வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 12



... எனக்கும் உமருக்கும் அமீரகத்தில் இப்போது உறவும் இல்லை, வரவும் இல்லை; அதனால் எந்தப் பற்றும் இல்லை! எல்லாப் பணிகளையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிக் கொண்டு வரவேற்பறையில் அமர்கிறோம். அன்று தேதி செப்டம்பர் 11 2001. புறப்படுவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன! அந்த நான்கு நாட்களில் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் காணவேண்டும்; அல்லது தொலைபேசியில் அவர்களுடன் பேசவேண்டும். வீட்டுக்குத் தேவையான சில பொருள்கள் வாங்க வேண்டும். மீதி நாட்களில் உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம்.

உமர் சோபாவில் அமர்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் என் சிந்தனையைப் பின்னோக்கி ஓடவிடுகிறேன்! பள்ளி, கல்லூரி அளவிலும் மாநில அளவிலும் சித்திரத்தின் சரித்திரத்தில் முதல் இடம் பிடித்து, அறுபது வயது வரை கவலை இல்லை என்று சொல்லக் கூடிய தூய ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு, ஷெர்ஷாவையும் ஷாஜஹானையும் நடத்திச் சென்ற நான், அன்று இருந்த அரபு நாட்டுப் பயண அலையால் உந்தப்பட்டு துபாய் வந்ததையும், அடுத்த ஆறு மாதத்தில் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் எங்கள் குடும்பத்தின் தூணாக விளங்கிய, எங்கள் மரியாதைக்குரிய மச்சான் (சகோதரி கணவர்) S.M. முஹம்மது பாரூக் அவர்கள் திடீரென இறந்து போனதையும், அதனால் எங்கள் குடும்பம் தடுமாறியதையும், இப்போது அவர்களின் குடும்பத்தின் சுமை என் மீதும் உமர் மீதும் விழுந்ததையும், பட்டுக்கோட்டையில் சுதந்திரமாக இருந்த உமரை துபைக்கு வரவழைத்ததையும், கராமா கிளையில் உமர் தனி மனிதனாகப் பணி புரிந்ததையும், உமர் அஃல்பத்தைமுக்கு மாறும் வரை, நான் சத்வாவிலிருந்து மாலையில் கராமா வந்து உமரையும் கூட்டிக்கொண்டு டாக்சியிலும் படகிலும் சென்றதையும், உமர் அமீரகம் வந்து இரண்டு ஆண்டுகளுக்குள், வயதான எங்கள் தாய் தந்தையரை மீண்டும் பார்க்க முடியாமல் போனதையும், இந்தக் காலக் கட்டத்தில் பிரமச்சாரி அறையில் தங்கி இருந்ததையும், அதனால் உமர் அடைந்த கசப்பான அனுபவங்களையும் மன உளைச்சல்களையும் எண்ணிப்பார்க்கிறேன்.

உமர் அல்ஃபத்தைமில் பணியில் சேர்ந்து, குடும்ப விசா கிடைத்தும் அந்த நேரத்தில் இந்தியாவில் நிலவிய கெடுபிடி காரணமாக குடும்பம் வர ஓர் ஆண்டு தள்ளிப் போனதையும், திடீரென்று உமர் அபுதாபிக்கு மாற்றப் பட்டதையும், உமர் வாரம் ஒருமுறை என்னைப் பார்ப்பதற்காக துபாய் வந்து சென்றதையும், குடும்பம் வந்த பிறகு ஒவ்வொரு வியாழனும் நான் அபுதாபி சென்று விடுவதையும், எனக்குக் கதவு திறந்து விடுவதற்காக சிறுவர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருவதையும், சனிக்கிழமை காலை அபுதாபியிலிருந்து நான் என் துபாய் அலுவலகத்திற்குச் செல்லும்போது, உமரின் இரண்டாவது மகன் என்னை அண்ணாந்து பார்த்து, தன் இனிய மெல்லிய குரலில் ”பெரியப்பா! வரும் வியாழக்கிழமை வருவீர்களா?” என்று கேட்டு என்னை வழி அனுப்பி வைப்பதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

உமர் துபாய்க்கு மாற்றப்பட்டதும் பையன்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், துள்ளளையும், தனிமை நோயால் வாடிக் கொண்டிருந்த உமரின் மனைவிக்கு மனத் தெளிவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதையும், எங்கள் சகோதரிகளின் மக்கள் வருகையால் உமர் குடும்பம் மேலும் குதூகலத்தை அடைந்ததையும், அமீரகத்திலிருந்து நானும் உமரும் குடும்பத்தோடு ஹஜ் கடமையை நிறைவேற்றியதையும் அசைபோட்டுபார்க்கிறேன்!

“அட! இது என்ன புகையும் நெருப்பும்? கட்டிடமல்லவா எரிந்துகொண்டிருகிறது!” – ஓர் அலறல்! நான் திடுக்கிட்டேன்! எனது எண்ண அலைகள் சிதறிவிட்டன! “இங்கே வந்து பாருங்கள்! அமெரிக்காவின் வணிக வளாகத்தை! இரட்டைக் கோபுரங்களில் ஒன்று சரிந்துவிட்டது!” என்று உமர் கத்தினார், தன்னை மறந்து! இப்போது உமரோடு சேர்ந்து நானும் தொலைக் காட்சியைப் பார்த்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு விமானம் மற்றொரு கோபுரத்தின்மீது மோதியது! புகையும் நெருப்பும் கறுப்பும் சிவப்புமாகத் தெரிந்தன! கறுப்பு-சிவப்பு என்றாலே கஷ்டமும் நஷ்டமும் தானா? நான்கு நாட்களுக்கு நிம்மதியாக, சுதந்திர மனிதர்களாக இருக்கலாம் என்று எண்ணி இருந்த எங்களுக்கு மேலும் சோதனைகள்! 15- ஆம் தேதிக்கு டிக்கட் முடிவாகவில்லை. உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு முன்னறிவிப்புகள் கொடுக்கப்பட்டன! எங்கள் பயணம் தள்ளிப் போடப்பட்டு விடுமோ என்று நாங்கள் அஞ்சினோம்!

நல்ல வேலை, டிக்கட் தேதி உறுதி செய்யப்பட்டது. குறிப்பிட்டபடி செப்டம்பர் 15-ல் புறப்பட்டோம். இந்த முறை எங்களிடம் பொருள்கள் அதிகம் இல்லை. விசாவை ரத்து செய்துவிட்டு வருவதால் விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவில் முத்திரை பெற்று எங்கள் நிறுன ஊழியரிடம் தர வேண்டும். நானும் உமரும் ஒரே ஜன்னல் வழியாகப் பாஸ்போர்டைக் கொடுத்தோம். தந்தை பெயர், ஊர் பெயர் எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்ததால், அதிகாரி எங்களை ஏற, இறங்கப் பார்த்தார்! புத்திசாலி! புன்முறுவல் பூத்தார்! நாங்கள் முத்திரை பெற்ற தாள்களை எங்கள் நிறுவனங்களின் நபர்களிடம் கொடுத்து அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.

அனுமதிச் சீட்டு பெற்று விமானத்தில் ஏறினோம். எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். உமர்தம்பிக்கு சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சி எப்படி நடந்து என்பதை எனக்கு மீண்டும் விளக்கினார். ஊரிலிருந்து அதே ஜம்போஜெட் ஏர்இந்தியா விமானத்தில் உமர் துபாய் வந்தபோது விமானப் பணிப் பெண்கள் அவரிடம் நலம் விசாரித்ததையும் சொன்னார். எதையும் விடாமல் ஒப்புவிக்கும் பழக்கம் உமரிடம் இருந்தது. சிறு வயதிலிருந்தே ஒரு செய்தியை என்னிடம் விளக்கி முடித்தால்தான் அவர் ஆறுதல் அடைவார். “நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களோ இல்லையோ, ‘ஊம்! அப்படியா!’ என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள்” என்பார்.

விமானம் தொடர்பான அத்துணை செய்திகளையும் உமர் அறிந்து வைத்திருந்தார். என்ன என்ன வகையான விமானங்கள் இருக்கின்றன்; அவைகளின் அமைப்பு எப்படி; எவை பாதுகாப்பானவை; எவை ஆபத்தானவை; என்றெல்லாம் அறிந்து வைத்திருந்தார். தான் ஏறி அமர்ந்திருக்கும் விமானம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாய் இருப்பார். விமானம், எப்படி வடிவமைக்க பட்டிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பார்! இரண்டு மூன்று முறை நான் அவரோடு பயணம் செய்திருக்கிறேன். ஒரு முறை அவருடன் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் கேட்டார், “நாம் இப்போது. பயணம் செய்துகொண்டிருப்பது என்ன வகை விமானம் தெரியுமா? DC10 !” DC10 விமானம் பற்றி உமர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது வெற்றிகரமான விமானம் அல்ல! எங்காவது விமான விபத்து நடந்தால், “அது DC10 ஆக இருக்கவேண்டுமே” என்பார் உமர். அவர் சொன்னது சரியாக இருக்கும்! எங்கள் விமானமும் இந்த வகைதான் என்று அறிந்ததும் நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன், ’தம்பி உள்ளான் இ(எ)தற்கும் அஞ்சான்’ என்று!

DC-10 என்ற விமானம் McDonnell Douglas என்ற அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது மூன்று இயந்திரங்களுடன் அமைக்கப்பட்ட மிகப்பெரிய விமானமாகும். அதிகப்பட்சம் 380 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது! 1968 முதல் 1988 வரை DC-10 வகையில் 446 விமானங்கள் தயாரிக்கப்பட்டு, விமானக் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்டன. DC-10 அதிக அளவில் பயன்படுத்துவது FEDEX சரக்குகள் விமானப் பணிக்காகத்தான். இப்பொழுதெல்லாம் அநேகமாகப் பயணிகள் போக்குவரத்துக்கு DC-10 பயன்படுத்தப் படுவதில்லை. இவ்வகையான விமானம் 19 முறை விபத்திற்குள்ளாகி இருக்கின்றன!

ஒரு முறை உமர் சிங்கப்பூர் வழியாக ஊர் சென்றார். பயணம் செய்த விமானம் Dc 10 வகை! இந்த எண்ணம் அவர் உள்ளத்தில் பதிவாகிவிட்டது! தொழுகை நேரம் வந்ததும் விமானத்தின் பின் பகுதிக்குச் சென்று அங்கே தொழுதார். அப்போது விமானம் ஆடியது. உமர் ஏதோ ஒன்று ஆகிவிட்டது என்று பயந்துவிட்டார்! சற்று நேரத்தில் ஆட்டம் நின்றுவிட்டது. வேறு ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இருவரும் தொழுகை நேரம் வந்ததும் முன் பகுதிக்குச் சென்று தொழுது இருக்கிறோம். இறைவனை நினைக்கும் சரியான நேரமும் இடமும் அதுதானே! இறைவனிடமே தன்னை ஒப்படைத்துவிட்ட ஒருவருக்கு திடீர் விபத்து, உடனடி வெகுமதி! புவனம் கை விட்டுப்போனால், சுவனம் கை நீட்டி அழைக்கும்! இன்ஷா அல்லாஹ்!

இறைவனருளால் வானூர்தியில் சென்னை வந்து, புகைவண்டியில் ஊர்ந்து ஊர் வந்து சேர்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!

... தொடரும்

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 11


உமர்தம்பி ஊர் வந்த பிறகு எத்தனையோ முறை நான் துபையிலிருந்து போனில் பேசியிருக்கிறேன். இந்த விமானச் சம்பவத்தை என்னிடம் சொன்னதே கிடையாது! எங்கள் வீட்டில் உள்ளவர்களும் இதுபற்றிச் சொல்லவில்லை! உமர் துபை திரும்பிய பின்தான் சென்ற வாரம் விவரிக்கப்பட்ட செய்திகளை நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டேன்! உமர்தம்பிக்கு எப்போதுமே விமானம் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வது மிகவும் த்ரில்லிங்காக இருக்கும்! அந்த நிகழ்ச்சி அவர் வாழ்க்கையிலேயே நடந்துவிட்டது!

கட்டுரை வெளியான உடனேயே அதைத் தொடர்ந்து வெளியான பின்னூட்டங்கள் என் கட்டுரையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. இரத்தம் உறையும் நிகழ்ச்சிகள்! சந்தடி சத்தம் இல்லாமல் என் இரத்தத்தின் இரத்தங்கள் செய்திகளை எனக்கு மறைத்துவிட்டார்கள்! நான் துக்கத்தில் ஆழ்ந்து விடுவேனாம்! தூக்கத்தை துறந்து விடுவேனாம்! ஆழமான அன்புதான்! இவ்வளவு ஆழத்திலா புதைத்து வைப்பது?

உமர்தம்பி இந்த முறை ஊரிலிருந்து வந்தபோது குடும்பம் வரவில்லை. குடும்பம் இல்லாததால் சப்பாட்டுக்குத் திண்டாடினோம். ஓட்டல் உணவு உமருக்கு ஒத்துவரவில்லை. துபாய் வந்து இரண்டு நாட்களில் காய்ச்சல் வந்துவிட்டது மருத்துவரிடம் காட்டியும் குணமாகவில்லை. இரத்தப் பரிசோதனைக்குப் பிறகுதான் டைபாய்டு என்று தெரிய வந்தது.

இது சோதனையான நேரம். விடுமுறை எடுத்துக்கொண்டு உமர் வீட்டில் இருந்தார். டைபாய்டினால் மிகவும் துன்பமுற்றார். நான் வேலைக்குப் போய்விட்டால் அவரைக் கவனித்துக்கொள்ள ஆள் கிடையாது. நண்பர்கள், உறவினர்கள் என்று எண்ணற்றோர் இருந்தும் அவர்களைப் பயன் படுத்திக்கொள்ள முடியாது. அவரவர் வேலை அவர்களுக்கு. துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொண்டார் உமர். டைபாயிடு நோய் வந்த பிறகு உடல் மிகவும் பலஹீனமானது. வழக்கமாக இனிப்பும் கசப்பைச் சேர்த்துக் கொண்டிருந்தது. பணியும் பிணியும் அவரைப் பின்னிக் கொண்டிருந்தன.

பணியைத் துறந்து ஊருக்குப் போய்விடலாமா என்ற முடிவுக்கு வந்தார் உமர். துபாய் வந்து ஒரு வருடத்திலேயே தனக்கு துபாய் வாழ்க்கை பிடிக்கவில்லை என்று சொன்ன உமர், இவ்வளவு தாக்குப் பிடித்ததே பெரிய காரியம். 18 ஆண்டுகள் பணியாற்றிய உமர் 2001 செப்டம்பரில் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். நானும் அதே முடிவுக்கே வந்தேன். இருவரும் ஒன்றாகவே நாடு திரும்ப முடிவு செய்தோம்.

‘பணியைத் துறந்தோம்; பாஸ்போர்ட் பெற்றோம்; பயணச்சீட்டு வாங்கினோம்; புறப்பட்டு வந்தோம்’ என்றா இருக்கிறது நிலைமை? தடைக் கல்லாக இருக்கும் நடைமுறைகள் ஏராளம் அமீரகத்தில்! உமர்தம்பி, தொலை பேசித்துறை, மின்சாரத் துறை, குடிநீர்த் துறை, கணக்கு வைத்திருக்கும் வங்கிகள், தனது நிறுவனம் சார்ந்த குடியிருப்புத் துறை இவற்றில் ‘செலுத்த வேண்டிய பாக்கிகள் எதுவும் இல்லை’ என்று சான்றிதழ்கள் பெறவேண்டும். இவற்றைப் பெறுவதற்கு, இதுவரை உழைத்ததை விட அதிகமாக உழைக்கவேண்டி இருந்தது.

நாங்கள் வசித்து வந்தது நமக்குத் தெரிந்தவர்கள் இல்லாத பகுதி. அதனால் உமரும் நானும் பணியைத் துறந்துவிட்டு நாடு செல்வது யாருக்கும் தெரியாது! உமர்தம்பி, தொலை பேசித் துறைக்கு கணக்கை நேர் செய்வதற்காகச் சென்றார். அங்கே எங்களுக்கு வேண்டிய நண்பர் ஜாபர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடன் நாங்கள் முன்பு வசித்திருக்கிறோம். உமர் கணக்கை நேர் செய்வதற்காக வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அதிர்ச்சி யடைந்துவிட்டார். அதே வேளையில், அவர் தன் வேலையில் முனைப்பாக ஈடு பட்டிருந்தார். பிறகு தொலை பேசியில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு கணக்கை நேர் செய்துகொண்டு வீடு வந்துவிட்டார் உமர்.

மின்சாரத் துறை, குடிநீர்த் துறை அலுவலகங்களுக்குச் சென்று கணக்கை நேர் செய்துவிட்டு வந்தார். அதற்கான சான்றுகளையும் பெற்றார். அடுத்து வங்கிக் கணக்கை நேர் செய்யவேண்டும். இவருடைய வங்கிக்கணக்கு மஷ்ரக் வங்கியில் இருந்தது. முன்பு உமர் அபுதாபியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அபுதாபி கிளையில் கணக்குத் திறந்தார். பணம் எடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அமீரகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் ATM மூலம் பணம் பெற்றுக்குக் கொள்ளலாம். ஆனால் கணக்கை முடிக்க நேரில்தான் செல்லவேண்டும்.

இதற்காக நானும் உமரும் 12 ஆண்டுகளுக்குப் பின் அபுதாபி சென்றோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் எவ்வளவு மாற்றங்கள்? இந்த மாற்றங்களால் எவ்வளவு தடுமாற்றங்கள்? அவர் வசித்த இடங்கள் எப்படி மாறிப் போயிருந்தன! அமீரகமே ஒரு தனி ரகம்தான்! எங்கள் நினைவில் மங்கிப்போன இடங்களை மீண்டும் பார்த்துத் துலங்கச் செய்தோம். ஏனோ தெரியவில்லை உமருக்கு தாம் பணிசெய்த நிருவனத்தைப் பார்க்க மனமில்லை! மஷ்ரக் வங்கிக்குச் சென்றோம். இது பழைய ஒமான் வங்கி! மஷ்ரக் என்றால் விடியல் என்று பொருள்! ஆனால் எங்கள் பணி முடிய மஃரிப் (அந்தி) ஆகிவிட்டது! பணிபுரியும் இடத்தில் காலத்தின் அருமை தெரியாத எருமைகள் இருந்தால் பொறுமை காக்கத்தான் வேண்டும் போலிருக்கிறது! ஒருவாராக வேலையை முடித்துக்கொண்டு துபாய் வந்தோம்.

அடுத்து தனது நிறுவனம் சார்ந்த குடியிருப்புத் துறையிலிருந்து, ‘உமர் வீட்டை எந்தவிதமான பழுதுகளும் இல்லாமல் திருப்பித்தார்; அவர் வீட்டைக் காலி செய்வதில் எந்தவித மறுப்பும் இல்லை’ என்று பரிந்துரை பெற்றார். ஆனால் வீட்டிலிருந்த கட்டில், பீரோ போன்ற தளவாடச் சாமாங்களை என்ன செய்வதென்று புரியவில்லை. எப்போது பயணம் செய்வோம் என்பதற்கான திட்டம் முன்பே இருந்திருந்தால், பழைய பொருள்கள் (used goods) வாங்கும் வியாபாரிகளிடம் கொடுத்திருக்கலாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அங்கே இருந்த பணியாளர்களிடமே கொடுத்துவிட்டோம்!

உமர், அமீரகத்தில் தாம் எந்தத் துறைக்கும் பாக்கி வைக்கவில்லை; எல்லாவற்றையும் நேர் செய்துவிட்டார் என்பதற்கான சான்றுகளை தம் தலைமையகத்தில் சமர்ப்பித்தார். தனது பயணத் தேதி செப்டம்பர் 15 என்று சொன்னார். தலைமையகத்தில் ஒரு தேதியைக் குறிப்பிட்டு அந்தத் தேதியில் விசாவை ரத்து செய்வதற்காக வரச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன தேதியில் உமர் குடியுரிமைப் பிரிவு அலுவலகம் சென்று விசாவை ரத்து செய்துகொண்டார். நானும் விசாவை ரத்து செய்துவிட்டேன். எங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே இருந்த எல்லாக் கணக்குகளையும், உடன் பணி புரிந்தவர்களோடு இருந்த உறவு முறைக் கணக்குகளையும் நேர் செய்துகொண்டு, கனக்கும் இதயத்தோடு விடை பெற்றோம்.

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 10


உமர்தம்பியும் அவர் மனைவியும் எங்கள் சகோதரி மகன் அபுல் ஹசன் சாதலியும் துபாயிலிருந்து 13-09-1999 அன்று ஊர் புறப்பட்டு வந்தார்கள். அபுல்ஹசன் அவரது திருமணத்திற்காக ஊர் வருகிறார். உமர் தம்பியின் மனைவி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க வருகிறார். எனவே உடன் வரும் பொருள்கள் அதிகம் இருந்தன. அவற்றை அங்குமிங்கும் நகர்த்துவது கடினமாக இருந்தது. ஒருவாறாக அவர்களை நாங்கள் வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டோம்.

அவர்கள் பயணித்தது ஏர் இந்தியா ஜம்போ ஜெட் (Boeing 747) விமானம். அவர்கள் சென்னை வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கி ஊர் வர வேண்டும். உமர் ஏர்ப்போர்டிலிருந்து போன் செய்தார். பயணத்திற்கான எல்லா நடை முறைகளும் நல்லபடியாக முடிந்ததாகச் சொன்னார். அவர்கள் மூவரும் புறப்பட்ட செய்தியை வீட்டுக்குத் தொலை பேசி மூலம் தெரிவித்துவிட்டோம். அடுத்து நாங்கள் சென்னையிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அவர்கள் நலமாக வந்து சேர்ந்துவிட்டார்கள் என்ற நல்ல செய்தியை. எதிர்பர்த்திருந்தபடியே ஊர் வந்து சேர்ந்த செய்தியும் எங்களுக்குக் கிடைத்தது. அடுத்து நாங்கள் எங்கள் வழக்கமான பணிகளைத் தொடர்ந்தோம். நாட்கள் உருண்டோடின! ஒரு மாதத்திற்குப் பின் நான் கேள்விப்பட்ட செய்திதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

துபாய் விமான நிலையத்தில் பொருள்களை அனுப்பி வைத்துவிட்டு வழக்கமான எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு, அனுமதிச் சீட்டும் பெற்று அவரவர் இடத்தில் அமர்ந்துவிட்டார்கள். விமானத்தில் முதலில் எல்லாருக்கும் ஜூஸ் வழங்கினார்கள். 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தில் உணவு பரிமாறப்பட்டது. உமர் தேர்ந்தெடுத்தது வழக்கத்துக்கு மாறாக அசைவ உணவை! பொதுவாக அவர் சைவ உணவைத்தான் தேர்ந்தெடுப்பார். என்ன காரணமோ இந்த முறை அசைவத்துக்கு இசைந்து விட்டார். இதற்குப் பின் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும் என்று இறைவன் எழுதி வைத்திருக்கிறானே!

அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர் தொண்டையை ஏதோ அடைத்தது. எலும்புடன் கூடிய ஒரு கறித்துண்டு அவர் உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டது. அதை வெளியில் எடுக்க முடியவில்லை. தண்ணீர் குடித்துப் பார்த்தார்; நடந்து பார்த்தார்; வேறு சில முயற்சிகளும் செய்துபார்த்தார். எதற்கும் அந்த இறைச்சித் துண்டு அசையவில்லை. அசைவமல்லவா? தொண்டையிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. எங்கள் சகோதரி மகன் பயந்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலியும் வந்துவிட்டது’ விமானத்திலிருந்த மருத்துவரிடம் காட்டினார்கள். அவர் மாரடைப்பாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டார். அப்படியெல்லாம் தனக்கு இல்லை என்று உமரே சொன்னார், விமானப் பணியாளர்கள் பதறிப்போய் விட்டார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை.

பயணிகள் யாரும் தங்கள் இடத்தில் அமரவே இல்லை. எல்லாரும் உமரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பறந்து கொண்டிருந்த பறவைக் கப்பலே பரபரப்பாகக் காணப்பட்டது.

இந்த விமானத்தில் எங்கள் ஊரைச்சார்ந்த M.S.நிஜாமுதீன் என்பார் உமர்தம்பிக்கும் அவரது குடும்பத்துக்கும் மிகவும் உதவியாக இருந்திருக்கிறார். M.S.நிஜாமுதீன், இமாம் ஷாபி மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், ஜனாப் M.S.தாஜுதீன் அவர்களின் தம்பி ஆவார். இவரும் துபாயில் முக்கிய பதவியை வகிக்கிறார். M.S.தாஜுதீன் அவர்கள் உமரை முன்பே தெரிந்து வைத்திருந்தார். ஆனால் பேசிப் பழக்கமில்லை. நிஜாமுதீனும் அவ்வாறே! நிஜாமுதீனிடம் இருந்த அனுபவமும் சுறுசுறுப்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கை கொடுத்தன.

அவர் விமான அதிகாரிகளிடம் சென்று விமானத்தை துபைக்கே திருப்பிவிட முடியுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் “குறிப்பிட்ட எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தால் விமானத்தை துபைக்குத் திருப்பிவிடலாம். நீண்ட தூரம் கடந்து வந்துவிட்டோம்! இப்போது நாங்கள் அந்த எல்லையைத் தாண்டிவிட்டோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது. சென்னையை அடைகிற வரை நீங்கள் அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொளுங்கள். நாங்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறோம். சென்னை விமான நிலையத்திற்கும் தகவல் கொடுத்துவிடுகிறோம்” என்றார்கள்.

உமருடன் இருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்து, ஓரளவு சென்னையை நெருங்கி விட்டனர். சென்னை விமான நிலையத்திற்குத் தகவல் முன்பே தரப்பட்டுவிட்டது. விமானம் சென்னையை வந்து அடைந்தது. அப்போது நேரம் இரவு மணி ஒன்று! விமானப் பணியாளர்கள் சுங்க வேலைகளை ஒழுங்காக முடித்துக் கொடுத்தனர். உமரை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளி வந்து உறவினரிடம் ஒப்படைத்தனர். பெற்றோரை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மகன்கள், தந்தை இந்த நிலையில் வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். முகத்தில் இருந்த மகிழ்ச்சி எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது. மூத்த பையன் இந்த சோகத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டுதான் தன் பெற்றோர் நலமாக வந்து சேர்ந்தார்கள் என்று என்னிடம் போனில் சொல்லியிருந்திருக்கிறான்.

பொருள்கள் அதிகம் இருந்தன. சுங்க அதிகாரிகள் அவர்களை உடனே வெளியே அனுப்பிவிட்டதால் பணியின் பளு சற்றுக் குறைந்தது. உமர்தம்பியை அருகிலுள்ள வடபழனி மருத்துவ மனைக்கு ஏர் இந்தியா நிறுவனமே தன் வாகனத்தில் அனுப்பிவைத்தது. ஏர்போர்ட்டுக்கு வெளியே பொருள்களுடன் எங்கள் சகோதரி மகன் சாதலியும் உமரின் மனைவியும் காத்துக் கொண்டிருந்தனர்.

இரவு மணி 1:30 இருக்கும். உமர்தம்பியைக் கூட்டிக்கொண்டு வடபழனி சென்றார்கள். அங்கே ஒரு தனியார் மருத்துவமனையில் இரவில் நுழைய அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மற்றொரு மருத்துவ மனைக்குப் போயிருக்கிறார்கள். அங்கும் அதே பதில்! மருத்துவர் சொன்னார், ”சோதித்துப் பார்க்கக்கூடிய கருவி வசதிகள் எதுவும் எங்களிடம் இல்லை. அவர் நெஞ்சு வலிப்பதாகச் சொல்வதால், ஒரு ஊசியைப் போட்டு உறங்க வைத்துவிடலாம். மற்றவைகளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார். கூடச் சென்றவர்களும் சம்மதித்தனர்.

உமர் சற்று படுத்தார். அப்போதும் வலி இருந்தது. சிறிது நேரத்தில் உறக்கம் அவரை ஆட்கொண்டது! உறங்கிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென்று இருமல் வந்தது. வராமல் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அந்த கறித் துண்டு வாய் வழியாக வெளியில் வந்து விழுந்தது! இறைவனுக்கே எல்லாப்புகழும்! விடிந்ததும் மருத்துவ மனையிலிருந்து விடுபட்டு ஓட்டல் அறைக்குச் சென்றனர்.

அன்று மாலையே உமர்தம்பி அவர் மனைவி, மகன்கள் மற்றும் மருமகன் சாதலியும் சென்னையிலிருந்து புறப்பட்டு மறு நாள் காலையில் அதிரை வந்து சேர்ந்தார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 9


சர்க்கரை நிர்வாகம் பகுதி – 9


உமர் தம்பி துபையில் அல் குசைஸ் பகுதியில் வாழ்ந்தார். நானும் நாடு திரும்பும் வரை உமரோடு வாழ்ந்திருந்தேன். பிள்ளைகளுக்கு கல்வியில் உதவி செய்தல் என் போழுதுபோக்கானது. உமரின் பொழுதுபோக்கு என்னவாக இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உறவினர்களும் நண்பர்களும் அடிக்கடி வந்து போவர்கள். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். அமீரகத்தில் வாழ்ந்திருந்த நாட்களில் மறக்கமுடியாதவை அல் குசைஸ் வாழ்க்கை.

உமர்தம்பி 1983 –ல் துபாய் வந்தார். ஈராண்டுகளுக்குப் பின் விடுப்பில் நாடு திரும்பினார். அல்ஹம்துலில்லாஹ்! அப்போது நல்ல உடல் நலத்தோடு இருந்தார். இரண்டு மாத விடுமுறையை மகிழ்ச்சியோடு கழித்துவிட்டு துபாய் திரும்பினார். இப்போது அவர் உடலில் மாற்றத்தைப் பார்தேன். உடல் மெலிந்திருந்தார். விளக்கம் கேட்டபோது தனக்கு சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகச் சொன்னார். இப்போது உடலைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. உணவில் மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்தார். அடுத்தமுறை நாடு திரும்பியபோது சென்னையிலுள்ள நீரிழிவு நோய் மையத்தில் உமர்தம்பி மருத்துவம் பார்த்துக்கொண்டார். அப்போதெல்லாம் நோய் மாத்திரைகளுக்கு ஓரளவுக்குக் கட்டுப்பட்டது. ஒவ்வொரு விடுமுறையின் போதும் நீரிழிவு நோய் மையத்தில் உமர்தம்பி மருத்துவம் பார்த்துக்கொண்டார்.

இவ்வளவுக்குப் பின்னும் இனிப்பு அவர் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுத்தது. இணையம் அவரோடு ஒத்துழைத்தது; ஆனால், கணயம்?! இணையம் இன்சுவையைத் தந்த அளவுக்கு கணயம்இன்சுலினைத் தரவில்லியே! உமர், அலுவலக நிர்வாகம், கணினி நிர்வாகம், குடும்ப நிர்வாகம், சர்க்கரை நிர்வாகம் இவற்றைக் கவனித்து வந்தார். இவற்றுள் முதல் மூன்று நிர்வாகங்கள் அவர் கட்டுப்பாட்டில் இருந்தன. சர்க்கரை நிர்வாகம் அவர் கட்டுபாட்டுக்குள் வர மறுத்தது. இன்னும் சொல்லப்போனால் அதுதான் அவரை நிர்வகித்தது. ஒரு சர்க்காரை நிர்வகித்துவிடலாம் போலிருக்கிறது, சர்க்கரையை நிர்வகிப்பது மிகவும் கடினம். உமர் சர்க்கரை நிர்வாகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரத்தப் பரிசோதனை செய்துகொள்வார். உணவில் கட்டுப்பாட்டோடு இருப்பார். நடைப் பயிற்சிக்குப் பதிலாக வீட்டிலேயே உடற்பயிற்சி சாதனங்களை வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வார்.

சர்க்கரை நோய் பற்றி உமர் அறிந்து வைத்திருந்த அளவுக்கு வேறு சராசரி மனிதர்கள் யாரும் அறிந்து வைத்திருக்க வாய்பு குறைவு. அவர் எழுதிய கட்டுரைகளே அதற்குச் சான்று ( இனிப்பும் கசப்பும் (2003) http://thendral.blogspot.com ) அது ஒரு நோய் இல்லை என்றும் அது ஒரு குறைபாடு என்றும் சொல்வார். சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய ஆறுதல் வார்த்தைகளையும் அறிவுரைகளையும் கூறியிருக்கிறார். நான் உமரிடமிருந்துதான் அந்த நோயைப் பற்றி நிறையக் கேட்டுத் தெரிந்திருக்கிறேன். இனிப்பு ஒரு பாரம்பரிய நோய். கட்டுப்பாட்டுடன் அதற்கு குடியுரிமை கொடுக்கலாம்; அதிரடியாக நாடு கடத்திவிட முடியாது. இனிப்பு நோய், நோய்களின் தாய். இனிப்பு கூடிவிட்டால் கிளை நோய்களை ஏற்படுத்தும். குறைந்துவிட்டால் உடனே சாய்த்துவிடும். பல முறை இனிப்பு கூடி அவதிப் பட்டிருக்கிறார் உமர்.

இனிப்பு குறைந்துவிட்டு அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், சுய நினைவை இழக்கும் நிலைக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். எங்கள் சகோதரி இரண்டு மூன்று முறை இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார். அந்த நேரத்தில் உமர் சுறுசுறுப்பாக இயங்கி, நீரில் சர்க்கரையைக் கரைத்துக் கொடுப்பார். சுய உணர்வு திரும்பிவிடும். குடியைக்கெடுக்கும் சர்க்கரைதான் குடிக்கக் கொடுத்தவுடன் உயிரைக் கொடுக்கிறது! அப்படிப்பட்ட நிலைமைக்கு உமரும் சிலமுறை ஆளாகியிருக்கிறார். ஒரு முறை துபாயில் விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்தபோது; மற்றொரு முறை உறவினருக்காக சென்னை மருத்துவ மனையில் இரவு தங்கியிருந்தபோது; பிறிதொரு முறை ஊரில், மாலையில் நடைப்பயிற்சி செய்யும்போது.

சம்பள உயர்வு கேட்டு ஒற்றைக் காலில் நிற்பான் தொழிலாளி. கவனிக்காவல் காலத்தைத் தள்ளிப்போடும் முதலாளியோ, ஒரு சர்க்கரை நோயாளி. ஒரு நெருக்கடியான கட்டத்தில் அவருக்கு சர்க்கரை குறைந்துவிட்டால் “ஒரு மிட்டாய் இருந்தால் கொடேன்” என்று அந்தத் தொழிலாளியையே பார்த்துக் கேட்கும் பரிதாப நிலை ஏற்பட்டுவிடும். அவர் கேட்டது இன்க்ரீமென்ட்; இவர் கேட்டது பெப்பெர்மென்ட். அப்படிப்பட்ட வினோத நிகழ்வுகள் உண்மையில் நடந்திருக்கின்றன. அந்த அளவுக்கு நிலைமையைத் தலை கீழாக மாற்றிவிடும் இந்த நோய்! தள்ளிப்போட முடியுமா மிட்டாய் காலத்தை? சென்னையிலுள்ள நீரிழிவு நோய் மையத்தில் உமர்தம்பி, விடுமுறையில் போகும்போதும் சரி, இந்தியாவில் நிரந்தரமாக தங்கிய பிறகும் சரி வைத்தியம் பெற்றிருக்கிறார்.

இன்சுலின் போடும் அளவுக்கு அவருக்கு சர்க்கரை கூடியிருந்தது. அங்கே அவர் வைத்தியம் பெற்றதைவிட, சர்க்கரை நோயைப்பற்றி அறிந்து கொண்டதுதான் அதிகம். மருத்துவர்களோடு அந்த நோய்க்கே உரிய கலைச் சொற்களைப் பயன் படுத்தித்தான் பேசுவார். தான் அறிந்த தகவல்களை மருத்துவர்களுக்குச் சொல்வார். இந்த நேரத்தில் உமரின் இனிப்பு நோய் உச்ச கட்டத்தில் இருந்தது. பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளானார். அமீரகம் வந்து ஆண்டுகள் பதினெட்டு உருண்டோடிவிட்டன. I.M.D. இலிருந்து ஓமான் நேஷனல் திரும்பி வந்த பிறகு அங்கே நிர்வாகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் உமர் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட முடிவு செய்தார். பிள்ளைகள் முன்பே ஊருக்குக்கு சென்று இந்தியாவில் தங்கிவிட்டார்கள். பிள்ளைகளும் படிப்பைத் தாயகத்தில் தொடர ஆரம்பித்து விட்டர்கள் மூத்த பையன் புதுக் கல்லூரியில் முதுகலை வகுப்பில் படித்துவந்தான். இரண்டாவது பையன் கொடைக்கானலில் படித்துக்கொண்டிருந்தான்.உமர்தம்பி தன் மனைவியுடன் ஊர் புறப்பட்டுச் சென்றார். இந்த முறை அவரிடம் வீட்டுத் தளவாடங்களும் மற்ற பொருள்களும் அதிகம் இருந்தன. சென்னை வழியாகச்சென்றார். மகன்களை சென்னை வரும்படிச் சொல்லியிருந்தார். அடுத்த நாள் காலை சென்னையிலிருந்து போன் வந்தது. பெற்றோர் நலமாக வந்து சேர்ந்ததாக மூத்த மகன் சொன்னான். நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.

இதே போல்தான் ஒருமுறை உமரை ஏர்லங்கா விமானத்தில் கொளும்பு வழியாக திருச்சி அனுப்பியிருந்தோம். மறுநாள் காலை தொலை பேசிக்காகக் காத்திருந்தோம். தகவல் இல்லை. சிறிது நேரத்தில், திருச்சியிலிருந்து S.K.M.H. போன் செய்திருந்தார். விமானம் வந்துவிட்டது. ஆள் வரவில்லை என்று! நாங்கள் குழம்பிப்போனோம். துபாய் ஏர்லங்கா அலுவலகத்துக்கு போன் செய்து கேட்டோம். அவர்கள் “இதுவரை எல்லாரும் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார்களே, எங்களுக்கு எல்லாம் இயல்பாகத்தானே இருக்கிறது. எந்தத் தகவலும் வரவில்லையே” என்றார்கள்.

இதற்கிடையில் ஊரிலிருந்து திருச்சி வந்தவர்கள் திரும்பி ஊர் போய்விட்டார்கள்.பிறகு ஊரிலிருந்து எங்களுக்கு போன் வந்தது. “துபாய் - கொளும்பு விமானம் தாமதமானதால் திருச்சி விமானத் தொடர்பு கிடைக்கவில்லை. கொளும்பில் தங்க இடம் கொடுத்திருக்கிறார்கள். மறுநாள் காலை வருவார்” என்று. இந்தத் தகவலை உமர் கொளும்பிலிருந்து போன் மூலம் தெரிவித்திருக்கிறார். இப்படிப்பட்ட எந்த அசம்பாவிதமும் சென்னையில் நடக்காமல் இருந்ததே என்று நான் நிம்மதியுடன் இருந்தேன். ஒரு மாதத்திற்குப் பின் நான் கேள்விப்பட்ட செய்திதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொடரும்...

powered by Blogger