இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ

இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ

“இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.” என்ற தலைப்பில் திரு த.அரவிந்தன் தினமணி (20-05-2011) நாளிதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அக்கட்டுரையின் செய்தி சிதறா வண்ணம் சுருக்கிக் கீழே தரப்பட்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி வேட்பாளர் திரு க.பீம்ராவ்தான் அந்த எம்.எல்.ஏ. மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொதுத் தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். “எம்.எல்.ஏ. என்பது பதவி அல்ல; பொறுப்பு” என்கிறார்.
க.பீம்ராவ் மிக எளிமையானவர். ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீட்டில்தான் வசிக்கிறார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் எதுவும் இல்லை. மனைவி விரும்பி வாங்கி வைத்த இலவசத் தொலைக் காட்சிப் பெட்டி மட்டும்தான்!
கட்சியின் முழு நேர ஊழியராக இருப்பதால் மாதம் மூவாயிரம் ரூபாயில்தான் குடும்பம் நடத்தவேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டால் வேறு தொழில் செய்யக் கூடாதது. இவருக்கு உடுத்துவதற்குக் கூட சரியான உடை கிடையாது. ஆட்டோ ஓட்டுனர் சங்கம் இவருக்கு பேண்ட்டும் சட்டைகளும் எடுத்துக் கொடுத்துள்ளனர். பல தோழர்களும் உதவி செய்கிறார்கள்.
இவருக்கு மூன்று குழந்தைகள். இவர்களின் கல்விச் செலவுகளை உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள். எம்.எல்.ஏ. சம்பளம் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுதான் இல்லை. சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று விடுகிறது! வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாய்தான் அவருக்குக் கிடைக்கிறது! இதனால் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்கிறார். நாம் 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில்தான் வாழ்கிறோமா?
எம்.எல்.ஏ. பீம்ராவ் பற்றிய திரு த.அரவிந்தன் கட்டுரைக்கு 109 கருத்துரைகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்திருக்கின்றன. அனைவரும் அவரை வாயார, மனமார, வானளாவ வாழ்த்தி இருக்கிறார்கள். ஒரு வாசகர் ‘234 M.L.A. -ல் ஒருவர்தானா நல்லவர்? அட, கடவுளே!!!’ என்று வியந்திருக்கிறார். உங்கள் கருத்துரை என்னவோ?
வாவன்னா

1 Response to "இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ"

  1. இது போல் எம் எல் ஏ வேண்டும் என்றால் நாம் பதவிஏற்றால்தான் உண்டு...இப்படி நல்லவர்களெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டார்கள்.

powered by Blogger