வா.. வரையும் மடலோவியம்,

அன்புள்ள ஜாகிர் ஹுசைன்:

வா.. வரையும் மடலோவியம்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னைப்பற்றிய உங்களுடைய கட்டுரையைப்படித்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கட்டுரையைத் தொடர்ந்து என் பழைய மாணவர்கள் எழுதிய கடிதங்களைப் படித்து நெகிழ்ந்து போனேன். நினைவுக்காற்று பக்கங்களைப் புரட்டியது. வகுப்பறையும் அதில் அமர்ந்திருந்த கபடமற்ற முகங்களும்
நினைவில் நிழலாடின.

ஓவிய ஆசிரியர் என்றும், பட்டதாரி ஆசிரியர் என்றும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் என்றும் பரிமாணங்களை மாற்றிக்கொடிருந்த நான் எத்தனை வகையான முகங்களைப் பார்த்திருப்பேன்! இந்த அருமையான முகங்களைப் பார்க்க முடியாமல் பத்தொன்பது ஆண்டு கால அயல்நாட்டு வாழ்க்கை என்னும் கருந்திரை என் கண்களை மறைத்துவிட்டது!
இப்போது திரை மெல்ல விலகத் துவங்கி இருக்கிறது!

+2 வகுப்பு பிரிவு உபசார விழா நடந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்று எழுதி இருந்தீர்கள்!

இப்போது நினைத்துப்பர்க்கும்போது முப்பது நிமிடத்துக்கு முன்னால் நடந்தது போன்று உணர்கிறேன்.

விழாவில் பேசினேன்; "மாணவர்களே, நீங்கள் மாவீரன் நெப்போலியனுக்கு நிகரானவர்கள்! குதிரையில் போகும்போதே அவர் 5 நிமிடம் தூங்குகிர மாதிரி, பாடம் கேட்டுக்கொண்டே குட்டித் தூக்கம் போடுவதில் நெப்போலியனை வென்றவர்கள்!"

மேலும் பேசினேன்: "கணவனை அலுவலகத்துக்கு வழி அனுப்பி வைக்கும் சென்னை குடும்பத்தலைவி ‘பல்லவன் வருவான், பார்த்துப்போங்கள்' என்று சொல்வதைப்போல தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பிவைக்கும் அதிரை அம்மா 'பைக்கு'கள் வரும் பார்த்துப்போப்பா ' என்று சொல்வதைப்போல, மாணவர்களே! நானும் உங்களுக்கு சொல்லி வைக்கிறேன்: 'தேர்வு கடினமாக இருக்கும்; பார்த்து எழுதுங்கள்! "இப்படி இணைய தளத்தில் எழுதுவதற்கு என்னைத் தூண்டிவிட்டது எம் தம்பி எம்.பி . அஹமது ! அதில் தீப்பொறியைத் தூக்கிப் போட்டவர் ஜாகிர் ஹுசைன்!

என் ஒன்று விட்ட சகோதரர் ஹாஜா முஹைதீன்தீன் சார் போல மாணவர்கள் உள்ளத்தை கொள்ளையடிக்க முடியவில்லை! காரணம் நாங்கள் தேர்ந்தெடுத்த பாடங்கள் அப்படி! சித்திரமும் சரித்திரமும் மாணவர்களைக்கவர முடியுமா? விசித்திரம்தான்!

மறக்க முடியாத நிகழ்ச்சிகள்! பல! அவற்றில் ஒன்று மாநில அளவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள 'ஆட்டை' கூட்டிக்கொண்டு மூன்று பேர்கள் (நான், ஹாஜா முஹைதீன் சார், உமர்தம்பி ) சென்னை சென்றோம். ஆடு நூறு மீட்டர் ஓடுவதற்கு நாங்கள் மூவரும் பல கிலோ மீட்டர் பயணித்து நேரு ஸ்டேடியம் அடைந்தோம், அங்கு ஆட்டைக் காணோம்! மண்ணடிக்குள் ஓடி ஒளிந்து கொண்டது! ஆடு கிடைக்காமல் போகவே, போட்டி நிகழும் இடத்திற்கு வந்தோம். போட்டி நடந்தபோதுதான் ஆட்டை நாங்கள் பார்க்க முடிந்தது! தேடு தேடு என்று தேடியும் கிடைத்தது என்னவோ 'தேர்டு' பிளேஸ்தான்! முதலாவதாக வந்து குதிரையாக வேண்டியது, ஆடாகவே இருந்துவிட்டது!

நான் ஆடு என்று குறிப்பிட்டது வேறு யாரையும் அல்ல! எங்கள் மனதை விட்டு ஓடிவிடாத, பள்ளிக்குப்பெரும் புகழைச்சேர்த்துத்தந்த பிரபல மாணவர் ஜனாப் ஜபருல்லாவைத்தான்!

இப்படி எவ்வளவோ சுவையான நிகழ்வுகள்! எல்லாம் வல்ல இறைவன் நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தந்தால், கருத்துக்களைப்பரிமாரிக்கொண்டே இருக்கலாம். அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!

வஸ்ஸலாம்,

என் கம்ப்யூட்டர் இன்று போய் நாளை வா.. என்று சொல்லிவிட்டது!

- உமர்தம்பிஅண்ணன்

0 Response to "வா.. வரையும் மடலோவியம்,"

powered by Blogger