங்களும் அதைப் போன்றதே.

"னை, லை" மாற்றங்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளப் பட்டதற்குக் காரணம் புதிதாக எந்த எழுத்து வடிவங்களும் அறிமுகப் படுத்தப் படவில்லை. (இன்றும் நான் கையால் எழுதும்போது பழைய கொக்கி எழுத்துக்கள்தான் வருகின்றன). இம்மாதிரியான ஒரு மாற்றம் உகர/ஊகாரங்களுக்கும் வந்தால் ஏற்றுக்கொள்ளப் படும். அதாவது புதியதொரு வடிவத்தை அறிமுகப் படுத்தாமல் இப்போது இருக்கும் "¤", "¥" க்களையே பாவிக்கலாம். இம்மாதிரியான மாற்றங்கள் இப்போதிருக்கும் யுனிகோடில் இருக்கவே செய்கின்றன. இம்மட்டில் இருந்தால் உ/ஊ மாற்றங்களைச் செய்வதில் அவ்வளவு சிரமம் இருக்காது.

பொதுவாக ஒரு விடயத்தை கற்றுகொள்ளும்போது அது கரடுமுரடாக இருந்தாலும் கற்றுகொள்ள இயலும். ஆனால் கற்ற ஒரு விடயத்தில் மாற்றம் வந்தால் அதை எளிதில் ஏற்றுகொள்வது கடினம். குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போது குதர்க்கமான பலவற்றை கற்றுக்கொள்கின்றன. அது நாம் அறிந்து கற்றுக் கொடுப்பவையாக இருக்கலாம் அல்லது தானே அனுபவத்தில் கற்றுக் கொள்ளுபவையாக இருக்கலாம். ஆங்கிலம் கற்றுக் கொள்ளும்போது இல்லாத குதர்க்கமா? "put" என்னும்போது "புட்" என்கிறோம். "cut" என்னும்போது "குட்" என்று சொல்லுவதில்லை "கட்" என்கிறோம். அதை ஏற்றுக்கொண்டும் விட்டோம். ஆனால் இன்று ஒரு விதி வந்து "கட்"ஐ "குட்" என்றுதான் சொல்லவேண்டும் என்றால் என்ன நடக்கும்?

உ/ஊ மாற்றங்கள் புதிய வடிவுகளை புகுத்தாத வகையில் ஏற்றுக்கொள்ளப்படும் மாற்றங்களே. ஆனால் அதிரடியாக வேறு சில வந்தால் அவை தோல்வியில்தான் போய் முடியும்.

powered by Blogger