அதிராம்பட்டினமும் ஆங்கிலக் கல்வியும்

உயர் வகுப்பாரும் வசதி படைத்தவர்களும் படிக்கவேண்டும் என்பதற் காக கொண்டு வரப்பட்ட கல்வித் திட்டம்தான் மெட்ரிகுலேஷன், C.B.S.E. இதில் பெற்றோர் பிள்ளைகளைச் சேர்ப்பதன் முக்கிய நோக்கம் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக. அப்படிப் பேசுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. அப்படிப்பட்ட பயிற்சி தரப்படும் அறிகுறியுமில்லை.


நம்முடைய ஆங்கிலப் பள்ளிகளில் L.K.G., U.K.G. நடத்தும் ஆசிரியைகள், வேறு வேலை கிடைக்கும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை இந்த வேலையில் இருக்கலாம் என்ற அடிப்படையில் தான் பணி புரிகிறார்கள். அவர்கள் ஆங்கில வழிக்கல்வி கற்றவர்களுமல்லர், பயிற்சி பெற்றவர்களும் அல்லர்.


நம்மூரில் ஆங்கிலப்பள்ளி தோன்றி முப்பத் தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன, அதன் பின் பல பள்ளிகள் தோன்றின. இங்கு ஆங்கிலத்தைக் காண முடியவில்லை. இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நகரங்களிலும் வெளிநாடுகளிலும் பள்ளிகளில் இடம் கிடைப்பதில்லை. துவக்கத்திலிருந்தே மாணவர் ஆசிரியர் தரத்திற்கேற்ப எளிய புத்தகங்களை வைத்து தரத்தை படிப்படியாக உயர்த்தி இருக்கவேண்டும்.


நம்மூர் ஆங்கிலப் பள்ளி மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் நம்மைப் பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள். அந்த அளவுக்கு ஆங்கிலம் இங்கிலாந்து தூரம். பெற்றோர் கனவு நனவாவது எப்போது? போதாததற்குத் தமிழையுமல்லவா தொலைத்துவிடுகிறார்கள்.


பெற்றோர் என்ன நோக்கத்திற்காக அப்பள்ளிகளில் சேர்த்தார்களோ, அந்த நோக்கம், அதாவது சரளமாக ஆங்கிலம் பேசுவது வந்துவிட்டால் அப்பள்ளியின் வேறு குறைபாடுகளை மறந்துவிட வாய்ப்பு உண்டு.


சமச்சீர் கல்விப் புத்தகங்கள் வந்தபின் மற்ற சாதாரண பள்ளிககளோடு ஒப்பிடும்போது மெட்ரிக் பள்ளிகளின் தரம் தாழ்ந்து காணப்படுமோ எனத்தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றன.
எது எப்படியோ வாங்கும் பணத்திற்கு ஆங்கிலம் தந்தால் சரி!

உமர்தம்பிஅண்ணன்

1 Response to "அதிராம்பட்டினமும் ஆங்கிலக் கல்வியும்"

  1. Hi thanks for posting thiis

powered by Blogger