வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 8

பகுதி – 8 (பத்திரிகை, தொலைக் காட்சி)


உமர்தம்பிக்கு சிறு வயதிலேயே பத்திரிகை படிக்கும் பழக்கம் வந்துவிட்டது.. நான் கல்கண்டு வாரப் பத்திரிகை வாங்கிப் படிக்கும்போது, அவரும் மர்மக் கதைத் தொடருக்காக கல்கண்டு படிப்பார். வாசிப்புத் திறன் வளர்ந்தவுடன் கேள்வி பதில், அரசியல் கட்டுரைகள், அறிவுக் கட்டுரைகள் முதலியன வாசிக்க ஆரம்பித்தார். நான் வாங்குவதற்கு முன்பே கடையில் போய் வாங்கிவிடுவார். தமிழ்வாணனுக்குப் பின் கல்கண்டின் இனிப்பு கரைந்துவிட்டது. அதைப் படிப்பதையும் நிறுத்திக்கொண்டார்.


துக்ளக் பத்திரிகை வெளிவந்த புதிதில் பரபரப்பாக விற்றுக் கொண்டிருந்தது. சோவுடைய கேள்வி பதில்களும், தலையங்கமும், வேடிக்கையான அரசியல் கட்டுரைகளும், மருத்துவரின் கட்டுரைகளும் சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதைத் தவறாமல் வாங்கிப் படிப்பார். பட்டுக்கோட்டைக்கு பஸ்சில் போகவர இருக்கும்போது, பஸ்ஸிலேயே துக்ளக்கைப் படித்து முடித்துவிடுவார் தமிழில் ‘இந்தியா டுடே’ நடு நிலை நழுவாமல் வந்துகொண்டிருந்தது. அந்தப் பத்திரிகையையும் படித்தார்.


எலக்ட்ரானிக் தொடர்பான பத்திரிகைகள் அஞ்சலில் வந்துகொண்டிருந்தன. தமிழ்க் கம்ப்யூட்டர், ELECTRONICS FOR YOU, P.C. MAGAZINE ஆகிய பத்திரிகைகளை சந்தா கட்டி வரவழைத்தார். அவற்றை விரும்பிப் படித்தார். அவற்றிலிருந்து புதுப்புது கண்டு பிடிப்புகளைப் பற்றி அறிந்துகொண்டார். அவற்றை தன் தொழிலில் கையாண்டார். கணினி, எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார்.


செய்தித்தாள்களில் இந்து மட்டும் படிப்பார். குமுதத்தில் வந்துகொண்டிருந்த சுஜாதாவின் கதைகளை விரும்பிப்படிப்பார். சுஜாதாவின் அறிவியல் தொடர்பான கதைகள் உமருக்குப் பிடிக்கும். செம்மொழி மாநாட்டில், சமீபத்தில் வாழ்ந்து இறந்துபோன ஐவர் பெயர்கள் இணையத் தமிழ் அரங்கங்களுக்கு வைக்கப்பட்டன. ஐவருள் இருவர், உமரும் சுஜாதாவும். பாக்யம் ராமஸ்வாமியின் அப்புஸ்வாமி கதைகள், ரா. கி. ரங்கராஜனின் மொழிபெயர்ப்புக் கதைகள் உமருக்குப் பிடிக்கும். உமருக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளர் அருணாச்சலம் என்பவர். இவர் எலக்ட்ரானிக் தொடர்பான புத்தகங்கள் நிறைய எழுதியிருக்கிறார். அதற்காக அவர் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவருடைய எழுத்துக்களால்தான் உமர்தம்பி, தன் அறிவியல் அறிவை நன்கு வளர்த்துக்கொண்டார். அருணாச்சலத்தினுடைய “ஓம்ஸ்ரேடியோஸ்” என்ற நிறுவனத்தில்தான் உமரும் அவர் நண்பர்களும் எலக்ட்ரானிக் பட்டயப் படிப்புப் படித்தார்கள்.


உமர்தம்பி துபை வந்த பிறகு கல்ஃப் நியூஸ், கலீஜ் டைம்ஸ் என்ற இரு செய்தித்தாள்களை வாசிக்கும் வழக்கம் இருந்தது. துபாயில் சமுதாயப் பத்திரிகைகளை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அவர்களிடம் ஒற்றுமை உணர்வு இல்லாததால் அவற்றைப் படிப்பதையும் விட்டுவிட்டார்.


உமருக்கு அரசியல் மேடைகள் பிடிக்காது. நடு நிலை அரசியல் விமரிசனங்களைப் படிக்கும் உமருக்கு அரசியல் வாதிகளின் பொய்யுரைகள் வெறுப்பைத் தரும். பட்டி மன்றங்கள் திட்டமிட்ட நாடகங்கள் என்று உணர்ந்து அவற்றை ஒதுக்கினார். இலக்கியப் பேச்சாளர்களில் இறையருள் கவிமணியை விரும்பினார். இறையருட் கவிமணி, கவிக்கோ, வைரமுத்து, மு.மேத்தா ஆகியோரின் கவிதைகளும் கவியரங்க மேடைகளும் உமருக்குப் பிடிக்கும்.


தொலைக் காட்சிகள் மூலம் தனது அறிவை வளர்த்துக்கொண்டார். உமருக்கு STAR TV., B.B.C., C.N.N., NDTV., DISCOVERY CHANNEL ஆகியன தீனி போட்டன. ZEE TV யில் ‘ஆப் கி அதாலத்’ என்ற நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பார். அந் நிகழ்ச்சியில் பிரபலங்களை அழைத்துவந்து அமர வைத்து, அவர்கள் பதில் சொல்லத் திணறக்கூடிய வினாக்களைத் தொடுப்பார் நிகழ்ச்சியாளர். அவர்களின் திணறல் அல்லது பதில் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவையாக இருக்கும். B.B.C. யில் அவர் விரும்பிக் பார்ப்பது HARD TALK. பெயரோடும் புகழோடும் இருப்பவர்களிடம் தொடுக்கப்படும் கேள்விக் கணைகள் அவை. ஆழமான, அழகான நிகழ்ச்சி அது.


இது தவிர இரண்டு உலகப் போர்களில் கலந்துகொண்ட பிரிட்டிஷ், ஜெர்மானிய, ஜப்பானிய வீரர்களின் அனுபவங்களைக் கேட்பார். விமானம், கப்பல் விபத்துக்கள், அதற்கான காரணங்கள், சாகச நிகழ்ச்சிகள் இவற்றை கவனத்தோடும் ஆர்வத்தோடும் பார்ப்பார். NDTVயில் பிரணாய் ராயின் BIG FIGHT, WALK THE TALK, அரசியல் மற்றும் பொது விவாதங்களைக் கேட்பார். ஸ்டார் டிவியில் That’s incredible , Believe It or Not மற்றும் National Geographic Channel- இல் ஒளிபரப்பாகும் “AIR CRASH INVESTIGATION” நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பார்.


சன் டி.வி. யில் மருத்துவர்களுடைய பேட்டிகள், வணக்கம் தமிழத்தில் வரும் பிரபலங்களின் சந்திப்பு, நேருக்கு நேர் ஆகியன உமர் விரும்பும் நிகழ்ச்சிகள். ஷார்ஜா டி.வி.யில் அபூ ஆமினாவின் பேச்சுக்களைக் கவனிப்பார் . ஜாகிர் நாயக், மற்றும் பிரபல இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொள்ளும் உரையாடல்களைக் கூர்ந்து கேட்பார்.


அகமது தீதாது உடைய பேச்சுக்கள் என்றால் உமருக்கு உயிர். அகமத் தீதாத் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர். தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர். எல்லா மதங்களைப் பற்றியும் கற்றுணர்ந்த அறிஞர். பிற மத அறிஞர்களோடு விவாதங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து வீட்டில் போட்டுப்பார்ப்பார். அகமது தீதாது ஒரு முறை துபாய் வந்திருந்தார். அவருடைய அருமையான பேச்சைக் கேட்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது. அதோடு அவரைச் சந்தித்துக் கை கொடுக்கும் பேறும் பெற்றோம்.


அவர் சொன்ன ஒரு செய்தியை மறக்கமுடியாது. “தீதாத் ‘அல் இஸ்லா’ சங்கத்திற்குப் பேச வருகிறார்” என்ற செய்தியை விளம்பரம் போட கலீஜ் டைம்ஸில் மறுத்துவிட்டார்கள். இதை தீதாத் வருத்தத்தோடு குறிப்பிட்டுச் சொன்னார். “அடுத்த முறை அந்தப் பத்திரிகை என்னுடைய விளம்பரத்தைப் போடாத வரை நான் துபாய்க்கு வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். தீதாத் மீண்டும் துபாய் வரவே இல்லை. சில மாதங்களில் சவூதி மருத்துவ மனையில் இறந்து போனார். அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் ஜாயித், அகமது தீதாதுக்கு பக்க பலமாக இருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது. அமீரகம் வந்தால் அதிபர் ஜாயிதைப் பார்க்காமல் போகமாட்டார் அஹமது தீதாத்.


ஜாகிர் நாயக்கின் வருகை ஓரளவுக்கு அகமது தீதாதின் இழப்பை ஈடு செய்தது. ஜாகிர், தீதாதின் வாரிசாகவே திகழ்கிறார். தீதாத், ஜாகிரை தீதாத் பிளஸ் என்றே வர்ணித்திருக்கிறார். உமர் ஜாகிர் நாயக்கின் வீடியோ கேசட்டுகளைப் போட்டுப் பார்ப்பார். ஜாகிர் நாய்க்தலைமையிலான டிரஸ்ட் PEACE TV என்ற தனி இஸ்லாமிக் தொலைகாட்சி சேனலை நடத்தி வருகிறது. அறிவியல் சார்ந்த இஸ்லாமிய உலக அறிவை விரிவாகப் பெறத் துடித்துக் கொண்டிருந்த உமர் இன்று இருந்திருந்தால் இந்தச் சேனலில்தான் மூழ்கி இருப்பார்.


தொடரும்...

1 Response to "வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 8"

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தினருக்கும்
    எங்களுடைய
    மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

powered by Blogger